பாடசாலை வளாகத்துக்குள் அல்லது அதனை அடுத்துள்ள பகுதிகளில் போதைப்பொருள் சம்பவங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவிப்பதற்கு வசதியாக அவசரதொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொலைபேசி இலக்கம் 0777128128 என்பதாகும். பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையிலும் தவறான புரிந்துணர்வின் அடிப்படையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மீட்டெடுப்பதுடன் பாடசாலை சுற்றாடல் கல்விக்கேற்ற சிறந்த பாதுகாப்பு பகுதியாக மேம்படுத்தும் நோக்கில் 'பாதுகாப்பான நாளை' என்ற விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டள்ளது. பொலிஸ் திணைக்களமும் அபாயகரமான ஒளடதங்களை கட்டுப்படுத்தும் தேசிய அதிகாரசபையும் கல்வியமைச்சும் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளன. இதுதொடர்பான அஙகுரார்ப்பண நிகழ்வு நேற்று முன்னதினம் (18) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இதற்கமைவாக பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் பாடசாலை தோறும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாடசாலை மாணவர்களிடையிலேயே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. விசேடமாக மேல் மாகாணத்தின் 49 பாடசாலைகளை இலக்கு வைத்து, 'பாதுகாப்பான நாளை' எனும் தொனிப்பொருளில் இந்த விசேட வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் என். எம்.எம் சித்ரானந்த, கல்வியமைச்சின் மேலதிகச் செயலாளர் எச்.யூ பிரேமதிலக்க, பாடசாலைகளுக்கான சுகாதார மற்றும் போஷணைப் பணிப்பாளர் ரேனுக்கா பீரிஸ், மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அரசாங்க தகவல் திணைக்களம்

