திடீர் விஜயங்களை மேற்கொள்ளும் மேல் மாகாண ஆளுநர்

Rihmy Hakeem
By -
0
பாணந்துறை புதிய வர்த்தக கட்டடத் தொகுதியை நிர்மாணிக்கும் அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேல் மாகாண ஆளுநர் ​ெடாக்டர் சீதா அரம்பேபொலவின் தலையீட்டினால் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மேல் மாகாண ஆளுநர் பாணந்துறை பிரதேசத்திற்கு கடந்த ஜனவரி ஏழாம் திகதி மேற்கொண்ட திடீர் கண்காணிப்பு விஜயத்தின் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாணந்துறை விவாதம்(பாணதுரா வாதய)இடம்பெற்ற இடத்தைப் பார்வையிட்டதுடன், பாணந்துறை நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தைக்கும் விஜயம் செய்து அங்கு வர்த்தகம் செய்யும் வியாபாரிகளை நேரில் சந்தித்து குறைபாடுகளை கேட்டறிந்தார்.
பொதுச் சந்தையைப் பார்வையிட்ட ஆளுநர், சந்தைக் கட்டடத் தொகுதியின் அவல நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். பழைய சந்தை கட்டடத் தொகுதி மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் இதற்குப் பதிலாக புதிய வர்த்தக கட்டடத் தொகுதியொன்று அமைக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்ட மேல் மாகாண ஆளுநர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கடந்த 27ஆம் திகதி பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனைக்கு வரவழைத்து விஷேட பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
பாணந்துறை நகர சபைத் தலைவர் நந்தன குணதிலக்க,பிரதேச சபைத் தலைவர் ஹேமந்த் பெர்னாண்டோ, பாணந்துறை வர்த்தக சங்கத் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் மேல் மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் காணப்படும் சிக்கல் பற்றியும் அதற்காக மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் மேற்படி பேச்சுவார்த்தையின் போது ஆராயப்பட்டதுடன் புதிய வர்த்தக கட்டடத் தொகுதியின் நிர்மாணத்துக்கு அவசியமான ஆரம்ப நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு ஆளுநர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பல வருட காலமாக முறையான தீர்வின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பாணந்துறை புதிய வர்த்தகத் தொகுதி பிரச்சினைக்கு மேல் மாகாண ஆளுநரின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக புதிய வர்த்தக தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேல் மாகாணத்துக்கான முதலாவது பெண் ஆளுநரான விஷேட வைத்திய நிபுணர் ​ெடாக்டர் சீதா அரம்பேபொல ஆளுநராகப் பதவியேற்றது முதல் துரிதமான பணிகளை முன்னெடுத்து வருகிறார். சுறுசுறுப்பான ஆளுமை கொண்ட ஆளுநராக அவர் செயற்பட்டு வருகிறார்.
மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் வெளிக்கள மற்றும் திடீர் அவதானிப்பு விஜயங்களை மேற்கொண்டு குறிப்பிட தரப்பினரை சந்தித்து நேரடி தகவல்களை பெற்றுக் கொள்வதில் இவர் ஆர்வம் கொண்டவராக விளங்குகிறார். மேல் மாகாணத்தில் களுத்துறை,கம்பஹா,கொழும்பு மாவட்டங்களில் பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர், இந்த நிகழ்வுகளில் அதிகமான நேரங்களைச் செலவிடாது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடித்து வருகின்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகம்,முகாமைத்துவம் உள்ளிட்ட கொள்கைகளுக்கு ஏற்புடையதாக மேல் மாகாண ஆளுநரின் நிர்வாக ,முகாமைத்துவ செயற்பாடுகள் அமைந்துள்ளதாக பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேல் மாகாண மக்களின் அடிப்படை வசதிகளை முறையாக பெற்றுக் கொடுப்பதில் கரிசனையுடன் செயல்படும் இவர், மாகாண உள்ளூராட்சி மன்றங்கள்,மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள்,அதிகாரிகளுடன் ஆளுநர் பணிமனையில் அடிக்கடி கலந்துரையாடல்கள்,சந்திப்புகள் நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.
எம்.எஸ்.எம்.முன்தஸிர்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)