“புலனாய்வுப் பிரிவின் தகவல்” என போலியான குரல் பதிவொன்றினை சமூக வலைதளங்களில் பரப்பிய நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்புவதாக தமது பிரதான உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக குறிப்பிட்டு ஒலிப்பதிவொன்றினை வெளியிட்டு, தான் ஒரு புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் என்றும் மேற்படி நபர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
எனினும் குறித்த நபர் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் இல்லையென பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த ஒலி நாடாவை வெளியிட்ட மற்றும் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சூப்பர் மார்க்கெட்களுக்கு செல்லும் முஸ்லிம்கள் அங்குள்ள பொருட்கள் மீது எச்சில் துப்புவதாகவும், அதனை நிரூபிக்க வீடியோ காட்சிகள் தம்மிடம் உள்ளதாகவும் குறித்த நபர் குறித்த அந்த ஒலிப்பதிவில் தெரிவித்திருந்தார்.
எனினும் அவை வெறும் வதந்தி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பொலிஸார்,
"இந்நாட்களில் சொகுசுக் கடைகள் எதுவும் திறக்கவில்லை. அதனால் முஸ்லிம்கள் மட்டுமின்றி எவருக்கும் கடைகளுக்கு செல்ல முடியாது. இது இனங்களுக்கு இடையிலான துவேஷ உணர்வை வளர்க்க வரையப்பட்ட ஒரு கதை.
அதனை நம்புவதற்காக வீடியோ உள்ளதாக மேலும் ஒரு கதையையும் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம். புத்திசாலித்தனமாக சிந்தித்தால் இது பகிரப்பட்டிருக்காது.
ஏதும் செய்திகள் கிடைத்தால் உண்மையா பொய்யா என உணர்வுபூர்வமாக சிந்தியுங்கள்" எனத் தெரிவித்திருந்தனர்.
நன்றி : Rizmira