இசைக் குரலால் உலகை வென்ற உன்னத ஆளுமை நாஹூர் EM ஹனிபா

Rihmy Hakeem
By -
0


உலக முஸ்லிம் கலைப்பண்பாட்டில் பல கவிஞர்களும் பாடகர்களும் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர், அந்தவகையில் தமிழ் பேசும் உலகில் மறக்க முடியாத நாமமே நாஹூர் EM ஹனிபா அவர்களாகும் அவர் பற்றிய நினைவுப் பதிவே இதுவாகும்.

பிறப்பு

ஹனிபா அவர்கள் 1925:12:25 அன்று தமிழ் நாட்டின் நாஹூரில் உள்ள  நாகப்பட்டினத்தில் பிறந்தார்கள்,இஸ்மாயில் முஹம்மத் ஹனிபா என்ற இயற் பெயரைக் கொண்டிருந்தாலும் தனது பிறந்த ஊரும் ஷாஹுல் ஹமீத் வலியுள்ளா அவர்களது புகழுக்குரிய இடமாகிய நாஹூரை தனது பெயரோடு இணைத்து "நாஹூர் ஹனிபா" என்றே அழைக்கப்பட்டார்,

பாடல்களும் பணியும்

 ஹனிபா அவர்கள் பல ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் அவை பெரும்பாலும், இஸ்லாத்துடன் இணைந்த பாடல்களாக இருந்த அதே வேளை அவற்றுடன் இஸ்லாமிய வரலாறு பண்பாடு, பெண் புகழ்ச்சிகள் என பல விடயங்கள் உள்ளடங்கி இருந்தன.

ஹனிபாவின் குரலுக்கு நிகரான குரலை இதுவரை யாரும் பெற்றிருக்கவில்லை, அதனால் அவர் இசை உலகில் " இசை முரசு "என அழைக்கப்பட்டார்,1972 - 2010 வரையான காலப்பகுதியில் இவரது புகழ் உயர்ந்த நிலையில் இருந்த காலப்பகுதியாகும்,  ஏறத்தாள  10  திரைப்படங்களிலும்   பாடி இருந்தார்,

சிறப்புப் பாடல் 

நாஹூர் ஹனிபாவின் பல பாடல்கள் மக்களின் மனதின் உச்சத்தைத் தொட்டிருந்தாலும், கிளியனூர் R அப்துல் ஸலாம் எழுதி இசை முரசு பாடிய "இறைவனிடம் கையேந்துங்கள்" என்ற பாடல் மிகப் பிரபலமானது அது குறித்த ஒரு சமயத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாது எல்லா சமயத்தவர்களும் பாடக்கூடிய  சமயம் தாண்டிய பாடலாக( Lyrics are beyond any specific Religion) புகழ்
 பெற்றிருந்தது, 

இப்பாடல் இன்றும் கோயில்களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல் களிலும் விஷேட  நிகழ்வுகளிலும் பாடப்படுகின்றது,

சிறப்புப் பணி

இசை முரசு" எல்லா மத மக்களும் விரும்பும் பாடகராக இருந்த அதே வேளைஅல்லாஹ் பற்றியும்
இறைதூதர்கள், இறைநேசர்கள் என எல்லோரையும் பற்றி சிறப்பாக பாடி பட்டிதொட்டியெல்லாம் இஸ்லாத்தின் புகழையும் வரலாற்றையும்  கொண்டு போய் சேர்த்தவர்...
பாமர மக்களுக்கும் படித்தவர்களுக்கும் இஸ்லாத்தை விளங்கிக் கொண்டதில்  நாகூர் ஹனிபா அவர்களின் பங்கு அளப்பரியது அவர் பாடகர் மட்டுமல்ல  அதையும் தாண்டி, குர்ஆனும் ஹதீஸும் தமிழில் வராத காலத்தில் நமக்கு "சூரா"வைச் சொன்னவர் ,பல குர்ஆனிய சம்பவங்களையும், ஸஹாபாக்களையும்,  தர்ஹாக்களையும் பாடல்களின் ஊடாக உயிர்ப்பித்தவர்,

அரசியல் வாழ்வு

கலைஞர் கருணாநிதி அவர்களின் வாழ் நாள் நண்பரான ஹனிபா அவர்கள் திமுகா வின் ஆரம்பகால அரசியல் முன்னணி உறுப்பினர் மட்டுமல்ல, கலைஞர், நெடுஞ்செலியன் போன்றோருக்கு நிகரான முஸ்லிம் ஆளுமையாகவும் இருந்தவர், திமுகா வில் முஸ்லிம்கள் அதிகம் பங்கு பற்ற நாஹூர் ஹனிபாவின் பாடல்கள் முக்கிய இடம் வகித்தன,

தனிச்சிறப்பு

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், போன்ற இடங்களிலும், உலகின் கடல்கடந்த பல நாடுகளிலும் வாழும் தமிழ்பேசும் இசை ஆர்வலர்களை தனது குரலாலும், கருத்துக்களாலும் ஈர்த்த பெருமை இசை முரசையே சாரும். அத்தோடு அவரது குரலுக்கேற்ற ஒரு தனித்துவ இசைக் குழுவையும் அவரே நெறிப்படுத்தி வைத்திருந்தார், இசை தொடர்பான பிழையான கண்ணோக்கு முஸ்லிம்களில் ஒரு சிலரிடம் காணப்பட்ட  காலப்பகுதியிலும், இசை ஊடாக இஸ்லாத்தை பரப்பியதுடன், மக்களின் உணர்வுகளை ஒழுங்கு படுத்திய பெருமையும் இவரையே சாரும்,  ,

இப்படி பல புகழையும் கொண்டிருந்த  இசை முரசு. அவர்கள் தன் வாழ்வில் மிக எளிமையாகவே வாழ்ந்து  2015 ஏப்ரல் 08 ம் திகதி  இறை கட்டளைப்படி எம்மை விட்டும் பிரிந்தார்கள் , அவரது வழியில் அவரது மகன்  நாஹூர் ஹனிபா நௌஷாத் அவர்கள் அப்பணியை தொடர்கின்றார்.

 ஒரு பாடகராக, சிறந்த அரசியல் சிந்தனை வழிகாட்டியாக, வரலாற்று ஆர்வலராக, இறை பக்தியாளராக,  இறை நேசர்களைக் கண்ணியப்படுத்தும் சீடராக வாழ்ந்து மறைந்திருக்கும். அந்த உயரிய ஆளுமையை ஏற்று, எம்மையெல்லாம் இறைவனிடம் கை எந்த வைத்தவருக்கு அந்த இறைவன் உயர்ந்த இடத்தை வழங்கட்டும்.

முபிஸால் அபூபக்கர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
மெய்யியல் துறை 
பேராதனைப் பல்கலைக்கழகம்
08/04/2020

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)