கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் ஏற்பட்டது முதல் உருவான அவசர கால நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தினால் அன்றாடம் உழைத்து வாழும் பல குடும்பங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கத் துவங்கினர். திஹாரியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவது பலரிடமும் எத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று முதன் முதலாக இடம் பெற்றது. கடந்த வருடம் திகன பிரச்சினை ஏற்பட்ட போது அதற்காக முன் வந்து உழைத்த சகோதரர்களின் அனுபத்தையும் வாய்ப்பாகக் கொண்டு ஒரு பெரிய குழு இம்முயற்சியில் இயங்கியது.
உடனடியாக இந்தப் பணியை ஆரம்பிப்பது என்றும், இந்தப் பணியில் வந்து இனைந்து கொள்ளும் அனைத்து சகோதரர்களையும் இனைத்துக் கொண்டு செயற்படுவது என்றும் முடிவானது.
இந்தத் திட்டத்திற்கு Helping Thihariya என்று பெயரிடப்பட்டது. இந்தக் குழுவை வழி நடாத்த சகோதரர் அஜ்பர் மற்றும் ஸபீர் சேர் இருவரையும் கூட்டுத் தலைமையாக சபை அங்கீகரித்தது. சகோதரர் ரஹீம் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். சகோதரர் சிராஸ் பொருளாளராகப் பொறுப்பாக்கப்பட்டார். இந்தத் தலைமையின் கீழ் உள்ள சுமார் 50க்கும் அதிகமான திஹாரியின் பல பாகங்களிலிருந்தும் வந்த பல அமைப்புகளிலிருந்தும் வந்த சகோதரர்கள் முழு மனதோடு இயங்க உடன்பட்டனர்.
யார் யாரிடம் பணம் சேகரிக்கலாம் என ஒரு பட்டியல் தயார்படுத்தப்பட்டது. அவர்ளைத தொலை பேசியில் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டோம். நாம் எதிர்பார்த்ததை விட அவர்கள் அனைவரும் ஒத்துழைத்தார்கள். சில போது நாம் தொடர்புகொள்ளக் கிடைக்காதவர்களும் தாமே எம்மோடு தொடர்புகொண்டு அவர்களது பங்களிப்பைத் தந்துதவினர்.
ஹொரகொல்ல உட்பட ஊரிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. நாட்டில் நிலவும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அன்றாடம் உழைத்து வாழக்கூடிய அந்தந்த மஹல்லா வாசிகளிலிருந்து இந்த உதவியைப் பெறப் பொருத்தமானவர்களது பட்டியல் ஒன்றை பள்ளி நிர்வாகங்கள் தயார் படுத்தித் தருமாறு வேண்டப்பட்டது.
அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் குறித்த உலர் உணவுப் பொதியைப் பெறத் தகுதியானவர்களை அடையாளம் காண கீழ் வரும் 3 அம்சங்கள் வழங்கப்பட்டன.
1. அன்றாடம் வருமானம் உழைப்போர்.
2. விதவைகள்.
3. வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்போர்.
நிர்வாகங்களுக்கு எமது உறுப்பினர்களும் உதவி செய்ததன் மூலம் முடியுமானளவு பொருத்தமான பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன.
அந்தந்த மஹல்லாவில் உள்ள இந்த உதவியைப் பெறத் தகுதியான சகோதர மதங்களைச் சேர்ந்த சகோதரர்களையும் உள்ளடக்கி அந்தப் பட்டியல் தயார் படுத்தப்பட்டது.
ஊரிலுள்ள சகோதர மதத்தவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் பஹலகம இஸிபதனாராம மற்றும் மல்வத்த பன்சல ஆகியவற்றுக்கும் ஒரு தொகைப் பொதிகளை கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
சுமார் 500 பொதிகள் வரை சேகரிக்கப்பட்டு முழு ஊருக்கும் பங்கிடலாம் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட இந்த முயற்சி அல்லாஹ்வின் அருளாலும் எமது சகோதரர்களின் முயற்சியாலும் தனவந்தவர்கள் மற்றும் பள்ளிவாசல்களின் ஒத்துழைப்பாலும் பல மடங்காகப் பெருகியது.
இந்தப் பதிவு எழுதப்படும் போது 28 லட்சம் ரூபா வரை ஊர் மக்கள் இந்த முயற்சிக்கு அன்பளித்திருந்தனர். சுமார் 1200க்கும் அதிகமான பொதிகள் தயாரிக்கப்பட்டு பங்கிடப்பட்டன.
இந்தப் பணியில் அனைத்து நடவடிக்கைகளும் அந்ததந்த பள்ளிவாசல்கள் ஊடாக மாத்திரமே செயற்படுத்தப்படும் என்ற உறுதியான முடிவு எடுக்கப்பட்டது. ஏனெனில் ஊர் மஹல்லா வாசிகள் அந்ததந்த பள்ளிவாசலோடு நெருக்கமான தொடர்பை வைத்திருக்க வேண்டும் என்பதுதான்.
வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதியில் பின்வரும் பொருட்கள் உள்ளடக்கப்பட்டன.
1. அரிசி – 5 Kg
2. கோதுமை மா – 2 Kg
3. பருப்பு – 1 Kg
4. பால் மா (400 g) – 1
5. சீனி – 2 Kg
6. டின் மீன் (பெரியது) – 1
7. தேயிலை – 250g
8. நூடுல்ஸ் – 1Kg
9. சோயா மீட் (Medium Pack) - 1
10. வெங்காயம் - 1 Kg
இந்தப் பணியில் எந்த விடயத்தையும் புகைப்படமோ அல்லது வீடியோ பதிவோ செய்வதில்லை என்றும் எமது குழு முடிவு எடுத்தது. பக்கத்தில் உள்ள இரண்டு பன்சலைக்கும் பொதிகள் வழங்கப்படுவதை மாத்திரம் ஒரு பதிவுக்காக புகைப்படம் எடுப்பது என்றும் முடிவானது.
எமது குழுவில் இடம் பெற்ற ஒவ்வொரு விடயமும் கலந்துரையாடப்பட்டுதான் முடிவானது. யாரும் அதில் செல்வாக்குச் செலுத்தவில்லை. இதில் எமது கூட்டுத்தலைவர்கள் சிறப்பாக செயற்பட்டனர்.
நாம் அழைக்காமலே பல சகோதர்கள் வந்து எமது முயற்சிக்கு ஒத்துழைத்தார்கள். ஊர் வசிக்கின்றவர்கள், வெளிநாட்டில் வசிக்கின்ற ஊர் மக்கள் மற்றும் வெளியூரைச் சேர்ந்து சகோதரர்கள் பலரும் இதற்கு பணத்தால் உதவி செய்தார்கள். ஊரடங்குச் சட்ட நேரத்தில் எமது பணிகளை சட்டத்துக்கு முரணாகாத வகையில் கொண்டு சென்றோம்.
வல்ல அல்லாஹ்வின் உதவியால் ஒரு பெரும் சமூகப் பணியை செய்துவிட்ட ஒரு திருப்தியில் எமது சகோதரர்கள் இருக்கிறார்கள். நாட்டின் தற்போதைய நிலை தொடருமானால் மீண்டும் இவ்வாறான ஒரு பணியை செய்ய வேண்டியும் வரலாம் என்ற செய்தியையும் ஊர் மக்களுக்கு எத்திவைக்கிறோம்.
உதவி ஒத்தாசைகள் புரிந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.
- Helping Thihariya -





