கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை கையாளும் நடைமுறைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு NFGG அனுப்பி வைத்துள்ள மனு!

Rihmy Hakeem
By -
0
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை கையாளும் நடைமுறைகள் தொடர்பாக கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அனுப்பி வைத்துள்ள மனு!


மேன்மை தங்கிய கோட்டாபய ராஜபக்ஷ,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்
ஜனாதிபதி,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு -01

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே,

கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு இறந்தோரின் உடல்களை அடக்கம் செய்தல்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் பரவலை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, உங்களது திறமையான தலைமைத்துவத்தின் கீழ் வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொலிஸார், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எமது நன்றியறிதலையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உலக சுகாதார நிறுவனம் (WHO) மெச்சும் அளவுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன என்பது பாராட்டக் கூடிய ஒன்றாகும்

அத்தோடு பல அபாயங்களுக்கு முகங்கொடுத்து  முன்னணியில் நின்று அத்தியாவசிய சுகாதாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.

அந்த வகையில், முன்னணியில் இயங்கி வரும் சுகாதாரத் துறைப் பணியாளர்கள் மட்டுமல்லாது, பெருந்தொகையான வேறு பலரும் நம் சமூக இயக்கத்தை சீராக நடத்துவதற்கு பெரிதும் பங்களித்து வருகின்றனர்.

இந்த வைரஸானது, எல்லா மக்களையும் சமூகங்களையும் சேர்ந்த, எல்லா மதத்தவர்களையும் பிரிவினரையும் சமமாகவே தாக்கியுள்ளது. கிராமங்கள், நகரங்கள் மாவட்டங்கள், மாகாணங்கள், நாடுகள், தேசங்கள் என்ற எதையுமே இது பொருட்படுத்தவில்லை.
ஆதலால், எல்லாவற்றுக்கும் முன் இதிலிருந்து நம் நாட்டைப் பாதுகாப்பதே அதியுச்ச முன்னுரிமைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

இவ்விடயத்தில் எந்த நடவடிக்கையை முன்னெடுத்தாலும், அது இன, மத, அடையாளங்களைக் கருத்தில் கொள்ளாத வகையில், கூட்டாகவும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையையும் உள்வாங்கியதாகவுமே அமைதல் வேண்டும்.

கொவிட் 19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில், எந்தப் பிரஜையும் தான் பாரபட்சத்திற்குள்ளானதாகவோ, மிகையாக அம்பலப்படுத்தப்பட்டதாகவோ, ஓரங்கட்டப்பட்டதாகவோ உணரவும் கூடாது.

கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களது உடலை அடக்கம் செய்வது தொடர்பான  நடைமுறைகள், உலக சுகாதார நிறுவனத்தின் நியமங்கள்- வழிகாட்டல்களிலிருந்து வேறுபட்டிருப்பதே இங்கு எமது உண்மையான கரிசனைக்குரிய விடயமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் நியமங்கள், ஒன்றில் அடக்கம் செய்வதை அல்லது தகனம் செய்வதை அனுமதிக்கிறது.

கொரோனாவினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெயின், ஐக்கிய ராச்சியம் (UK), அமெரிக்கா, ஈரான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 150 க்கும் அதிகமான நாடுகளில், மரணித்தோரின் உடலை அகற்றும்போது இந்த வழிகாட்டல்தான் பின்பற்றப்படுகிறது.

அத்தோடு, அவ்வாறு அடக்கம் செய்வதானது, நிலக்கீழ் நீர் மாசடைவதன் மூலமோ அல்லது வேறு எந்த வழிகளூடாகவோ, வைரஸ் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி விடும் என்று எந்த இடத்திலும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

அரசாங்கத்தால் முன்னர் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள், சர்வதேச ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவாகவே இருந்தன.
எவ்வாறாயினும், துரதிர்ஷ்டவசமாக, அப்போதிருந்த சுற்றறிக்கை அடக்கம் செய்வதை அனுமதித்திருந்த நிலையிலும், குடும்ப அங்கத்தவர்களது விருப்பத்திற்கு எதிராக,  ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது.

பின்னர், அடக்கம் செய்யும் தெரிவுடன் தொடர்புபட்ட வாசகங்களை நீக்கும் வகையில், அவசர அவசரமாக அந்த சுற்றறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
இது இலங்கை மக்களில் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் மத்தியில், கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

சுற்றறிக்கையிலிருந்து குறித்த இந்த வாக்கியங்களை ஒருதலைப்பட்சமாக நீக்கியமையானது, அவர்களது மார்க்க நடைமுறைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. மரணித்தவருக்கே உரித்தான ஆன்ம கண்ணியத்தை இது குறைப்பதாக அமைந்துள்ளது.

இந்த வழிகாட்டல்களை மாற்றியமைக்கும்போது கைக்கொள்ளப்பட வேண்டிய வெளிப்படைத் தன்மையோ, சகல தரப்பினருடனுமான கலந்தாய்வோ பேணப்பட்டிருக்கவில்லை என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உதாரணத்திற்கு, அடக்கம் செய்யும்போது வைரஸ் பரவல் ஏற்படலாம் என்று ஏதேனும் சந்தேகம் தோன்றுமாயின், நுண்ணுயிரியலாளர்களினதும் (Microbiologists), வைரஸியல் நிபுணர்களினதும் (Virology experts) விஞ்ஞானபூர்வ அபிப்பிராயங்கள் கேட்டுப் பெறப்பட்டிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும்,  அவ்வாறான  நிபுணத்துவ ஆலோசனையோ அல்லது துறைசார் அபிப்பிராயமோ பெறப்படாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் பெறப்பட்டுள்ளதென நாம் கருதுகிறோம்.

இதற்கிடையில், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய, மரணித்தோரின் உடல்களை அடக்கம் செய்ய முடியுமாயின், அது எந்த வகையிலும் பொதுச் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்காது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது பற்றி  கருத்துத் தெரிவித்துள்ளது.

உலகளாவிய நோய்ப் பரவலுக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு அனைத்துப் பிரஜைகளும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதை நாங்களும் மீள மீள வலியுறுத்துகிறோம். அதேவேளை, ஒவ்வொருவரினதும் சமய மற்றும் பண்பாட்டு உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்தாக அமையாது எனில், எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இவ்வுரிமைகளைப் பாதுகாப்பது அவசியமாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டல்கள் மற்றும் விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்ட நியமங்களிற்கு அமைய, கொரோனா வைரஸினால் இறந்த உடல்களை அகற்றும்போது கைக்கொள்ள வேண்டிய தெளிவான வழிகாட்டல்களை உருவாக்குவதற்கென, இதனை ஆராயும் துறைசார் நிபுணர் குழுவொன்றை - பிரதானமாக  நுண்ணுயிரியலாளர்களை உள்ளடக்கி- அமைக்குமாறு, மேன்மை தங்கிய ஜனாதிபதியாகிய உங்களை வேண்டிக் கொள்கிறோம்.

அவ்வாறான நிபுணர் குழுவானது, வெளிப்படைத் தன்மையோடு இயங்கி, நாட்டின் பரந்த நன்மைக்கு ஏற்ப அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வழிகாட்டல்களை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இது குறித்து பலதரப்பட்ட பிரதிநிதிகள், உங்களையும் கௌரவ பிரதமர் அவர்களையும் சுகாதார அதிகாரிகளையும் பலமுறை சந்தித்துப் பேசியதாக அறிகிறோம்.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே, இந்த வேண்டுகோள்களை சாதகமாகப் பரிசீலித்து, இந்தவிவகாரத்தில் திருப்திகரமான தீர்வைக் காண அவசியமான நடவடிக்கைகளை, கூடிய விரைவில் எடுப்பீர்கள் என நம்புகிறோம்.

இப்படிக்கு

சிராஜ் மஷ்ஹூர்
தவிசாளர்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி.

ஏ.எல்.எம்.சபீல்
பொதுச் செயலாளர்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)