(ஆர்.ராம்)
இலங்கை - இந்திய சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தினையும் அதன் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையையும் இலங்கை அரசாங்கத்தினால் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது என்று வடக்கு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்களான நீதியரசர்.சி.வி.விக்கினேஸ்வரன், ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்க வேண்டுமென்ற தனிப்பட்ட பரிந்துரையை முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட பகிரங்கமாக வைத்துள்ளார். அதேநேரம், மாகாண சபைகளினால் நிதிவிரயமாகுவது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கரிசனை கொண்டிருப்பதாக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க தன்னிடம் தெரிவித்தததாக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் குறிப்பிடுகின்றார். மறுபக்கத்தில் ஆளும் தரப்பில் மாகாண சபைகளை “வெள்ளை யானை” என்ற கடுமையாக விமர்சிக்கப்படுவதோடு அதனால் பயனில்லை என்றும் கருத்தாடப்பட்டள்ளது.
இவ்வாறான பின்னணியில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாமைக்கு அப்பால் ஒட்டுமொத்தமாக மாகாண சபைகளின் எதிர்காலம் மற்றும் அம்முறைமை உருவாக காரணமாக இருந்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நிலைபேற்றுத்தன்மை என்பன கேள்விக்குறியாகியுள்ளது.
எதிர்வரும் ஜுலை 29ஆம் திகதியுடன் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டு 33 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் அவ்வொப்பந்தம் மூலம் நிகழ்ந்த 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இறங்கு முகநிலைமை தொடர்பில் வினவியபோதே முதலமைச்சர்கள் இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஓய்வுபெற்ற நீதியரசர்.சி.வி.விக்கினேஸ்வரன் கூறுகையில்,
இந்திய - இலங்கை ஒப்பந்த்தின் பிரகாரம் இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டே மாகாண சபை முறைகள் உருவாக்கப்பட்டன.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யுமளவிற்கான அதிகாரப்பகிர்வினை அது கொண்டிருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் தமிழர்கள் தமது தாயகத்தினை ஓரளவேனும் பாதுகாப்பதற்கு அரசியலமைப்பு ரீதியான கிடைத்துள்ள அங்கீகாரமாக 13ஆவது திருத்தச் சட்டத்தினைக் கொள்ள முடியும்.
அவ்வாறான நிலையில் சொற்பமாக இருக்கும் அதிகாரத்தினையும் பிடுங்குவதென்பது அதிகாரப் பகிர்வினைக் கோரும் தமிழர்களிடத்திலிருந்து அனைத்து அதிகாரங்களையும் பறித்தெடுத்து அவர்களை இந்த நாட்டின் இரண்டாம் தர பிரஜைகளாக தொடர்ந்தும் வைத்திருக்கும் நோக்கத்தினையே கொண்டாக இருக்கின்றது.
அதுமட்டுமன்றி மாகாண சபை அதிகாரங்களை ஒழித்து, தமிழர் தாயகத்தில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி, வடக்கு கிழக்கினை சிங்கள பிரதேசங்களுடன் இணைத்து இராணுவ ஏதேச்சாதிகார ஆட்சியை முன்னெடுப்பதும் இந்த கருத்துக்களின் பின்னணியாக உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தகாலத்தில் மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய 13ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்று, அதாவது எல்லைகளை வரையறை செய்யாது அதிகாரங்களைப் பகிர்வதற்கு தயாராக இருப்பதாக கூறிய அரசாங்கங்கள் தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தினையே நீக்க முற்படுகின்றார்கள்.
மேலும், இந்திய இலங்கை ஒப்பந்தமானது ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். அதன் அடிப்படையில் தோற்றம் பெற்ற 13ஆவது திருத்தச் சட்டத்தினை இந்தியாவின் அனுமதியின்றி இலங்கை அரசாங்கத்தினால் தன்னிச்சையாக ஒழிக்க முடியாது. இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி தீர்வினையே தமிழ் மக்கள் கோரி நிற்கின்றனர் என்பதை புரிந்துள்ள இந்தியா இந்த விடயத்தில் நிச்சயம் தலையீடு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் கூறுகையில்,
மாகாண சபை அதிகாரங்கள் பகிரங்கப்பட்டுள்ளமையானது சிறுபான்மை மக்களைப் பொறுத்த வரையில் நன்மையான விடயமாகவே பார்க்கின்றார்கள்.
ஆனால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை விடவும் ஏனைய அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கவில்லை.
திட்டமிட்ட முறையில் நிதி ஒதுக்கீடுகளை மட்டுப்படுத்தி மாகாண சபைகள் வினைத்திறனாக இயங்குவதற்கு மத்திய அரசு இடமிளித்திருக்கவில்லை.
அதிகாரங்கள் அரசியலமைப்பின் ஊடாக பகிரப்பட்டிருந்தாலும் அவற்றை நடைமுறை ரிதியில் மக்கள் அனுபவிப்பதற்கு மத்திய அரசால் மறுப்புச் செய்யப்பட்டே வந்தது.
குறிப்பாக, மத்திய ஆட்சியாளர்களே மாகாண சபைகளை வெள்ளை யானைகளாக மாற்றினார்கள். தற்போது அதனையே காரணம் காட்டி இருக்கின்ற சொற்ப அதிகாரத்தினையும் பறிக்க முயல்கின்றார்கள். இவ்வாறு பறிப்பதனால் மாகாண சபைக்கு அதிகமான அதிகாரங்கள் கிடைக்கப் போவதில்லை என்பது புலனாகின்றது.
ஆகவே சிறுபான்மையினரை நசுக்கும் ஒரு முயற்சியாகவே இந்த திருத்தச்சட்ட நீக்கத்தினை கருத வேண்டியுள்ளதோடு, இந்த திருத்தச் சட்டம் மேற்கொள்வதற்கு காரணமாக இருந்த இந்தியா ஏதேச்சதிகார முடிவொன்று இடமளிக்காது என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.