(இராஜதுரை ஹஷான்)
விருப்பு வாக்கு முறைமை நீக்கப்பட்டு முரண்பாடற்ற தேர்தல் முறைமை புதிய அரசாங்கத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
டிசெம்பர் 31ம் திகதிக்கு முன்னர் நிச்சயம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பாரிய போராட்டத்துக்கு மத்தியில் 2020ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பது எமது எதிர்பார்ப்பாகும்.
அரசியலமைப்பின் ஊடாக நெருக்கடிக்குள்ளாகியுள்ள விடயங்கள் புதிய அரசாங்கத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் திருத்தியமைக்கப்படும்.
இணக்கமாக செயற்படும் அரசியல் கட்சிகளுக்குள் நெருக்கடியினை ஏற்படுத்தும் விதமாகவே விருப்பு வாக்கு முறைமை காணப்படுகிறது.
முரண்பாடான நிலைமை பொதுஜன பெரமுனவிற்குள்ளும் தற்போது விருப்பு வாக்கு முறைமையினால் எழுந்துள்ளது. புதிய அரசாங்கத்தில் விருப்பு வாக்கு முறைமை முழுமையாக இரத்து செய்யப்பட்டு முரண்பாடற்ற தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும் இவ்வருடத்தின் இறுதி பகுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.