போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்திய மஹிந்தானந்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமீர பெரேரா

Rihmy Hakeem
By -
0

(செ.தேன்மொழி)

2011 உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசாரணைப் பிரிவு போதிய ஆதரம் இல்லை என விசாரணைகளை நிறுத்தி வைத்துள்ளது.

 அதற்கமைய போலிக் குற்றச்சாட்டை சுமத்தியமை தொடர்பில் மஹிந்தானந்தவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சமீர பெரேரா வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு வலியுறுத்தினார்.

மேலும் கூறியதாவது, மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில் பரிசீலனை செய்த பின்னரே கிரிக்கட் வீரர்களை அழைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார சங்ககாரவுக்கு சர்வதேச மத்தியில் கிடைக்கவிருந்த வாய்ப்பையே இவர்கள் தட்டிப்பறித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ஐ.சி.சி) தலைவராக சங்ககாரவை தெரிவுசெய்ய வாய்பிருப்பதாக தெரிந்து கொண்டால், நாம் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பைதான் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஐ.சி.சி.யின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தால் எமது நாட்டுக்கும் பெருமை சேர்ந்திருக்கும்.

இந்நிலையில் அரசாங்கம் திட்டமிட்டே இந்த ஆட்ட நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது என்றுதான் எமக்கு தோன்றுகின்றது.

இந்த பதவியை பெற்றுக் கொள்வதற்காக சங்ககாரவுடன் இந்திய நாட்டு நபரொருவரே போட்டியில் இருந்தார். இவருக்கு அந்த வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே சங்ககாரவின் மீது வேனுமென்றே குற்றத்தை சுமத்தியுள்ளனர்.

இவர்கள்தான் ஆட்சிக்கு வந்து சிறிது காலத்திலே இந்தியாவுக்கு விஜம் செய்து, கடன்களை செலுத்துவதற்காக சலுகைக்காலம் வழங்குமாறு மண்டியிட்டு வேண்டிக்கொண்டவர்கள்.

இதனால் இந்திய நாட்டு போட்டியாளருக்கு வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் எண்ணத்தில்தான் மஹிந்நதானந்த இவ்வாறு கூறியுள்ளாரா? என்றே சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

அதனால் இவ்வாறு போலியான குற்றச்சாட்டை சுமத்தியமை தொடர்பில் மஹிந்தானந்தவிற்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)