பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் தனது கடமைகளை இன்று ஆரம்பிக்கவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமகா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்று நாட்டின் அரசியல் வரலாற்றில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார்.
1945ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி பிறந்த பேர்ஸி மகேந்திர ராஜபக்ஷ இலங்கை அரசியலில் பல அனுபவங்களைப் பெற்ற முதிர்ச்சி மிக்க அரசியல்வாதியாவார். சட்டத்தரணியான இவர், முதல் தடவையாக 1970ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெரிவாகி இலங்கை பாராளுமன்றத்திற்குப் பிரவேசித்தார். அப்போது வயது குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக இவர் விளங்கினார்.
30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கியதுடன், 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு வரை பொதுநலவாய அமைப்பின் தலைவராக செயலாற்றி இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காகவும் இறைமைக்காகவும் சர்வதேச அளவில் குரல் கொடுத்தார்.
இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கு முதற்தடவையாக விவசாயிகள் பிரகடனத்தை 1994ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார்.
1997ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை மீன்பிடி அமைச்சராக இருந்து இந்தத் துறையின் முன்னேற்றத்திற்கும் பங்களிப்புச் செய்துள்ளார். தற்போது 74 வயதான மஹிந்த ராஜபக்ஷ 50 வருடங்களுக்கும் மேற்பட்ட பல அரசியல் அனுபவங்களுடன் இன்றைய தினம் பிரதமர் பதவியின் பொறுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேரடி வீடியோ : https://m.facebook.com/story.php?story_fbid=627316351531597&id=119154468144820