இலக்கணப் போலி : கஹட்டோவிட்ட சிபான் கமால்

  Fayasa Fasil
By -
0


தமிழிலக்கணத்திலே போலிகளுக்கும் இடம்கொடுக்கப்பட்டிருக்கின்றன. இலக்கணப்போலி என்றால் மக்கள் வழக்கிலும் சான்றோர் வழக்கிலும் இலக்கியச் செய்யுட்களிலும் ஒரு சொல்லின் எழுத்திற்குப்பதிலாக வேறொரு எழுத்து வந்தாலும் இலக்கணப் பொன்னாடைபோட்டு ஏற்றுக்கொள்வதனையே இலக்கணப்போலி என்கிறோம். ஒருசொல்லில் மாற்றமேதும் இன்றி இலக்கண அடிப்படையில் வருமனவற்றை இலக்கணமுடையது எனப்படும். இலக்கணப்போலியும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி எனப் பல்வகைப்படும்.போலியெழுத்து மொழிமுதல்வரின் முதற்போலியென்றும் இடைவரின் இடைப்போலியென்றும் கடைவரின் கடைப்போலியென்றும் பகுக்கப்படும். 

செம்மொழி அந்தஸ்துப்பெற்ற பைந்தமிழிலே போலிகளுக்கு சான்றோர் இடமளித்து ஏன் ஏற்றுக்கொண்டனர் எனும் ஐயமெழலாம். 
பொருள்மயக்கம்தராது மொழிக்கு அழகுசேர்ப்பதாலும் நீண்டகாலம் மக்கள்வழக்கத்திலிருப்பதாலும் போலிகளை சான்றோர் மறுவாழ்வளித்து ஏற்றுக்கொண்டனர். 

எத்தனை போலியெழுத்துக்கள்தான் வந்தாலும் தூய எழுத்தின் இடத்தை ஆக்கிரமிக்கமுடியுமா.. என்னதான் முலாம்பூசினாலும் செம்பொன்னின் இடத்தை நிரப்பமுடியாதல்லவா.. அதுபோலவே இலக்கணப்போலிகளும் என்பது சிலரது வாதம். எனவே போலிகளை கைவிடவேண்டுமென்றும் சிலர் வாதிடுகின்றனர். என்னைக்கேட்டால் “நீர்வழிப்படும் புனைபோல்” மொழியும் நெகிழ்ச்சித்தன்மையோடு காலத்திற்கேற்றாற்போல் மாறுவதனையே மொழியின் உயிர்ப்புக்கு அடையாளமென்பேன். இலக்கணப்போலிவேறு இலக்கணமுடையதுவேறாயினும் போலியையும் அரவணைப்பதையே சரியென்பேன்.


சமூக இலக்கணத்தில் சிலர் தங்களை இலக்கணப்போலிகள் என ஏற்றுக்கொள்வதேயில்லை. இலக்கணமுமையவர்களாகவே தம்மைச் சமூகம் பார்ப்பதாய் எண்ணி இறுமாப்புக்கொள்கின்றனர்.இலக்கணமுடையவரகளையும் கேலிசெய்கின்றனர். பிறருடைய செல்வங்களையெல்லாம் திருடி தன்னுடையதுபோல் காட்டிக்கொண்டும் தன்முன்னேற்றத்திற்கு எவ்வாறுவேண்டுமன்றாலும் பொய்யுரைத்து மனிதாபிமானமற்றமுறையில் நடந்துகொண்டு பிறரைக் பொலைசெய்தும் “தேள்கடியன்ன நா படு தேறள்” எனப் போதையில் மூழ்கிய இலக்கணப்போலிகள் சமூகத்தில் ஏராளம். ஒருவேளை அசலைவிட அழகாகத் தெரிவதனாலோ என்னவோ போலிகளும் கொண்டாடப்படுகின்றன. சமூகத்திலுள்ள வழுக்களைநீக்கி “வழுவமைதிகளாக” மக்களைமாற்றவே அறிஞர்களும் சான்றோர்களும் சூபிஞானிகளும் பெரும்பிரயத்தனமெடுத்து செயற்படுகின்றனர். 


ஒழுக்கத்தில் இலக்கணம்கொண்ட மான்புள்ளவர்களோடு சேரும்போது இலக்கணப்போலிகளும் சான்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு தமிழ்மொழி ஒரு நற்சான்று.

கஹட்டோவிட்ட
 சிபான் கமால்



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)