உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்காக, தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெறுவதற்காக ரூபா 15 இலட்சம் வட்டி இல்லாக் கடன் தொகையை வழங்கும் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (20) கம்பஹா மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் கம்பஹா மாவட்டச் செயலாளர் லலிந்த கமகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சையில் குறைந்தது மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதுடன், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 உயர்கல்வி நிறுவனங்களின் கீழ் பட்டப்படிப்பை தொடர வாய்ப்பு கிடைக்கும்.
2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்ப்புக்காக இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், பட்டம் பெற்ற பின் வட்டி இல்லாக் கடனைத் திரும்பச் செலுத்தத் தொடங்குவதற்கு ஒரு வருட சலுகைக் காலமும் வழங்கப்படுகிறது. முழு கடன் தொகையையும் 12 வருடங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும்.
குறிப்பிட்ட ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோன்றி ஒரே தடவையில் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறுதல், 2025.12.31 ஆம் திகதியன்று 25 வயதிற்குக் குறைவாக இருத்தல், பொதுப் பரீட்சையில் குறைந்தது 30 புள்ளிகளைப் பெற்றிருத்தல் ஆகியவை இதற்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைக் தகுதிகளாகும்.
இதற்கான ஏற்பாடுகளைக் கம்பஹா மாவட்டச் செயலகம் மற்றும் திறன் மேம்பாட்டு அதிகாரிகள் செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலாளர் ஜே.டபிள்யூ.எஸ். கித்சிறி, மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி மற்றும் அபிவிருத்தி) ஆசிரி வீரசேகர, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பணிப்பாளர் (மாணவர் கடன்) சி. அத்ரவத்த, உதவி மாவட்டச் செயலாளர் நிலாந்தி குமாரி மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், கம்பஹா மாவட்டத் திறன் மேம்பாட்டு அதிகாரி சந்திக கொஸ்கொல்லவத்த உட்பட திறன் மேம்பாட்டு அதிகாரிகள், 12 உயர்கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்துள்ள நூற்றுக்கும் அதிகமான மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கலந்துகொண்டனர்.

