சர்வதேச அரபு மொழித் தினமும் அதன் முக்கியத்துவமும்
![]() |
| படம் - AI |
ஆண்டுதோறும் டிசம்பர் 18 ஆம் திகதி சர்வதேச அரபு மொழித் தினம் கொண்டாடப்படுகின்றது.
1973 ஆம் ஆண்டு ஐ. நா அமைப்பு (UN) அரபு மொழியை அதன் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்தது. அதனை நினைவுகூறும் வகையில் இத்தினம் கொண்டாப்படுகின்றது.
இருப்பினும் இது ஒரு மொழியை கொண்டாடும் நாளாக மட்டும் அல்ல; மனித நாகரிகம், அறிவு, பண்பாடு, ஆன்மீகம் ஆகிய அனைத்திற்கும் அரபு மொழி வழங்கிய பெரும் பங்களிப்பை நினைவுகூரும் நாளாகும்.
அரபு மொழி உலகின் பழமையான, வளமான, உயிர்ப்புள்ள மொழிகளில் ஒன்றாகும். இலக்கியச் செழுமை, இலக்கணத் துல்லியம், சொற்களின் ஆழமான அர்த்தம் என்பவற்றால் இது தனித்துவம் பெறுகிறது. கவிதை, உரைநடை, வரலாறு, தத்துவம் என அனைத்து துறைகளிலும் அரபு மொழியின் ஆழமான செல்வாக்கு காணப்படுகிறது.
ஜாஹிலிய்யக் காலக் கவிதைகளிலிருந்து நவீன அரபு இலக்கியம் வரை அதன் தொடர்ச்சியான வளர்ச்சி மனித சிந்தனையின் விருத்தியை பிரதிபலிக்கிறது.
மத்தியகாலத்தில் உலக அறிவுத் தளத்தின் மையமாக இருந்ததோடு அரபு மொழியிலேயே கணிதம், வானியல், மருத்துவம், இரசாயனம், புவியியல் போன்ற பல அறிவியல் துறைகள் போற்றத்தக்க அளவு வளர்ச்சி கண்டது
கிரேக்க, ரோம அறிவுகள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதன் மூலமே அவை ஐரோப்பாவிற்கு கிடைத்தன.
அரபு மொழி இஸ்லாமிய சமயத்தின் புனித நூலான திருக்குர்ஆனின் மொழியாகும். இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் ஆன்மீக வாழ்வோடு இந்த மொழி ஆழமாகவும், கண்ணியமாவும் பதிந்துள்ளது. இது முஸ்லீம்களின் வழிபாட்டு மொழி மட்டுமல்ல; ஒழுக்கம், மனிதநேயம், சமத்துவம் போன்றவற்றை எடுத்துரைக்கும் பண்பாட்டு ஊடகமாகவும் விளங்குகிறது.
இன்றைய உலகில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் அரபு மொழி அதிகாரப்பூர்வ மொழியாகப் பயன்படுகிறது. 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதை தாய்மொழியாகவோ, இரண்டாம் மொழியாகவோ பேசுகின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ மொழியாக இருப்பதால், சர்வதேச அரசியல், தூதரகம், பொருளாதாரம் போன்ற துறைகளிலும் அரபு மொழி முக்கிய பங்கு வகிக்கிறது.
முஸ்லீம்களாகிய எமது கடமை
சர்வதேச அரபு மொழித் தினத்திலேனும் அரபு மொழியின் பெருமையை நினைவுகூர்வதோடு, அதை பாதுகாத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதனை ஏற்று செயற்படவேண்டும் .
அரபு மொழியை ஒரு முஸ்லீம் சமூகத்திற்கும், மார்க்கத்திற்குமான மொழியாக மட்டும் பார்க்காமல், அறிவு, தொழில், பண்பாடு ஆகிய அனைத்திற்குமான ஒரு பிரதான மொழியாகப் பார்க்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் அனைத்தும் அரபு மொழியினை கற்பதை ஊக்குவிக்க வேண்டும்..

