கம்பஹா மாவட்ட தொழில்வழங்குநர் மாநாடு
மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் கம்பஹா மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த கம்பஹா மாவட்ட தொழில் வழங்குநர் மாநாடு (Employment Forum), மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் தொழில் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க தலைமையில் நேற்று (19) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
வேலையற்ற இளைஞர்களை பிரதானமாகக் கொண்டு, அவர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்புகளை வழங்கும் மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இம்மாநாட்டில், கம்பஹா மாவட்டத்தின் தனியார்துறை மனிதவள முகாமையாளர்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்துள்ள தனியார்துறை நிறுவனங்களைப் போலவே, இதுவரை இணையாத நிறுவனங்களையும் இந்நிகழ்விற்கு அழைத்ததன் மூலம், தனியார்துறைக்கும் திணைக்களத்திற்கும் இடையில் பரந்த உறவைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பமும் இங்கு ஏற்படுத்தப்பட்டமை விஷேட அம்சமாகும்.
அத்துடன் தனியார்துறை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, அத்துறையின் தொழில் சந்தை குறித்து தற்போதைய இளம் தலைமுறையினர் கொண்டுள்ள மனப்பாங்குகள் குறித்தும், புதிய வேலை தேடுபவர் ஒருவர் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், வேலை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகளை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும்போது அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய தொழில் வழிகாட்டல் தேவைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், ஆடைக்கைத்தொழில் துறையில் நிலவும் வேலைவாய்ப்புகள் குறித்து சமூகத்தில் காணப்படும் மனப்பாங்கு ரீதியான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.
குழுக்கலந்துரையாடலாக நடைபெற்ற இம்மாநாட்டில், வேலை தேடுபவர்களின் திறன்கள், மனப்பாங்குகள் மற்றும் 2000 ஆம் ஆண்டிற்குப் பிந்திய தலைமுறையினரின் மனப்பாங்குகள் குறித்தும், அவற்றை நிறுவன மட்டத்தில் எதிர்கொள்ளும் விதம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இம்மாநாட்டின் ஆரம்ப உரையினை பிரீமியம் இன்டர்நேஷனல் (Premium International) தனியார் நிறுவனத்தின் மனிதவள முகாமையாளர் திருமதி நுரானி அத்தபத்து நிகழ்த்தியதுடன், நிகழ்ச்சியினை ஃபியூச்சர் லங்கா (Future Lanka) ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மன்றத்தின் பணிப்பாளர் திரு. தயான் பதுகே நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் தொழில் அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.எம். பியதிஸ்ஸ, மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. ருவன் கிரிஎல்ல, கம்பஹா மாவட்ட செயலாளர் திரு. லலிந்த கமகே, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி மற்றும் அபிவிருத்தி) திரு. ஆசிறி வீரசேகர ஆகியோரும், மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ஷிரோமாலா மற்றும் பிரதிப் பணிப்பாளர் திருமதி ஷானிகா மாயாதுன்னே ஆகியோரும், கம்பஹா மாவட்ட செயலக மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என அண்ணளவாக 80 பேர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஊடகப் பிரிவு - கம்பஹா

