கம்பஹா பொலிஸ் தலைமையகக் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC), இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, கம்பஹா தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று (25) இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா-எல, தடுகம பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது. வேறொரு நபரால் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை குறித்த தொழிலதிபர் கொள்வனவு செய்ததாகக் கூறி, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருப்பதற்கும் இந்த அதிகாரி லஞ்சம் கோரியுள்ளார்.
இதற்காக 300,000 ரூபா பணம் மற்றும் 3.5 பவுண் தங்கத்தை லஞ்சமாக கோரி, அதில் முதற்கட்டமாக 250,000 ரூபா பணத்தை லஞ்சமாகப் பெற்றபோது, கம்பஹா தக்ஷிலா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக வைத்து லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

