'Typing' என்ற சொல் சான்றிதழில் இல்லை என பெருமளவிலான விண்ணப்பங்கள் நிராகரிப்பு; நீதிமன்ற தட்டெழுத்தாளர் பரீட்சையில் சர்ச்சை!

Rihmy Hakeem
By -
0

(ரிஹ்மி ஹக்கீம்)

நீதிமன்ற தட்டெழுத்தாளர் (Court Typist) பதவிக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகளின் விண்ணப்பங்கள், அவர்களது கணினி சான்றிதழ்களில் ‘Typing’ (தட்டச்சு) என்ற குறிப்பிட்ட வார்த்தை இல்லை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. தகுதியிருந்தும் பரீட்சை எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விண்ணப்பதாரிகள் இதனால் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.


நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த வருடம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், நீதிமன்ற தட்டெழுத்தாளர் பதவிக்கான தகுதிகளில் ஒன்றாக, "அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் தட்டச்சு (Typing) அல்லது தட்டச்சினை ஒரு பாடமாகக் கொண்ட கணினி பாடநெறி ஒன்றை பூர்த்தி செய்திருத்தல்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


குறித்த பதவிக்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை (24) நடைபெறவுள்ளது. இந்நிலையில், ‘Typing’ பாடநெறியை தனியாகப் பூர்த்தி செய்த சிலருக்கு மட்டுமே பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) கிடைத்துள்ளன. அதேவேளை, அரச தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) பாடநெறியைப் பூர்த்தி செய்த பெருமளவான விண்ணப்பதாரிகளுக்கு, அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் வினவியபோது, "கணினி பாடநெறியைப் பூர்த்தி செய்தவர்களின் சான்றிதழ் பாட விபரப் பட்டியலில் (Transcript) 'Typing' என்ற சொல் குறிப்பிடப்படவில்லை, அதனாலேயே விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இருப்பினும், இது குறித்து தொழில்நுட்பக் கல்லூரி அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, "தற்போதுள்ள நவீன கணினி பாடநெறிகளில் 'Typing' என்று தனியான ஒரு பாடம் இல்லை. அதற்குப் பதிலாக 'Word Processing' (சொல் செயலாக்கம்) என்ற பாடமே கற்பிக்கப்படுகிறது. இந்த 'Word Processing' பாடத்திற்குள்ளேயே தட்டச்சுப் பயிற்சியும் (Typing) முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளது" எனத் தெளிவுபடுத்தினார். தொழில்நுட்ப ரீதியாக ஒரே விடயத்தைக் குறிக்கும் இரு வேறு சொற்களால் ஏற்பட்ட குழப்பமே இந்த நிராகரிப்புக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.




இந்த அநீதி தொடர்பாக, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரி ஒருவரால் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு இன்று (16) அவசர மேன்முறையீட்டுக் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 'Word Processing' என்பது தட்டச்சுத் திறனை உள்ளடக்கியது என்பதைத் தொழில்நுட்ப ரீதியாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.


மேலும் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


பரீட்சைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்தத் தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்து, தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் பரீட்சையில் தோற்ற நீதிச் சேவை ஆணைக்குழு உடனடி நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)