வரகாபொல தாருல் ஹஸனாத் அகடமியின் (Dharul Hassanath Academy) அதிபர் ஏ.எம்.எம். சப்ராஸ் (JP) அனுசரணையில், கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் வத்துபிட்டிவலை பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாத்தலான கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய "Voice for Skill Place for Justice" (திறமைக்கான குரல் நியாயத்திற்கான இடம்) அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். கியாஸ், எமது நாட்டின் இரண்டாவது பெரிய நிர்வாக மாவட்டமான கம்பஹாவின் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள இம்மைதானம் சர்வதேச விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நிட்டம்புவ வித்தியானந்த பிரிவெனாவின் அதிபர் கால்லே தம்மிந்த தேரர், ஹக்கல்ல ஸ்ரீ நாகவனாராம புராண விகாரையின் அதிபர் ரத்மலே ஸ்ரீ சுதம்ம தேரர், நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுர குணவர்தன, அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் A.B.G. பிர்தவ்ஸ், கஹட்டோவிட்ட அல்-பத்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.எம். அஸ்மிர், முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.எம். சர்ஜூன் மற்றும் வரகாபொல தாருல் ஹஸனாத் அகாடமி அதிபர் A.M.M. சப்ராஸ் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

