இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றி புதிய பாதையில் பயணிப்பதன் மூலமே உண்மையான சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்க முடியும் என சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.
நேற்று (04) கொழும்பு ஜாவத்தை ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட சுதந்திர தின இஸ்லாமிய சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இலங்கையின் சுதந்திரம் என்பது அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வென்றெடுத்த ஒரு பொதுவான வெற்றியாகும்.
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இனவாதத்தைத் தோற்கடித்து, புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி நகர வேண்டும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசீர்வாதம் வேண்டி விசேட துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதி அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்களின் பங்கேற்புடன் மரநடுகை வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள்:
இந்த விசேட சமய நிகழ்வில் கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பல்தசார், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், ஜாவத்தை மஸ்ஜித் தலைவர் மற்றும் பரிபாலன சபையினர், சமயத் தலைவர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

