(ரிஹ்மி ஹக்கீம்)
"சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராக நான் பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆகின்றன. எமது திணைக்களத்திற்கும் அஹதிய்யாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நாட்டில் பல அஹதிய்யாக்கள் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளன என்று எமது திணைக்கள அதிகாரி ஒருவரிடத்தில் வினவிய போது அவர் தெரிவித்தார். எனினும், நாட்டின் பல பாகங்களில் பலரது அயராத உழைப்பின் காரணமாக அஹதிய்யாக்கள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன. அவர்களது தேக ஆரோக்கியத்திற்காக நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்" என்று சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (14) கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் மண்டபத்தில் கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 1500வது மீலாதுன் நபி விழா, அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையின் 20வது ஆண்டு நிறைவு விழா மற்றும் வருடாந்த பரிசு வழங்கல் விழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,
நான் பலரிடமும் இன்று கேட்கும் ஒரு விடயம், 'பிரச்சினை இல்லாத ஒரு பள்ளிவாசலை என்னிடம் கொண்டு வாருங்கள்' என்பதுதான். அந்தளவுக்கு இன்று பிரச்சினை இல்லாத பள்ளிவாசல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. அக்காலத்தில் ஏதாவது பிரச்சினைகள் வந்தால் அதனைத் தீர்த்து வைக்கும் இடமாகவே பள்ளிவாசல்கள் செயற்பட்டன. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது; பள்ளிவாசல்களே பிரச்சினைகள் உருவாகும் இடமாக மாறியுள்ளன.
முன்பு ஹஜ் சம்பந்தமான ஒரு பிரச்சினை வந்த போது, தற்போது என்னை விமர்சித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரபலமான நபரிடம் சென்று தீர்வு கேட்கப்பட்டது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான சிலரை நாம் வக்ஃப் சபைக்கு நியமித்தால், மீண்டும் இன்னொரு கூட்டம் அவரிடமே சென்று தீர்வு கேட்டுள்ளது. அவரும் இப்போது பதில் வழங்கிக் கொண்டு இருக்கிறார்.
எமது அதிபர் இக்ராம் அவர்கள் இங்கு குறிப்பிட்டது போன்று சமூகத்தில் மூன்று குழுக்கள் உள்ளன. ஒன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள், இரண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு குழு இருக்கிறது, அவர்கள் தான் 'முனாபிக்குகள்'. அவர்கள் எமது சமூகத்திற்குள் தான் இருக்கிறார்கள். இதனை நான் ஒரு அரசியல்வாதி என்பதை விட, சமூகத்தில் இருந்து கொண்டு நான் கண்ட உண்மைகளை மிகுந்த வேதனையுடனேயே பேசுகிறேன்.
எமது பாடசாலைகளின் பிரச்சினைகளைப் பார்த்தால், கம்பஹா மாவட்டத்தில் ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டுவதற்கு இடம் உள்ள பாடசாலை ஒன்றைக்கூட தேட முடியாமல் இருக்கிறது. முன்பொரு காலத்தில் வசதி படைத்தவர்கள் தமது சொத்துக்களை சமூகத்தின் நலனுக்காக வக்ஃப் செய்தார்கள். ஆனால் இன்று வக்ஃப் சொத்துக்களைச் சிலர் இன்னொருவருக்கு வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, கம்பஹா மாவட்டத்தில் ஒரு பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடையொன்றுக்கு நீண்டகாலமாக மாதாந்த வாடகையாக வெறும் 35,000 ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டு வந்தது. அண்மையில் தான் அதன் வாடகை 190,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. பள்ளிவாசல் சொத்துக்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு, அதன் வருமானங்கள் சரிவரக் கையாளப்பட்டால் கதீப், முஅத்தின் மற்றும் ஏனைய ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். அத்தோடு பள்ளிவாசல்களை நல்ல நிலைக்குக் கொண்டு வருவதுடன், ஊரிலுள்ள குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய முடியும்.
எமது மௌலவிமார்கள் பள்ளிவாசல்களில் 30 அல்லது 40 வருடங்கள் மிக அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது, சிலவேளைகளில் அவர்களது நோய்க்கு மருத்துவம் செய்ய முடியாத வறுமை நிலையில் இருக்கிறார்கள். இந்நிலைமையை நாங்கள் சரி செய்ய வேண்டும். இதனை எப்படிச் செய்வது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டிய இடத்தில்தான் நாம் இப்போது இருக்கிறோம். மேலும், நான் பதவியேற்ற பிறகு வசதி குறைந்த, உயர்தரம் கற்கும் மாணவர்கள் 100 பேருக்குப் புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை தற்போது கோரியிருக்கிறோம்."
இவ்வாறு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தனது உரையில் தெரிவித்தார்.
நிகழ்வில் இலங்கை அஹதிய்யா பாடசாலைகள் மத்திய சம்மேளனத்தின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் M.R.M. ஸரூக் சிறப்பு அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி நபீஸ், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அதிபர் அஸ்மிர் உட்பட கல்விமான்கள், ஊர் பிரமுகர்கள், பிரதேச அரசியல் பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், உலமாக்கள், தரீக்காக்களின் முக்கியஸ்தர்கள், அஹதிய்யா நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக படங்கள் மற்றும் தகவல்கள்:











