தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் அல்-குர்ஆன் மத்ரஸாவின் 25வது ஆண்டு நிறைவுப் பொன்விழாவை முன்னிட்டு, 2025/2026 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை ரீதியிலான இஸ்லாமியப் போட்டிகளின் பரிசளிப்பு விழா அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவுக்கான ஆரம்பக்கட்டப் போட்டிகள் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியில் இடம்பெற்றன. இதில் இலங்கை முழுவதிலுமிருந்து சுமார் 1,000க்கும் மேற்பட்ட மத்ரஸா மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இப்போட்டிகள் சுமார் 70 அனுபவம் வாய்ந்த நடுவர்களின் முன்னிலையில் மிகவும் நேர்த்தியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு நிறைவடைந்தன.
இதனைத் தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் பிரம்மாண்டமான பரிசளிப்பு விழா கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி கொத்தடுவயில் அமைந்துள்ள NAAS கலாசார நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சகோதரர் அஸ்ரூப், நாஸ் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் அஷ்-ஷேக் நஜ்மான் ஸாஹித் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கொழும்பு கிளைத் தலைவர் அஷ்-ஷேக் அப்துல் முக்ஸித் ஹஸரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் அமீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷேக் தாஸிம் (கபூரி), அஷ்-ஷேக் கலாநிதி மஹ்தூம் மதனி, பாத ஹேவாகட்ட பிரதேச சபை உறுப்பினரும் தெல்தோட்டை மஸ்ஜித் சம்மேளனத் தலைவருமான அஷ்-ஷேக் முனீர் ஸாதிக் காஷிபி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக, பல்வேறு போட்டிகளில் வெற்றி வாகை சூடிய அனைத்து மாணவர்களுக்கும் பணப்பரிசில்களும் பெறுமதிமிக்க சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டன. 25 ஆண்டு கால கல்விப் பணியை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த இந்த விழா, மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

