தற்போதைய சூழலில் ஆடம்பரங்களைத் தவிர்த்து அர்த்தமுள்ள வகையில் பெருநாளைக் கொண்டாடுவோம் - பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

Rihmy Hakeem
By -
0

 


ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, மத வழிபாடுகளில் ஈடுபட்டு, இன்று ஈதுல் பித்ர் எனப்படும் ரமழான் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


"ரமழான் என்பது வெறும் பசியுடன் இருப்பது மட்டுமல்ல, ஆன்மீகத் தூய்மை, சுய ஒழுக்கம் மற்றும் இறைபக்தியை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு உன்னதமான மாதமாகும். பசி மற்றும் தாகத்தின் மூலம் சமூகத்தில் உள்ள ஏழை மக்களின் துன்பங்களை நடைமுறையில் புரிந்துகொள்வதற்கும், பொறுமை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தைப் பேணுவதற்கும் இஸ்லாம் இதன் மூலம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது. இன்று கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் பெருநாள் என்பது அந்த உயரிய தியாகத்தின் பலனாகக் கிடைக்கும் மகிழ்ச்சியையும் சகவாழ்வையும் உலகிற்க்கு உணர்த்தும் ஒரு புனித நாளாகும்."


"இம்முறை நாம் இந்த உன்னத நாளைக் கொண்டாடுவது, உலகளவில் நிலவும் போர்ச் சூழல்கள் மற்றும் அது சார்ந்த நெருக்கடிகளினால் நமது தாய்நாடு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள ஒரு தீர்மானமிக்க காலப்பகுதியிலாகும். நாட்டில் நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரச விழாக்களைக் கட்டுப்படுத்தவும், சில நிறுவனங்களின் சேவை நாட்கள் மற்றும் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி கடுமையான நிர்வாக மற்றும் பொருளாதார மாற்றங்களைச் செய்யவும் அரசாங்கத்திற்கு நேர்ந்துள்ளது."


"இவ்வாறான சவாலான தருணத்தில், ரமழான் நோன்பின் நோக்கங்களை முன்னெப்போதையும் விட நாம் நம் வாழ்வில் நெருக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆடம்பரக் கொண்டாட்டங்கள் மற்றும் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, அத்தியவசிய அடிப்படை மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், தன்னிடம் உள்ளதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதுமே இம்முறை ரமழான் பெருநாளைக் கொண்டாடும் உண்மையான இஸ்லாமியக் கொள்கையாகும்."


"இது தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கான சிறந்த நடைமுறையாகவும் முன்மாதிரியாகவும் அமையும். இந்த நெருக்கடியான காலத்தை நாம் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் கடக்க முடியும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும். ரமழான் காலத்தில் நாம் பயின்ற பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஆன்மீக பலம் ஆகியவை எதிர்கால சவால்களை வெற்றிகொண்டு வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப பெரும் பலமாக அமையட்டும்!"


"ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ஒரு நல்ல, நம்பிக்கையான மற்றும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று நான் உளமாறப் பிரார்த்திக்கின்றேன். உங்கள் அனைவருக்கும் அர்த்தமுள்ள, அமைதி, மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவம் நிறைந்த பாக்கியமிக்க ஈதுல் பித்ர் பெருநாள் அமையட்டும்! ஈத் முபாரக்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)