இலங்கையிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் அறக்கட்டளைகளை ஒழுங்குபடுத்தும் உயரிய நிறுவனமான 27-வது வக்ஃப் சபையின் புதிய தலைவர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தலைமையில் இன்று (28) நடைபெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மர்ஷத் பாரி உட்பட ஏழு உறுப்பினர்களைக் கொண்ட வக்ஃப் சபை, பிரதி அமைச்சரிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த நியமனமானது 2026 ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
புதிய வக்ஃப் சபை உறுப்பினர்களின் விபரம்:
- மர்ஷத் பாரி (தலைவர்)
- மௌலவி எம்.எஸ்.எம். இஹ்சான் (றஷாதி)
- எம். ஒய். ஏ. ரிஃபாக் அஹமட் (பொறியியலாளர்)
- ஏ.எம்.ஜே.எம். ஜவ்பர்
- ஸைனுல் மசூதீன் (சட்டத்தரணி)
- எம்.ஏ.எம். அரூஸ்
- எம்.ஐ. அமீனுதீன்
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
"முஸ்லிம் சமய நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்புகளை மேலும் சீரமைப்பதும், பொதுமக்களுக்கு உச்சகட்ட சேவையை வழங்குவதும் இந்தப் புதிய சபையின் பொறுப்பாகும். குறிப்பாக, பள்ளிவாசல் நிர்வாகங்களில் ஏற்படும் சிக்கல்களைச் சட்ட ரீதியாகவும் நீதியாகவும் தீர்ப்பதற்குப் புதிய தலைவரும் உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்."
இந்த நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.








