தேசிய போர்வீரர்கள் (ரணவிரு) நினைவு தினத்தை முன்னிட்டும், 'டிட்வா' (Ditwa) சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூரும் நோக்கிலும் கம்பஹா மாவட்டத்தில் விசேட மர நடுகை திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. "மூச்சிற்கு மூச்சு - மாவீரர் மர நிழல்" (හුස්මෙන් හුස්මක්-විරு තුරු සෙවණ) எனும் மனிதாபிமான மகுட வாசகத்துடன் இத்திட்டம் நேற்று (22) பஸ்னாகொட நீர்த்தேக்க வளாகத்தில் சர்வ மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் 141 ஆவது படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நாற்று நடுகை நிகழ்வு, 141 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சஞ்சய குணவர்தன தலைமையில் நடைபெற்றது.
உயிர்நீத்த வீரர்களுக்கு மரங்கள் மூலம் அஞ்சலி
நாட்டின் அமைதிக்காக கம்பஹா மாவட்டத்திலிருந்து இராணுவத்தில் இணைந்து உயிர்நீத்த 1460 இராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையில் இந்த எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடப்பட்டன. உயிரிழந்த வீரர்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கண்ணீர்மல்க, தத்தமது உறவுகளின் நினைவாக மரக்கன்றுகளை நட்டமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வில் பிராந்திய அரச உயர் அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டும் பணியில் பங்கெடுத்தனர்.
செய்தித் தொகுப்பு: சகுந்தலா ஜயவர்தன, நிரோஷா வீரசிங்க
தகவல் : கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு










