கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டு வரும் பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட தொடரின் அத்தனகல்ல கோட்டக் கல்விப் பிரிவு பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்ற திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி அணி மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி என்பன கம்பஹா வலய மட்ட போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன.
இப்போட்டியின் 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆகிய மூன்று பிரிவுகளிலும் திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தது.
20 வயதுக்குட்பட்டோர் பிரிவு:
இறுதிப் போட்டியில் திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி 2-1 என்ற கோல் கணக்கில் கஹட்டோவிட்ட அல்-பத்ரியா அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
18 வயதுக்குட்பட்டோர் பிரிவு:
கஹட்டோவிட்ட அல் பத்ரியாவுக்கு எதிரான ஆட்டம் சமநிலையில் முடிந்ததையடுத்து நடாத்தப்பட்ட பெனால்டி வாய்ப்பில் 3-2 என்ற கோல் கணக்கில் திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி வெற்றி பெற்று சய்பியனாகியது.
16 வயதுக்குட்பட்டோர் பிரிவு:
அல்-பத்ரியா அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி வெற்றி பெற்று சம்பியன் ஆனது.
வலய மட்டப் போட்டிக்குத் தகுதி:
இந்தத் தொடரின் சிறப்பம்சமாக, சம்பியன் பட்டங்களை வென்ற திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த (16, 18 & 20) அணிகளும், இரண்டாம் இடங்களைப் பிடித்த அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த (16, 18 & 20) அணிகளும் என இரு பாடசாலைகளினதும் ஆறு அணிகளும் அடுத்த கட்டமான வலய மட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன.
வெற்றி பெற்ற மற்றும் தகுதி பெற்ற இரு பாடசாலை வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கல்வி அதிகாரிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

