உலகிற்கு மனிதநேயத்தையும் சமத்துவத்தையும் பறைசாற்றும் ஹஜ் பெருநாள்: பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் வாழ்த்து!

Rihmy Hakeem
By -
0




தியாகத்தினதும் சகோதரத்துவத்தினதும் ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெருநாள்) வாழ்த்துக்கள்!


உலகெங்கிலும் வாழும் மற்றும் இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் மிகுந்த இறை நம்பிக்கையோடு கொண்டாடும் சிறப்பானதொரு மத விழாவான "ஈதுல் அழ்ஹா" ஹஜ் பெருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். 


அவர் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


"ஈதுல் அழ்ஹா அல்லது "தியாகத் திருநாள்" என்பது வெறும் கொண்டாட்டத்திற்கும் அப்பால், ஆழமான மத மற்றும் சமூக செய்தியை உலகிற்கு பறைசாற்றும் ஒரு நாளாகும். இப்றாஹிம் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் அல்லாஹ் மீதான அசைக்க முடியாத இறை நம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் உன்னதமான தியாகம் ஆகியன இந்நாளில் நினைவு கூறப்படுகின்றது."


"அதேபோல், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் இலட்சக்கணக்கான ஹாஜிகளின் இனம், குலம் அல்லது வர்க்க வேறுபாடுகளின்றி ஒரே வெள்ளை ஆடையை அணிந்து, புனிதமிக்க மக்கா பூமியில் நிறைவேற்றும் ஹஜ் வழிபாடானது, ஒட்டுமொத்த உலகிற்கும் மனிதநேயத்தின் ஒருமைப்பாட்டையும் சமத்துவத்தையும் பறைசாற்றுகின்றது."


"தன்னிடமுள்ளவற்றில் ஒரு பகுதியை பிறருக்காகத் தர்மம் செய்து, ஏழை எளிய மக்களின் பசியைத் தீர்த்து, சகோதரத்துவத்துடன் கைகோர்ப்பதற்கே இந்த உன்னதமான நாளில் இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகிறது."


"புனிதமிக்க மக்கா பூமியிலிருந்து இம்முறை ஹஜ் வழிபாட்டில் ஈடுபடும் இலங்கை ஹாஜிகள் உட்பட ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் இறை அருள் நிறைந்த பயனுள்ள ஈதுல் அல்ஹா திருநாளாக அமையப் பிரார்த்திக்கிறேன்!" என்றும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)