அனுராதபுர புனித பூமியில் உள்ள பிரதான விகாரையொன்றின் விகாராதிபதி உட்பட குழுவினர், மைனர் சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக சான்றுகளைச் சேகரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா கோட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நிட்டம்புவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இந்த 15 வயது சிறுமி முதலில் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டார். அங்கு வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, அச்சிறுமி அவ்வப்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரிய துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் இது குறித்து முழுமையான அறிக்கையை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட இடங்களில் அறிவியல் ரீதியான சோதனைகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்வரும் நீதிமன்ற அமர்வுகளின் போது கைது நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை சமர்ப்பிக்க உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதோடு, சிறுமியின் பாதுகாப்பு மற்றும் உளவியல் ஆலோசனைகளுக்காக சம்பந்தப்பட்ட பிரிவினர் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Source - Gampaha News Web

