கொழும்பு பள்ளிவாசலின் சகல ஆவணங்களும் தொன்மையான வரலாற்றை கொண்டவை!
தேவை கருதி நீதிமன்றம் கோரினால் தவிர; தனிநபர் விமர்சனங்களுக்காக வெளியிட முடியாது
!!
– சிரேஸ்ட சட்டதரணி ருஸ்தி ஹபீப் தெரிவிப்பு -
கொழும்பு பெரிய பள்ளிவாசல் குறித்து தனிநபர்கள் சிலரால் பல்வேறு விமர்சனங்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், அவ்வாறான விமர்சனங்கள் முற்றிலும் பொய்யானவை - என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையில் நிர்வாகத்தினரால் நேற்று (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பாேது விளக்கமளிக்கப்பட்டது.
இது விடயமாக பூரண விளக்கத்தினை பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான ருஸ்தி ஹபீப் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.
அவர் தெரிவித்ததாவது,
இலங்கை வரலாற்றில் இரண்டாவதாக ஸ்தாபிக்கப்பட்ட கொழும்பு பெரிய பள்ளவாசல் சுமார் 1200 வருட வரலாறு கொண்டதாகும்.
இலங்கையர்கள் அனைவருக்கும் நாங்கள் தெரியப்படுத்துவதானது கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்பது பாரம்பரியமான பள்ளிவாசல். இப் பள்ளிவாசலில் கலாசார மரபுகள், மார்க்க ரீதியிலான மரபியல் கட்டமைப்புகள் பேணப்பட்டு வருகின்றன.
பள்ளிவாசல் சொத்துகள், நிலங்கள், கட்டிட வரைபுகள், கணக்கியல் அத்தனையும் அந்தந்த கால அரச சட்ட முறைகளுக்கு ஏதுவாக முறையாகக் கையாளப்பட்டு வருகின்றன.
ஒரு சில முஸ்லிம் சகோதரர்களுக்கு பெரிய பள்ளிவாசலின் ஆவனங்கள் உடனடியாக தேவைப்படுகிறது.
அவர்களின் சுய இலாப நோக்கங்களுக்காக இவ்வாறான விமர்சனங்களை கிழப்பி சமூகத்தின் மத்தியில் பள்ளிவாசல்களின் பெயர்களை விமர்சனத்திற்குள்ளாக்குகின்றனர்.
நாங்கள் எந்தவிதத்திலும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் சட்ட ரீதியான ஆவணங்களை அவசியமில்லாத வகையில் பகிரங்கப்படுத்தப்பட மாட்டோம்.
அவசியப்படுமென்றால் அவற்றை நீதிமன்றங்களுக்கு முறையாக சமர்ப்பிப்போம்.
பலரும் அறிந்த விடயமொன்றுதான், கொழும்பு புறக்கோட்டையிலுள்ள 'அத்தர் மஹால்' என்ற ஒரு கட்டடத் தொகுதியை இந்த நிர்வாக சபையின் நீண்ட ஒரு சட்ட நடவடிக்கைக்குப் பிறகு பெரிய பள்ளிவாசல் மீளப் பெற்றுள்ளது.
இவ்வாறான விடயங்களால்தான், ஒருசில குழுவினர் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இடங்களில் உரிமை கொண்டாட முனைகிறார்கள்.
அவர்களுக்குத்தான் இந்த ஆவணங்கள் தேவைப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விடயத்தினையும் கூற வேண்டும்.
அதாவது,
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் காணிதான் மாளிகாவத்தை மையவாடி.
தற்போதுள்ள மையவாடி தவிர, அதனை அண்டிய காணிகள் இருக்கின்றது.
அவற்றில் பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்கள் உட்பட அந்நிய மதத்தவர்கள் சிலரும் சிறிய வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோல் அங்கு பள்ளிவாசல் ஒன்று இருக்கிறது.
10 வருடங்களுக்கு மேல் ஒரு காணியில் இருந்தால் அதற்கு உரிமை கொண்டாடலாம் என்கிற இலங்கை சட்டத்தின் அடிப்படையில் அதனைப் பெறுவதற்கு அவ்வாறானவர்களுக்கு சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
மாளிகாவத்தை மையவாடிக்கு உரிய முழு காணிகளையும் சட்டரீதியாக அளவீடு செய்துள்ளோம்.
வழக்குத் தேவைகளுக்காக அவை அளவீட செய்யப்பட்டுள்ளன.
சிலரது வாதம் எங்களுடைய சட்டபூர்வமான ஆவணங்களை வெளிநபர்களுக்கு கொடுக்க வேண்டும். அதை அவர்கள் மூலமாக பெற்று தங்களின் சுய தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றனர்.
இதைப் பெற்றது தொடர்பாக எனக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சி நடகப் போவதில்லை.
ஏனென்றால் கொழும்பு பெரிய பள்ளிக்குரிய சட்ட பூர்வமான ஆவணங்கள் முறையாக கையாளப்படும்.
அது யாராக இருந்தாலும் சரி!
குறிப்பாக இந்த நிர்வாகத்தில் வந்தவர்கள் யாரும் பதவிக்காக வந்தவர்கள் இல்லை. பொறுப்புகளை சுமந்தவர்களாக இந்த வேலைகளை செய்து வருகின்றோம்.
அந்த வகையில் நாங்கள் இதை செய்து சாதித்துள்ளோம் என்று ஊடகங்களிலோ, பேஸ்புக்களிலோ சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
எங்களுக்கு தேவை இந்த விடயங்களை எந்த வகையில் சாத்தியப்படுத்தலாம் என்பதேயாகும்.
நாங்கள் இதுவரை எந்த ஊடக சந்திப்புக்களையும் பெரிய பள்ளிவாசல் சம்பந்தமாக ஏற்படுத்தியது இல்லை.
நிர்வாகத்தினர், மஹல்லாவாசிகள், பள்ளிவாசல் நலன் விரும்பிகள் பலரின் வேண்டுகோளுக்கமையவே தேவையின் நிமிர்த்தம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
வரலாற்று ரீதியாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் சொத்துக்கள், நிலங்களை எடுத்துக் கொண்டால் அவை சட்ட பூர்வமான தொண்மை வரலாற்றைக் கொண்ட இடங்களாக நிர்ணயம் செய்யப்பட்டவை.
பெரிய பள்ளிவாசலும் அப்படித்தான்; இங்கேயும் ஒரு ஸியாரம் உள்ளது.
இந்தப் பள்ளிக்கு என்று ஒரு கலாசாரம் இருக்கிறது. அதில் ஒரு அங்கமாக பெரிய பள்ளிவாசல் ஊடாக பிறை பார்த்து இஸ்லாமிய மாதங்களை தீர்மாணிக்கும் மரபு இங்கே நடைபெறுகிறது.
மேலும், இலங்கை பாராளுமன்றத்தால் சட்டபூர்வமாக பதியப்பட்டதே கொழும்பு பெரிய பள்ளிவாசல்.
ஆகவே, இது ஒரு கூட்டிணைக்கப்பட்ட சட்ட அனுமதியுடனான தொன்மையான ஒரு பள்ளிவாசல். இதெற்கென தனியான சட்டங்கள் உள்ளன.
அவைகளுக்கு உட்டபட்டுத்தான் எங்களுக்கு செயற்படலாம்.
விரும்பிய ஒருவர் வந்து நிர்வாகத்தை கைப்பற்றவோ அல்லது நிர்வாகியாகவோ வரவோ முடியாது.
சிலர் அப்படி விரும்புகின்றார்கள் அவர்களுக்கு கூலியாகத்தான் ஒரு சிலரால் சமூக ஊடகங்களில் இட்டுக் கட்டப்பட்ட விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
பள்ளியை அழகுபடுத்தல், அபிவிருத்தி செய்வது போன்றவை சிலருக்கு பிரச்சினையாக இருக்கிறது.
அனுமதி எடுத்து செய்தீர்களா என்று கேட்கின்றனர். சகல அனுமதிகளும் எடுத்துத்தான் செய்கின்றோம்.
அப்படி இல்லை என்று சொன்னால் சட்ட ரீதியாக அதிகார சபை இருக்கிறது நகர சபை இருக்கிறது அவர்களுக்கு தாராளமாக நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த பள்ளிவாசலை எடுத்துக் கொண்டால் போத்துக் கீசர்கள் 15 ஆம் நூற்றாண்டு இலங்கை வந்தபோது அவர்களின் பதிவுகளில் இந்த பள்ளிவாசல் இருக்கிறது.
இங்கு ஒரு பீரங்கி இருக்கிறது அது எதற்காகவென்றால் முஹர்ரமோ அல்லது ரமழானோ ஹஜ்ஜோ அல்லது புனித மாதங்கள் வரும்போது அதை ஆங்கிலேயரின் அங்கீகாரத்துடன் செல் வீசி ஒலியெழுப்பி மக்கள் அறிய அதனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அதேபோல் கொழும்பு நூதனசாலையிலும் இந்த பள்ளிவாசலுக்குரிய புராதனமான ஆவணங்கள் எல்லாம் இருக்கின்றன. எங்களிடமும் இருக்கின்றன.
முஸ்லிம்களின் பல நல்ல விடயங்களை செய்யும் ஒரு மையமாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் செயற்பட்டிருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து முன்னோர்கள் வைத்த வழியில் நடந்து கொண்ட செல்கின்றது.
ஆகவே, நாங்கள் சொல்வது என்னவென்றால் ஒரு விடயத்தை சமூகத்தின் மத்தியில் பிரசுரிக்கும் போது அதன் உண்மைத் தன்மையை அறிந்து விமர்சனங்கள் செய்ய வேண்டும் என உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன். - என்றார்.
✍️ கியாஸ் ஏ. புஹாரி

