2027 ஆம் ஆண்டுக்கான ஞாபகார்த்த முத்திரைகள் வெளியீடு: ஆலோசனைகளைக் கோருகிறது அஞ்சல் திணைக்களம்
2027 ஆம் ஆண்டில் வெளியிடப்படவுள்ள ஞாபகார்த்த முத்திரைகளுக்கான பொருத்தமான தலைப்புகள் மற்றும் ஆலோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு இலங்கை அஞ்சல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
முத்திரைக் கொள்கையின் 7.1 ஆம் பந்தியின் பிரகாரம் அஞ்சல் அதிபதி எஸ். ஆர். டபிள்யு. எம். ஆர். பி. சத்குமார அவர்களினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய விவரங்கள்:
- ஆலோசனைக்கான தலைப்புகள்: தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள், ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள், மதிப்பிற்குரிய நபர்கள், இயற்கைக் காட்சிகள், விளையாட்டு மற்றும் தேசிய பெருமையையும் கலாசார விழுமியங்களையும் வெளிப்படுத்தும் தலைப்புகளின் கீழ் ஆலோசனைகளை அனுப்ப முடியும்.
- சமர்ப்பிக்க வேண்டியவை: பரிந்துரைக்கப்படும் ஆலோசனையுடன் அதன் முக்கியத்துவம் குறித்த சுருக்கமான விளக்கம், திகதிகளை உறுதிப்படுத்துவதற்கான எழுத்து மூலமான சான்றுகள், மற்றும் அனுப்புபவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கையொப்பம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
- கடைசித் திகதி: அனைத்து ஆலோசனைகளும் 2026 செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெற வேண்டும்.
- அனுப்ப வேண்டிய முகவரி: பணிப்பாளர், முத்திரைப் பணியகம், அஞ்சல் தலைமையகம், இல. 310, டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 01000.
குறிப்பிட்ட இறுதித் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் ஆலோசனைகள் 2027 ஆம் ஆண்டுக்கான முத்திரை வெளியீட்டின் போது கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது எனவும் அஞ்சல் திணைக்களம் தெரிவிப்பதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

