திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் கம்பஹா மாவட்ட இளைஞர்களுக்கான செயலமர்வு - நீங்களும் விண்ணப்பிக்கலாம் (விபரம்)

Rihmy Hakeem
By -
0

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் கம்பஹா மாவட்ட இளைஞர்களுக்கு ஓகஸ்ட் 16ஆம் திகதி செயலமர்வு 



திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் செய்யப்படும் பிராந்திய மட்ட செயலமர்வு தொடரின் முதலாவது நிகழ்வு, கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தை இலக்காகக் கொண்டு ஆகஸ்ட் 16ஆம் திகதி நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக குறித்த ஒன்றியத்தின் இணைத்தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்  அவர்கள் தெரிவித்தார். 


திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டம் கௌரவ உறுப்பினரின் தலைமையில் அண்மையில் (5) நடைபெற்றபோது, இச்செயலமர்வுக்கான ஏற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.


இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்த செயலமர்வு தொடர் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவிருக்கின்றனர்.


இந்த செயலமர்வுகளின் ஊடாக, இளைஞர் சமூகத்திற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள், சட்டவாக்க செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றத்தின் எண்ணக்கரு தொடர்பில் விழிப்புணர்வூட்டவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் இச்செயலமர்வு தொடருக்கான அபிவிருத்தி பங்காளராக அனுசரணை வழங்கும் CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


இந்த செயலமர்வில் பங்கேற்க விரும்பும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 18 – 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் இங்கே தரப்பட்டுள்ள https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)