"நபியின் நேசம் நெஞ்சில் நிறைய" கொழும்பு மாநகர சபையில் சிறப்புறும் மீலாத் விழா!
கொழும்பு: புனித மீலாதுன் நபியை முன்னிட்டு, நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பு, வாழ்க்கை, போதனைகள் மற்றும் முன்மாதிரியான பண்புகளை நினைவுகூரும் வகையில், கொழும்பு மாநகர சபையில் “மீலாதுன் நபி – சமய மற்றும் கலாசார நிகழ்வு” ஏற்பாடு செய்யப்பட்டது.
“நபியின் நேசம் நெஞ்சில் நிறைய” என்ற தொனிப்பொருளில் நடை பெற்ற இந்நிகழ்வு, கொழும்பு மாநகர சபையின் முதல்வர் விராய் கெல் பத்தசார் அவர்களின் தலைமையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் டாக்டர். ரிஸ்வி சாலி மற்றும் மேல் மாகாண ஆளுநர் யூசுப் ஹனீப், பிரதி மேயர் ஹேமந்த வீரகோன். மாநகர ஆணையாளர் ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உயரிய பண்புகளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சமய மற்றும் கலாசார அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
நாட்டின் அரசியல் மாற்றம், பொருளாதார நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்கள் காணப்பட்டாலும் எமது மாநகர சபை மீலாத் விழாவை தொடர்ந்தும் முன்நெடுத்தமை இன ஒற்றுமைக்கு இவவிழா முக்கியமானது என்பதினால் என கொழும்பு மாநகர முதல்வர் இதன்போது கூறினார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த அன்பு, கருணை, சகோதரத்துவம், சமாதானம், சகிப்புத்தன்மை, மனிதநேயம் மற்றும் சமூக நல்லிணக்கம் போன்ற உயரிய விழுமியங்களை இன்றைய சமூகத்தில் முன்னெடுத்துச் செல்வதன் அவசியமும் இந்நிகழ்வின் ஊடாக வலியுறுத்தப்பட்டது.
மீலாத் விழா என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் ஒரு சமய நிகழ்வாக மட்டுமன்றி, அவர்களின் வாழ்க்கை முன்மாதிரியை அறிந்து, அதிலுள்ள மனிதநேய மற்றும் சமூக விழுமியங்களை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான ஒரு முக்கிய சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது.
கொழும்பு மாநகர சபையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மீலாத் நிகழ்வு, மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருத்தாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலிலுர் ரஹ்மான் தெரிவித்தார்.

















