வத்தளை, மாபோல அல்-அஷ்ரஃபிய்யா ஜும்ஆ பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட "மாபோல மதாரஸாக்களுக்கு இடையிலான மீலாதுன்னபி போட்டித் தொடர் - 1448/2026" இன் பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி மாலை அல்-அஷ்ரஃப் தேசிய பாடசாலை மைதானத்தில் மிகக் கோலாகலமாகவும் சிறப்பான முறையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கலந்துகொண்டார். போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மத்ரஸா மாணவ, மாணவிகளுக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் வழங்கி கௌரவித்தனர். முஹம்மத் நபிகளாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்ட இப்போட்டித் தொடரானது, மாணவர்களின் மார்க்க அறிவு, சகோதரத்துவம் மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிக்கொண்டுவருவதாகவும் ஊக்குவிப்பதாகவும் அமைந்தது.
இவ்விழாவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அல்-ஷைக் அர்காம் நூராமித் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன், பிரதேசத்தின் மார்க்கத் தலைவர்கள், மத்ரஸா ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.







