கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றுப் பூர்வீகம் - கலாநிதி ரவூப் ஸெய்ன்

Rihmy Hakeem
By -
0


 கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றுப் பூர்வீகம் 


அறிமுகம்


கம்பஹா இன்றைய மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் ஒன்று. இதுவே இலங்கையின் இளம் மாவட்டம். இலங்கையில் ஆகக்கூடிய சனத்தொகை கொண்ட மாவட்டமும் இதுவே. 1815 ற்கு முன்னர் அடர்ந்த வனாந்தரம். 1387 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இம்மாவட்டத்தில் தோராயமாக  125 000 முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். 


மொத்த சனத்தொகையில் இது சுமார் ஐந்து வீதமாகும். 2024 இன் சனத்தொகை மற்றும் வீட்டுவசதிகள் தொகை மதிப்பீட்டின் படி 24,33,685 பேர் இந்த மாவட்டத்தில் உள்ளனர் .இது கொழும்பு மாவட்டத்தை விட அதிக சனத்தொகை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது மாவட்டமான களுத்துறையை விட இரு மடங்கு அதிக சனத்தொகையை உள்ளடக்கியது என்பதும் கவனிக்கத்தக்கது.


கம்பஹா இலங்கையின் வரலாறு நெடுகிலும் முக்கியத்துவம் பெற்று வந்துள்ளமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு காலத்தில் இது கறுவா சேமிக்கும் மையமாக (Cinnamon Collective Hub ) இருந்துள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கம்பஹா பொருளாதார தாப்பரியம் கொண்ட பிராந்தியமாக பெரு வளர்ச்சி கண்டது. 


1876 இல் ஹேனரத்கொட தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டதன் பின்னர் உல்லாசப் பயணிகளைக் கவரும் கேந்திரமாக மாறியது. அத்தனகலு ஐயாவை அண்டிய பகுதிகளில் முதன் முறையாக பிரேசிலிய இரப்பர் பயிரிடப்பட்டதைத்தொடர்ந்து முக்கிய ஏற்னுமதிப்பயிர் வலயமாகவும் இது மாறியது .


தலைநகர் கொழும்பில் இருந்து வடக்குப் புறமாக அமைந்துள்ள இம்மாவட்டம் 1979 இல்தான் கொழும்பில் இருந்து வெட்டி வேறாக்கப்பட்டது. கம்பஹா என்பது வரலாற்று ரீதியாக ஐந்து கிராமங்களை உள்ளடக்கியதால்தான் அந்தப்பெயர் வந்துள்ளது. இஹலகம' பஹலகம, மெதகம, அலுத்கம, யாகொட என்பனவே அவ்வூர்கள். 


உண்மையில் இம்மாவட்டத்தில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய விளையும் யாரும் கம்பஹா மாவட்டம் என்ற நவீன நிருவாக அலகொன்றின் வரலாற்றை தனித்து ஆராய முற்படக்கூடாது. வரலாற்றை சிறு சிறு அலகுகளாக ஆராய விளையும் போது பொதுவாக ஏற்படும் பிரச்சினை என்னவெனில் மொத்த வரலாற்றிலிருந்து அவற்றைப்பிரித்து சிறு கூறுகளாக்க முடியாதென்பதே.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் மாகாண முறைமை உருவானது. பின்னர் நிருவாகத்தேவை கருதி மாவட்ட முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆக இன்றைய கம்பஹா பகுதியின் வரலாற்றை நாம் ஆராய முற்படுகையில் பண்டைய இலங்கையின் மேற்குப்பிராந்தியத்தின் வரலாற்றையே நாம் ஆய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது. 


இலங்கையில் முஸ்லிம் வரலாற்றுப் பூர்வீகம் எப்போது ஆரம்பிக்கின்றது? முதற் குடியேற்றம் எங்கே நிகழ்ந்தது? இலங்கைக்கு முதலில் வந்து குடியேறியவர்கள் யார் ? அதாவது இலங்கை முஸ்லிம்களின் மூதாதையர்கள் அறேபியர்களா ? அல்லது தெற்கு தென்கிழக்கு முஸ்லிம்களா ?தென் வட இந்தியர்களா என்ற கேள்விகளுடனும் இந்த ஆய்வு தொடர்புறத்தப்பட வேண்டும்.அதுவே எமக்கு கம்பஹா பிராந்திய முஸ்லிம் வரலாற்றுப்பூர்வீகம் குறித்த முழுச்சித்திரம் ஒன்றைத்தரும் என எதிர்பார்க்கலாம். 


வரலாற்றை முடியுமான வரை அறிவியல் பூர்வமாகவும் விஞ்ஞானத்தன்மையுடனும் தர்க்கரீதியாகவும் தகவல் முரண்பாடுகள் இன்றியும் கால வரிசைப்படி ஒத்திசைவான ஒழுங்கில் ஒரு சகட ஒட்டத்துடன் ஒப்புவிக்க வேண்டியது கட்டாயம். ஒன்றுக்கொன்று முரண்பட்ட கால வரிசையோ தகவல் முன்வைப்போ அங்கு இடம் பெறுமானால் அந்த வரலாற்று எழுதுகை நம்பகத்தன்மையை இழந்து விடும் .ஆக ஊர்ஜிதம் செய்யப்பட்ட உண்மைகளை காய்தல் உவத்தலின்றி அறிவார்ந்த நிலையில் தொகுத்தளிக்கும் ஒரு கடினமான முனைவே வரலாற்று எழுதியல்  Historiography) என்பதை மனங்கொண்டு இந்தக்கட்டுரை கம்பஹா மாவட்ட முஸ்லிம் வரலாற்றைப் பேச விளைகிறது.


வரலாற்றுப் பூர்வீகம் 


இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தென்மேற்குப் பகுதியில் இடம்பெற்ற பூர்வீகக்குடியேற்றங்கள் மூலமே ஆரம்பிக்கின்றது எனத்துணிந்து கூறலாம். தென்மேற்கில் கொழும்பு பேருவளை என்பவற்றோடு நீர்கொழும்பும் அன்றைய காலத்தில் முக்கியமானவை. அரேபியர்கள் இஸ்லாத்தின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தெற்கு தென்கிழக்காசியாவுடன் நீண்ட வர்த்தக வாணிப தொடர்புகளைப்பேணி வந்துள்ளனர். கடல்கடந்த வணிகம் கடற்பாதை பற்றிய பரந்த அறிவு போன்றன அவர்களை சர்வதேச வணிகத்திற்கு தூண்டுதல் அளித்துள்ளன.


இந்த வகையில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையின் மேற்குக்கரையேரங்களுக்கு வந்து சென்ற அரேபிய வணிகர்கள் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் அங்கு தற்காலிகமாக தங்கியிருந்துள்ளனர். ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் இலங்கையின் மேற்குக்கரையோரங்களில் நிரந்தரக் குடிகளாக மாறியுள்ளனர். இஸ்லாம் அறிமுகமானவர் பின்னர் அறபுலகின் புதிய மார்க்கத்தை ஏற்று இலங்கையில் ஒரு இஸ்லாமிய சமுக அமைப்பு படிப்படியாகத்தோற்றம் பெற ஆரம்பித்தது.


சீன ரோமானிய கிரேக்க அராபிய இந்திய ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் உள்ளிட்டு இலங்கையின் சிரேஷ்ட வரலாற்றாசிரியர்கள் அனைவரும் போல் ஒப்புக்கொண்டுள்ள ஒரு வரலாற்று உண்மை இது. ஆக தென்மேற்கு முஸ்லிம் பூர்வீகம் என்பது வரலாற்றில் மிகவும் பின்னோக்கிய மூல வேர்களைக்கொண்ட ஒரு தோற்றப்பாடு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 


மேற்கு எனும்போது கொழும்பு பல நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஒரு துறைமுகமாக அறிமுகமாகியுள்ளது .இங்கேதான் அறைபியர்கள் முதலில் குடியேறி இருக்க வேண்டும் என அனுமானிப்தற்கு ஏதுவான காரணிகள் பல உண்டு. அதுபோல் ஒரு காலத்தில் உலகப் புகழ்பெற்ற இறங்கு துறையாக விளங்கிய நீர் கொழும்பும்  அரேபிய வர்த்தகர்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய இடமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.


இன்றைய கம்பஹா மாவட்ட முஸ்லிம் வரலாற்றைப் நாம் இரு வேறு காலப்பகுதியுடன் தொடர்புறும் வரலாறாக நோக்க வேண்டியுள்ளது. இம்மாவட்டத்தின் கரையோரங்களைக் கொண்டுள்ள பிரதேசங்களில் முஸ்லிம்களின் குடியேற்றம் ஏனைய பிரதேச குடியேற்றங்களை விடவும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறிப்பாக நீர்கொழும்பு மற்றும் களனி அதனையண்டியுள்ள பலகத்துறை (கம்மல்துறை), காமச்சோடை பெரிய முல்லை போன்ற பிரதேசங்களில் நிகழ்ந்த குடியேற்றங்கள் கொழும்பில் முஸ்லிம்கள் குடியேறிய கால அளவுக்கு சமாந்தரமானவை. இரண்டு பிரதேச அராபிய குடியேற்றங்களிலும் ஒரு கால் ஒத்திசைவு உண்டு.


மல்வானை, பஸ்யாலை , கள்எலிய, கஹடோவிட, உடுகொட,திஹாரி போன்ற பிரதேசங்கள் கடற்கரையோரங்களிலிருந்து சேய்மைப்பட்டிருப்பதால் அவற்றில் இடம்பெற்ற முஸ்லிம் குடியேற்றங்கள் ஒப்பீட்டு ரீதியில் பிற்காலத்தில் குரியன எனலாம். ஆக இரண்டு காலப்பிரிவுகள் ( Historical periods)  இந்த மாவட்ட முஸ்லிம் வரலாற்றுப்பாரம்பரியத்துடன் தொடர்புறுவதை அவதானிக்கலாம். அவற்றை வெவ்வேறு கோணங்களில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.


மாவட்டத்தின் கரையோர முஸ்லிம்களின் வரலாற்றுப் பூர்வீகம் இஸ்லாத்துக்கு முன்னரான அரேபிய வம்சாவளியினரின் ஆரம்பக்குடியிருப்புகளுடன் இணைத்து நோக்கத்தக்கது. குறிப்பாக நீர்கொழும்பு பிரதேச வரலாறு பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது என்பதற்கு ஏதுவான காரணிகள் பல உள்ளன. கொழும்பு மற்றும் மன்னார் போன்ற மாபெரும் துறை முகங்களுக்குப் புறம்பாக நீர்கொழும்பும் ஒரு முக்கிய வணிகத் துறைமுகமாக வரலாற்றில் நன்கு அறியப்பட்டுள்ளது.


மத்திய கால அராபியர்கள் மத்தியில் நீர்கொழும்பு இறங்கு துறை பெரும் செல்வாக்குப்பெற்றிருந்தமைக்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஏனெனில் நீர்கொழும்பு ஒரு காயல் கழி  ஆகும். மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட தரைப்பகுதியையே பொதுவாக காயல் கழி என்பர். நீர்கொழும்பில் கப்பல் நிற்பதற்கான இறங்குவது மை உள்ளது.மேலும் காயல் கழி பருவக்காற்று களின் தாக்கத்தைக் தடுக்கக்கூடியவை. பருவக்காற்று கள் தீவிரமாக வீசும் காலங்களில் அராபிய மாலுமிகள் நீர்கொழும்பில் தங்கியிருந்து கப்பல்களுடன் தொடர்பான பல திருத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.( எம்.எம்.எம் மஃரூப் 1998இக்க)


கப்பல்களின் பாய்களை புதுப்பித்தல், கயிறுகளை மாற்றுதல் போன்றவற்றில் அறேபியர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உண்டு. இதன் விளைவாகவே கம்மல்துறை என்ற பெயர் வந்தது. கப்பல்களைத்திருத்தும் பட்டறையே கம்மல்துறையாக அறிமுகமானது. கொச்சிக்கடை கப்பல் கட்டுவதில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதாரம் தந்த கேரளாவாசிகளைக் குறிக்கின்றது. இப்படி கப்பல் வணிகம் தொடர்பான ஒரு நீண்ட வரலாறு கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பிற்கு உண்டு. பண்டைய இலங்கையில் அறாபியர்களின் வருகையும் காலப்போக்கில் அவர்களது குடியேற்றும் அங்கு நிகழ்ந்துள்ளது என்பதை இலகுவில் நாம் அனுமானிக்கலாம்.


R. Reven Hart என்பவர் தனது Ceylon history in stone (1973) என்ற நூலில் நீர்கொழும்பின் ஹல்வா குறித்து சிலாகித்து எழுதியுள்ளமையும்  நமது கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றது. வறுத்த அரிசி இடித்த அரிசி மா , சர்க்கரை, மரமுந்திரிகை , தென்னம்பாணி, நெய், பன்னீர், நச்சீரகம் போன்றவற்றை உள்ளக்கியதே நீர்கொழும்பு ஹல்வா என்று றெவென்ட் எழுதுகிறார். ரொபர்ட் நொக்ஸும் இது குறித்து எழுதியுள்ளார்.நீர்கொழும்பு ஹல்வா தலைசுற்றுக்கு நல்லது.அதிக தாகம் கொண்டோர் அதனுடன் நீரையும் சேர்த்து அருந்தினால் தாகம் தீர்ந்தது விடும். மாலையில் மிக உகந்த தீன்பண்டம் நீர்கொழும்பு ஹல்வா என்கிறார் நொக்ஸ் .


மாவட்டத்தின் உள்நோக்கிய பிரதேசங்களில் (inland areas) குடியேற்றங்கள் எப்போது நிகழ்ந்து என்ற கேள்விக்கு ஒருபடித்தான விடை கிடைக்கவில்லை.ஒவ்வொரு பிரதேசத்திலும் வெவ்வேறுபட்ட காலப்பகுதியில் இத்தகைய குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொழும்பு, பேருவளை,திக்வெல்லை, களுத்துறை அளுத்கம போன்ற பிரதேசங்களிலிருந்தே இந்தக்குடியேற்றம் நிகழ்ந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களும் ஆங்காங்கே கிடைக்கப் பெறுகின்றன. மாபொல வத்தளை பேலியகொட போன்ற பிரதேச முஸ்லிம் வரலாறு ஒப்பீட்டு ரீதியில் பிற்காலத்திற்குரியவை   என்பதும் கவனிக்கத்தக்கது.


வரலாற்றில் இன்றைய கம்பஹாவின் ஒரு பகுதி சியனே கோரளைக்கு உட்பட்டிருந்தது. இக்கோரளை அனுராதபுர யுகத்தில் ரன்துனு கோரளை எனவும் களனி யுகத்தில் கல்யாணி கோரளை எனவும் கோதபாய மன்னன் காலத்தில் அத்தனகலு கோரளை எனவும் மாயாதுன்னை யுகத்தில் மாயாதுன்னை கோரளை எனவும் சீதவாக்கை யுகம் முதல் சியனே கோரளை எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பைச்சூழவுள்ள கரையோரப் பிரதேசங்கள் ஏழு கோரளை (சத் கோரளை) என வழங்கப்பட்டது.


இஸ்லாமிய யுகத்தில் இலங்கையின் மேற்கு கரையில் வாழ்ந்து வந்த அரேபியர்கள் மத்தியில் அறிமுகமான இஸ்லாத்தை அடியொற்றிய முஸ்லிம் சமுகம் ஒன்று நாட்டில் படிப்படியாக உருவாகத்தொடங்கியதை நாம் முன்னர் கண்டோம். ஐரோப்பியர் யுகத்தில் அத்தகைய முஸ்லிம் குடியிருப்புகள் செறிவாக வளர்ச்சியடைந்தன .16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கை வந்தபோது இன்றைய கம்பஹா உள்ளங்கிய அன்றைய மேற்குப் பிராந்திய த்தில் முஸ்லிம்கள் குறிப்பிடத்க்களவு வாழ்ந்து வந்துள்ளனர்.


போர்த்துக்கேயர் இலங்கையை அடைந்தபோது மன்னார் முதல் வெலிகாமம் வரையான கரையோரப்பிரதேசங்கள் முழுவதிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளதை அவர்கள் அவதானித்தனர். புத்தளம் சிலாபம் மாதம்பை களுத்துறை மக்கொன பயாகலை பேருவளை அளுத்காமம் காலி மாத்தறை வெலிகம என்ற  இந்த வரிசையில் நீர்கொழும்பும் இடம்பெறுகின்றது.


ஐரோப்பியர் காலனித்துவ காலத்தில் .......

----------------------------------------------------------------


ஆறாம் விஜயபாகுவின் படுகொலைக்குப் பின்னர் கோட்டை ராச்சியம் கோட்டை , சீதாவக்கை, ரைகம என மூன்றாகப்பிளவுபட்டது .கோட்டை ராஜ்ய ஆட்சியாளன் புவனேகபாகு போர்த்துக்கேயரின் அழுத்தங்களுக்குப்பணிந்து கொழும்பு முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோரை கோட்டையிலிருந்து வெளியேற்றினான். அவர்களில் பெரும்பான்மையினர் கண்டி இராச்சியத்தில் செனரத் மன்னனால் வரவேற்கப்பட்டனர். பின்னர் ஒரு தொகையினர் கிழக்கு மாகாணத்தில் குடியமரத்தப்பட்டனர்.அவர்கள் ஏலவே அங்கு வாழ்ந்துவந்த முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். 


இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் ஒரு தொகையினர் சீதவாக்கையில் குடியேறினர். மன்னன் மாயாதுன்னை அவர்கள் சீதவாக்ஐ ராஜ்ஜியத்தில் குடியேற அனுமதித்தான். களனி ஆற்றுப்படுக்கையை ஒட்டி கொழும்பிலிருந்து அவிஸ்ஸாவலை வரையான பிரதேசமே சீதவாக்கை சாம்ராஜ்யமாக உருவாக்கப்பட்டது.  மாயாதுன்னையே அதன் ஸ்தாபகர். புவனேகபாகு மாயாதுன்னைக்கு எதிரான போர்களில் போர்த்துக்கேயரை உதவிக்கழைத்த போது போர்த்துக்கேயருக்கெதிராக மாயாதுன்னை கொடுத்த போர்களில் இந்தியாவின் கள்ளிக்கோட்டை மன்னன் ஸெமொரினின் படைப்பை உதவிமைப்பெற இடைத்தரகர்களாக முஸ்லிம்களைப்பயன்படுத்தலாம் என மாயாதுன்னை எண்ணினான்.


மாயாதுன்னை கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு அடைக்கலம் வழங்கியமைக்கான இரண்டாவது பிரதான காரணம் அவ்வாறு தனது ராஜ்யத்தில் குடியேறும் முஸ்லிம்களும் தனது படையில் இணைந்து போர்த்துக்கேயருக்கெதிராகப்போராடுவார்கள் என்று அவன் எதிர்பார்த்தான். உண்மையில் அந்த எதிர்ப்பார்ப்புடன் ஈடேறியது. முஸ்லிம்கள் அவரது காலத்தில் இடம்பெற்ற அனைத்துப் போர்களிலும் பங்கெடுத்தனர் .அவரது மறைவுக்குப்பின்னர் அவரது மகன்  டிகிரி பண்டார போர்த்துக்கேயருக்கெதிராக கொடுத்த அத்தனை போரிலும் முஸ்லிம்கள் படைவீரர்களாகப் பங்குகொண்டனர்.


கம்பஹா மாவட்டத்தில் களனி ஆற்றுப்படுக்கையைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலான முஸ்லிம் குடியிருப்புக்கள் அனைத்துமே இந்த கோட்டை சம்பவத்தின் பின்னரரே நிகழ்ந்தது என்பது இதன் பொருளல்ல. இன்றைய நாபாவல, தல்துவ, மல்வானை போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் ஒரு தொகையினர் ஏற்கனவே அங்கு வாழ்ந்துவந்த முஸ்லிம்களுடன் இணைந்து கொள்ள இது வழிகோலியது என்பதே உண்மை.


இவ்வாறு குடியேறிய முஸ்லிம்கள் போர்த்துக்கேயருக்கெதிரான அனைத்துப் போர்களிலும் படைவீரர்களாகப்பங்குகொண்டு தேசத்தின் இறைமையப்பாதுகாப்பதற்கும் அந்நியரின் ஆக்கிரமிப்பை முறியடிக்கவும் ஆற்றிய இராணுவப்பஙகளிப்பு வரலாற்றில் என்றைக்கும் பேசப்படுமளவு மகோன்னதமானது .இதை இந்தக்கட்டுரையின் இறுதியில் நான் எடுத்தாள் விரும்புகிறேன்.


எவ்வாறாயினும், சீதவாக்கை சாம்ராஜ்யம் ஒரு கட்டத்தில் போர்த்துக்கேயரின் கைகளில் வீழ்ந்தது. கோட்டையின்புவனேகபாகுவும் இறந்துபோனான். இலங்கையில் போர்த்துக்கேயரின் முழு ஆதிக்கம் தலைதூக்கியது. கோட்டை சீதவாக்கை ரைகம பாணமை மட்டக்களப்பு கொட்டியாரம் ஆகியன போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தன.இதனைத்தொடர்ந்து மல்வானை மாநாடு நடைபெற்றது. 


இம்மாநாட்டுத்தீர்மானங்களின் பிரகாரம்  'அசிவிடோ' என்ற போர்த்துக்கேய தளபதி போர்த்துக்கல் என்ற காலனித்துவ அரசின் இலங்கை பிரதிநிதியானான். இலங்கையில் அதுமுதல் போர்த்துக்கேயர் ஆட்சி ஆரம்பித்தது. இந்தக்கால கட்டத்தில் இன்றைய கம்பஹா முஸ்லிம்கள் போர்த்துக்கேயரின் ஆட்சியை மௌனமாக ஏற்றுக்கொள்ளும் நிலை உருவானது.சில சமரச முயற்சிகளோடு தம்மீதான போர்த்துக்கேய பகை முரண்பாட்டை அவர்கள் முடிவுக்கு கொண்டுவந்தனர்.


ஒல்லாந்தரும் முஸ்லிம்கள் குறித்து சுமாராக போர்த்துக்கேயரின் அதே வகையான பகைமுரண்பாட்டுக் கொள்கையைத்தான் பின்பற்றினார்கள். ஆனால் அவர்களது இறுதிக்காலப் பகுதியில் சில நெகிழ்ச்சியான போக்கை அவர்கள் கடைப்பிடித்தார்கள். முஸ்லிம்களிடம் காணப்பட்ட திறமைகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே இத்தகைய நெகிழ்வான அணுகுமுறைகளை அவர்கள் பின்பற்றினார்கள். அக்கால முஸ்லிம்களிடம் மூன்று முக்கியமான திறமைகள் இருந்ததை ஒல்லாந்தர் கண்டனர்.


முதலாவது வியாபாரத்துறையிலான முஸ்லிம்களின் அபார நாட்டமும் ஈடுபாடும் அத்துறைசாரந்து அனுபவங்களும். இரண்டாவது கடற்பயண அனுபவங்கள் அதனுடன் தொடர்பான அறிவும் ஆற்றலும். மூன்றாவது மருத்துவத்துறை ஈடுபாடும் ஆற்றல்களும். இவற்றை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அவ்வப்போது முஸ்லிம்களை அவர்கள் நெகிழ்வாக கையாளக் தொடங்கினர். அந்தவகையில் இப்போது கம்பஹா மாவட்டம்ஹ என அறியப்படும் அப்போதைய இலங்கையின் மேற்குப்பிரதேசத்தில் வாழ்ந்த சில முஸ்லிம் மருத்துவர்களை ஒல்லாந்தர் தமது மருத்துவத்தேவைகளுக்கு பயன்படுத்தினர்.


உதாரணமாக, இலங்கையின் மேற்குப் பிராந்தியத்தில் அப்போது வாழ்ந்துவந்த முஸ்லிம் வணிகர்கள் தனித்து இறக்குமதி செய்ய முடியாது எனவும் ஒல்லாந்த கம்பெனிகளுடன் இணைந்தே இறக்குமதி செய்ய முடியும் எனவும் சட்டங்களைப் பிறப்பித்தனர். இதன்மூலம் முஸ்லிம்களின் கடல்கடந்த வணிக அனுபவங்களை தமக்குச்சார்பாகவும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். மற்றொரு உதாரணம் கிரிந்திவல எனும் இடத்தில் வாழ்ந்த காஸி லெப்பை சுலைமான் லெப்பை என்ற  மருத்துவரை கண்டி தும்பர திஸாவை தனது மகனுக்கு சிகிச்சையளிக்க கண்டிக்கு அழைத்தார். அவருக்கு பெரும் மரியாதை அளித்தார்.பின்னர் அம்மருத்துவர் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் இருந்த சியனே கோரளைக்குப்பாதுகாப்பாகத் திரும்பினார். (ஸபறுல்லாஹ் 1988).1792 இல் நடைபெற்ற ஒல்லாந்தர் அரச சபை இரகசிய கூட்ட அறிக்கைகள் இதனைக் குறிப்பிட்டுள்ளன.


ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கம்பஹா பிரதேச முஸ்லிம்கள் சில பயன்பாடுகளையும் பெற்றனர். ரம்புட்டான் பழம் மல்வானைக்கு வருவதற்கு ஒல்லாந்தரே காரணமாகும். மலேசியாவின் பெரும்பகுதியும் இந்தோனேசியாவின் பட்டாவியாவும் (இன்றைய தலைநகர் ஜகார்த்தா )ஒரு காலத்தில்  ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழ் இருந்தன. இதனால் ஒல்லாதர்கள் இலங்கைக்கு அதிகமான மலாய் முஸ்லிம்களைக்கொண்டுவந்து இராணுவ வீரர்களாகப்பயன்படுத்தினர். மறுபுறம் மலேசியாவின் உயர்ந்த ஏற்றுமதித் தகுதி வாய்ந்த ரம்புட்டானையும் மல்வானையில் கொண்டு வந்து பயிரிட்டனர் மல்வானை இன்று ரம்புட்டானுக்கு பிரபல்யம் எனில் அதற்கு வழிவகுத்தவர்கள் ஒல்லாந்தர்களே.


ஆங்கிலேயர் காலத்தில் இன்று கம்பஹா என வழங்கப்படும் இந்தப்பிரதேசம் பெரும் விவசாய நிலமாக மாறியது.கறுவாக்கு பெயர்போன பிரதேசமாக இருந்தது.ஏனைய விவசாய உணவுப்பயிர்களும் இங்கே பெருமளவு பயிரிடப்பட்டது. இன்று இலங்கயில் அதீத நகரமயமாக்கப்பட்ட இரண்டாவது மாவட்டமாகவும் சனத்தொகை கூடிய முதல் மாவட்டமாகவும் கம்பஹா இருக்கின்றபோதும் 1815 இற்கு முன்னர் கம்பஹாவின் பெரும்பகுதி அடர்ந்த வனாந்தரமாகவே காணப்பட்டது. இந்த வளமான நிலத்தை பிரிட்டிஷ்காரர்கள் வளமான விவசாய சாகுபடி நிலமாக மாற்றினர்.


போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் முஸ்லிம்களுக்கெதிரான விதித்திருந்த சட்ட இறுக்கங்கள் கடைகள் என்பன பிரிட்டிஷ் காலத்தில் முற்றாகவே தளரத்தப்பட்டன. எல்லா இனங்களுக்கும் மத கலாசார வணிக சுதந்திரங்கள் வழங்கப்பட்டன. கொழும்பில் வாழ முடியாது விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும்  சுற்றியுள்ள பிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு வந்து நிலங்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. புறக்கோட்டையில் காணிகளை வாங்கி கடைகளை கட்டியெழுப்பினர். பிரித்தானியரின் இவ்வகை போக்கு கம்பஹா  முஸ்லிம்களுக்கும் சாதகமாக அமைந்தது.கொழும்புக்கு மீளவும் வந்து புதிய வர்த்தக நிலையங்களை கொழும்பு முஸ்லிம்கள் உருவாக்கியமை கம்பஹா முஸ்லிம்களையும் வெகுவாக ஈர்த்தது


பீங்கான் கோப்பை கண்ணாடி தீந்தை பித்தளைப்பொருட்கள் இரும்புச்சாமான்கள் சப்பாத்துக்கள் குடைகள் தோல் பொருட்கள் கப்பல்களுக்கு பொருட்களை பட்டு வாடா செய்தல் அரிசி போன்ற சகல பொருட்களையும் சந்தைப்படுத்துவதில் கொழும்பு முஸ்லிம்கள் முன்னணி வகித்தனர்..இந்த வாணிபம் கம்பஹா முஸ்லிம்களையும் ஈர்த்தது.அங்கிருந்த செல்வந்தர்கள் கொழும்பில் முதலீடு செய்ய பெரும் தொகை தேவைப்படும் என்பதைக் கவனித்து நீர்கொழும்பில் வணிக முயற்சிகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். அங்கு  வியாபார நிலையங்களை உருவாக்கினர்.


அப்போது இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களின் பொருளாதாரம் பிரதானமாக  இரண்டு பகுதிகளில் தங்கியிருந்தது. கரையோரங்களை அண்டி வாழ்ந்தவர்கள் சிறு சிறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். உள்பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சிறு ஏற்றுமதி பயிர்களை சாகுபடி செய்வதில் கவனம் செலுத்தி வந்தனர். இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கூறுகளில் முஸ்லிம்களின் கவனம் முழுமையாக வர்த்தக வாணிப முயற்சிகளை நோக்கித்திரும்பியது. இன்று வரை இம்மாவட்டத்திலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் வியாபாரத்தையே நம்பி வாழ்கின்றமை கவனிக்கத்தக்கது.


இதேபோன்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பெருமளவிலான முஸ்லிம்கள் சில்லறைக்கடைகளை நடாத்தி வந்தனர். மேசன் தச்சன் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். ஏற்றுமதித்தரம் வாய்ந்த  இனிப்புப்பண்டங்கள்.பிஸ்கட் வகைகள்  போன்றவற்றை உற்பத்தி செய்யும் கைத்தொழில்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். விவசாயத்துறையில் இறப்பர் பயிரிடலிலும் கம்பஹா முஸ்லிம்கள் ஈடுபாடு கொண்டவர்கள்.பலர் இறப்பர் தோட்டங்களில் சொந்தக்காரர்களாக இருந்தனர்.


இலங்கை முஸ்லிம்களின் பொதுவான கல்வி வரலாறு போன்று கம்பஹா முஸ்லிம்களின் கல்வி வரலாறும் மக்தப் எனப்படும் குர்ஆன் பள்ளிக்கூட வரலாறாகவே ஆரம்பிக்கின்றது. திருக்குர்ஆன் ஓதுதல்  மனனம் செய்தல் என்பனவே தொடக்கத்தில்  பிரபலம் பெற்றிருந்தன. முறைசார் கல்வியை ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்யும் வரை மதக்கல்விக்கூடங்களே பிரதான கல்வி நிலையங்களாக விளங்கின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கூறுகளில் முறைசார் பாடசாலைகள் படிப்படியாக தோற்றம் கொள்ளத்துவங்கின. இன்று இம்மாவட்டத்தில் சில பல்கலைக்கழகங்கள் தோன்றுமளவு கல்வி வளர்ச்சி பெற்றுள்ளதோடு பத்தொன்பது முஸ்லிம் பாடசாலைகளும் கல்வி வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றன.


மொத்தத்தில் கம்பஹா முஸ்லிம்களின் வரலாறு செழிப்பு மிக்க பக்கங்களை கொண்டது. பல  முதுசங்களையும் முன்னோர்களின் சுவாரஷ்யங்களையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்தனியான வரலாறும் பண்பாட்டு ஊடாட்டங்களும் உள்ளன. அவற்றை மொத்தமாக தொகுத்துப் பார்க்கும் ஒரு சுருக்க வரலாறு மட்டுமே இங்கு பகிரப்பட்டுள்ளது. கால வரிசைப்படி நினைவுக்கெட்டிய காலம் முதல் நவீன காலம் வரை கம்பஹா முஸ்லிம்களின் வரலாற்றை ஆழமாக நாம் ஆராயலாம். அது இன்னும் பல நூறு பக்கங்களை எடுத்துக்கொள்ளும் என்பது திண்ணம்.


கலாநிதி றவூப் ஸெய்ன்

31.08.2026.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)