நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான மீலாத் போட்டியை மீண்டும் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.
42-வது தேசிய மீலாதுன் நபி அரச பெரு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 487 மாணவர்களுக்குப் பதக்கங்கள், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் விழா, 2026 செப்டம்பர் 3 ஆம் திகதியன்று மினுவாங்கொட வலயக் கல்வி அலுவலக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தேசிய மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட இப்போட்டியானது, 2026-ஆம் ஆண்டு ஜூலை 29, ஆகஸ்ட் 1, 2, மற்றும் 3 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. இதில் அரச பாடசாலைகள் , தனியார் பாடசாலைகள் மற்றும் அரபுக்கல்லூரிகளைச் சேர்ந்த சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான 3,000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், பேச்சு, கிராஅத் , ஹிப்ழ் , சிறுகதை எழுதுதல், அரபு எழுத்த்தணி (Arabic calligraphy) மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
ஜனாதிபதியின் தலைமையில் 2026 ஆகஸ்ட் 26 ஆம் திகதியன்று நடைபெற்ற 42-வது தேசிய மிலாதுன் நபி பெரு விழாவில், முதல் 24 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பதக்கங்கள், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதேவேளையில், வெற்றி பெற்ற ஏனைய 487 மாணவர்களும் நேற்று மினுவாங்கொடையில் கௌரவிக்கப்பட்டனர். மேல் மாகாணக் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. ஏ.எஸ். நஜீப் அவர்களின் தலைமையில், மேல் மாகாண தேசிய மீலாத் விழா ஏற்பாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, காலை மற்றும் பிற்பகல் என இரு அமர்வுகளாக நடைபெற்றது. காலை அமர்வுக்கு மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் திரு. முனீர் முளப்பர் தலைமை தாங்கினார். பிற்பகல் அமர்வுக்கு பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ருவான் திலக ஜெயகோடி, மினுவாங்கொட நகர முதல்வர் திரு. அசங்க சஞ்சீவ, மினுவாங்கொட பிரதி நகர முதல்வர் திருமதி துவான் பார்வின், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. எம். எஸ். எம். நவாஸ் மற்றும் மினுவாங்கொட வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் உட்படப் பெரும்பாளோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் கம்பஹ மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், இப்போட்டியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தமைக்காக மேல் மாகாண ஏற்பாட்டுக் குழுவினர், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
42-வது தேசிய மீலாதுன் நபி அரச விழாவைச் சிறப்பாக நடாத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பெரியமுல்ல, பொரதோட்ட மற்றும் கமச்சோட ஆகிய இடங்களில் உள்ள பிரதான ஜும்ஆ பள்ளிவாசல்களின் நிர்வாக குழுக்கள் , அப்பகுதி மக்கள் மற்றும் பெரியமுல்ல அல்-ஹிலால் மத்திய கல்லூரி, பொருதோட்ட அல்-பலாஹ் கல்லூரி உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்குத் பிரதி அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்...
"இப்போட்டிகள் ஆரம்பத்தில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போதிலும், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நாட்டைப் பாதித்த ஏனைய காரணங்களால் 2018, 2019 மற்றும் அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மிலாதுன் நபி போட்டி நடாத்தப்படவில்லை. இவ்வாண்டுகள் சிலவற்றில், அரச மிலாதுன் நபி விழா கூட நடைபெறவில்லை. எனவே, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் இப்பாடசாலைப் போட்டிகளை மீண்டும் நடாத்துவது முக்கியம் எனக் கருதுகிறேன். தேசிய மிலாதுன் நபி அரச விழாவானது, தேசிய அளவில் நமது முஸ்லிம் சமூகத்திற்காக உள்ள ஒரேயொரு அரச மட்டத்திலான நிகழ்வாகும். இது தேசிய அளவில் சமயக் கல்வி மற்றும் முஸ்லிம் கலாச்சார தொடர்பான மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதற்கெனப் போதுமான தேசிய நிதியும் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்படுகிறது. இருப்பினும், தேசிய அளவிலான பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் நடைபெறாததால், திறமையான மாணவர்களைக் கண்டறிவதில் தடையாக அமைந்துள்ளது. எனவே, இக்குறித்த விடயத்தை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்; அத்துடன், தேசிய மிலாதுன் நபி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வந்த பாடசாலைகளுக்கிடையிலான போட்டித் தொடரை மீண்டும் தேசிய அளவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
முஷாரிப் மொஹிதீன்,
மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளர்
2026-09-04

