உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் "இலங்கை செவ்விளநீர் கிராமங்கள் 250" (Ceylon King Coconut Villages 250) தேசிய திட்டத்திற்கு அமைவாக, கம்பஹா மாவட்டத்திற்கான விசேட நிகழ்ச்சித் திட்டம் நேற்று (03) காலை மினுவாங்கொடை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பொரகொடவத்த கிராமத்தில் நடைபெற்றது.
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் தொழில் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, தென்னை பயிர்ச்செய்கை சபையின் கம்பஹா மாவட்ட அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது பயனாளிகளுக்கு செவ்விளநீர் கன்றுகள் விநியோகிக்கப்பட்டதுடன், மானியக் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கையை உலகளாவிய செவ்விளநீர் ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கும், உள்நாட்டு செவ்விளநீர் உற்பத்தியை புதிய பாதையில் இட்டுச்சென்று அதன் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், செவ்விளநீர் மற்றும் அது சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கான சர்வதேச சந்தையை விரிவுபடுத்துவதற்கும் இலக்கு வைத்தே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய விஜேசிங்க, ருவன்திலக்க ஜயகொடி, தென்னை பயிர்ச்செய்கை சபையின் கம்பஹா பிராந்திய முகாமையாளர் சமன் ஹேரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஊடகப் பிரிவு - கம்பஹா

