காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 35ஏ-வுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இதன் மீது முடிவு எடுத்தால் மாநிலத்தில் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்றும், 2018 இறுதிவாக்கில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் முயற்சிகள் பாதிக்கப்படும் என்றும் மாநில மற்றும் மத்திய அரசுகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தின் நிரந்தக் குடிமக்களாக யார் கருதப்படுவார்கள் என்று வரையறை செய்யும் உரிமையை, இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிப்பதாக அரசியல் சட்டப்பிரிவு 35ஏ உள்ளது. அவர்களுக்கு சிறப்பு முன்விருப்ப உரிமைகள் அளிக்கவும் அது வகை செய்கிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு சொத்துகள் வாங்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது என்பது அதில் முக்கிய அம்சம்.

அரசுப் பணிகள், கல்வி உதவித் தொகைகள் மற்றும் இதர உதவித் தொகைகள் குறித்த விஷயங்களிலும் அது கட்டுப்பாடு செலுத்துகிறது.


அரசியல் சட்டப் பிரிவு 35ஏ அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர். ஆனால், அந்த சட்டப்பிரிவை ரத்து செய்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தைப் பாதுகாப்பது என்ற இந்திய அரசின் வாக்குறுதி மீறப்படுவதாக இருக்கும் என்றும், நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாநிலமாக உள்ள காஷ்மீரில் சமூக அமைப்புக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்றும், இந்த சட்டப்பிரிவை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.


என்ன நடந்தது?

அரசியல் சட்டப் பிரிவு 35ஏ-வுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் 2019 ஜனவரிக்கு ஒத்திவைத்து முன்பு உத்தரவிட்டது.

இந்த ஆண்டு செப்டம்பர், டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த சமயத்தில் இதுகுறித்து முடிவு எடுத்தால் தேர்தலுக்கு முன்னதாக பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்றும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசாங்கம் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் பாலமாக இருப்பதற்காக, மத்திய அரசால் நியமிக்கபட்டுள்ள, மாநிலத்தின் புதிய ஆளுநர் சத்யபால் மாலிக்கும், இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.


இன்றைய விசாரணைக்கு முந்தைய காலங்களில், சட்டப் பிரிவு 35ஏ-வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை எதிர்த்து சில போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் இந்தப் போராட்டங்களுக்குப் பரவலாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அது ஏன் நடந்தது?

அரசியல் சட்டப்பிரிவு 35ஏ-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தி சிட்டிசன்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு 2014 ஆம் ஆண்டு முதலில் மனு தாக்கல் செய்தது. அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும், அரசியல் சட்டப் பிரிவு 368-ன் கீழ் இந்த சட்டப் பிரிவு சேர்க்கப்படாத காரணத்தால், இது ''அரசியல் சட்டத்துக்கு விரோதமானது,'' என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அதற்குப் பதிலாக அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ பயன்படுத்தி 1954 மே 14ஆம் திகதி குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலமாக சட்டப்பிரிவு 35ஏ சேர்க்கப்பட்டது என்று பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் தனக்கான சட்டங்களை உருவாக்கிக் கொள்வதற்கும்இ அதற்கென தனியாக அரசியல் சாசனம் வைத்துக் கொள்ளலாம் என்றும் இது அனுமதி அளிப்பதாகவும் பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி 1954 மே 14ஆம் திகதிக்கு முன்னதாக அங்கு பிறந்தவர் அல்லது குடியேறியவரோ, அல்லது 10 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து, அசையா சொத்துகளை ''சட்டபூர்வமாக வாங்கியவரோ'' மட்டுமே நிரந்தரக் குடிமக்களாக இருப்பார்கள் என்று இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது.

இருந்தபோதிலும்இ ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான ''தற்காலிக ஏற்பாடாக'' மட்டுமே அரசியல் சட்டப் பிரிவு 370 உள்ளது என்றும், சட்டப் பிரிவு 35ஏ ''ஒன்றுபட்ட இந்தியா என்ற அடிப்படைக் கோட்பாட்டை'' மீறுவதாக உள்ளது என்றும் தி சிட்டிசன்ஸ் அமைப்பு வாதிட்டது.

காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள், அந்த மாநிலத்துக்கு வெளியில் உள்ள ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், சொத்துரிமை பெற முடியாது என்று இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் தடை விதிக்கப்படுவதால், அது பெண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டப்பிரிவாக இருக்கிறது என்று கூறி டெல்லியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் வேறொரு மனு தாக்கல் செய்துள்ளார்.


உணர்வுப்பூர்வமான விஷயம் என்ன?

வேறு மாநில மக்கள் சொத்துகளை உடமையாக்கிக் கொள்ள அனுமதித்தால், மாநிலத்தின் சமூக அமைப்பு மாறிவிடும் என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.

அந்த சட்டப் பிரிவை ரத்து செய்தால், மத்திய அரசுடன் விரிசலில் இருக்கும் அந்த மாநிலத்தின் உறவு பாதிக்கப்படும் என்று மற்றவர்கள் கவலைப்படுகிறார்கள்.

1980களின் இறுதியில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருவதன் காரணமாக, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பதற்றம் மிகுந்ததாகவே இருக்கிறது.


இந்துக்கள் தங்கள் மாநிலத்தில் குடியேறுவதை இந்து தேசியவாத குழுக்கள் ஊக்கப்படுத்துகின்றன என்று காஷ்மீர் மக்கள் பலரும் சந்தேகிக்கிறார்கள்.

''மாநிலத்தில் சமூக அமைப்பை மாற்றுவதற்காக திட்டமிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. என்ன நடந்தாலும், அவ்வாறு நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,'' என்று தி வயர் இணையதளத்துக்கு ஆகஸ்ட் 3ஆம் திகதி அளித்த பேட்டியில் பிரிவினைவாத தலைவர் மிர்வைஸ் உமர் பாரூக் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ள உறவில்இ சட்டப் பிரிவு 35ஏ முக்கியத்துவம் வாய்ந்தது என்று மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி (NC) ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் கூறுகின்றன.


''ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான சிறப்பு உரிமைகளும், முன்விருப்ப உரிமைகளும் பாதிக்கப்பட்டால், இந்திய தேசியக் கொடி அல்லாத வேறு கொடியை ஏந்துவதற்கு மாநிலத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்,'' என்று பி.டி.பி.யின் தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி கூறியதாக ஜூலை 28 திகதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

சட்டப் பிரிவு 35ஏ தொடர்பான சட்டப் போராட்டம் ''காஷ்மீர் பகுதியில் இந்திய ஆதரவு அரசியலுக்கு மரண அடியாக இருக்கும்'' என்று அவருடைய அரசியல் எதிரியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

''மாநிலத்தின் தன்னாட்சியைக் குறைப்பதற்கு புதுடெல்லி எப்போதும் சதி செய்து வருகிறது என்று கூறப்படும் கருத்துகளுக்கு வலுவூட்டும் வகையில் இப்போதுள்ள காஷ்மீரின் நிலைமை இருக்கிறது, கடந்த 70 ஆண்டு கால வரலாறு அப்படித்தான் இருக்கிறது,'' என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர் அப்சர்வர் என்ற பத்திரிகையில் ஆகஸ்ட் 2ஆம் திகதி வெளியான தலையங்கம் கூறுகிறது.

''இந்த விஷயம் மிகவும் உணர்வுப்பூர்வமானது,'' என்று கூறியுள்ள மத்திய அரசின் வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், இதுகுறித்து ''விரிவான விவாதம்'' நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

''அரசியல் சட்டப் பிரிவு 35 ஏவுக்கு எதிராக ஏதாவது செய்யப்பட்டால், இந்தியாவுடனான உறவு உடனடியாக முறிந்துவிடும்,'' என்று ஜம்மு காஷ்மீர் ஒத்துழைப்புக் கமிட்டி என்ற உள்ளூர் மக்கள் அமைப்பு ஏற்கெனவே கூறியுள்ளது என்று காஷ்மீர் அப்சர்வர் பத்திரிகை சென்ற ஆண்டு ஆகஸ்ட் 26ல் எழுதியுள்ளது.

(BBC - Tamil)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.