( ஐ. ஏ. காதிர் கான் )

   காணிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஒரே நாளில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
   கம்பஹா மாவட்ட செயலகக் காரியாலய வளவில் அமைக்கப்படவுள்ள ஏழு மாடிகளைக்கொண்ட கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 
   சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க, கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இவ்வைபவத்தில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
   நாம் எமது அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்கி வருகின்றோம். அந்த வகையில், ஏழு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் ஒன்றுக்கு இன்று அடிக்கல் நடப்படுகிறது.
இக்கட்டிடம் 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும். இதன் மூலம், கம்பஹா மாவட்ட மக்களுக்கு ஒரே கூரையின் கீழ், பரந்தளவிலான சேவைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
இலங்கையிலேயே அதிக சனத்தொகையைக் கொண்ட மாவட்டமாகக் கருதப்படும் கம்பஹா மாவட்டத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் இருந்து வந்துள்ளன. இதனை, இம்மாவட்ட மக்களுக்குத் தீர்த்துக் கொடுக்கும் வகையிலேயே, இப்பாரிய கட்டிடத்தொகுதியை நாம் நிர்மாணிக்கின்றோம். இதற்கு, சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெரும் பங்களிப்பு எமக்குக் கிடைத்திருப்பதை, இங்கு நான் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
   காணி உறுதிப்பத்திரம் ஒன்றை இனிமேல் பெறும்போது, காலையில் சமர்ப்பித்து அன்றைய தினமே மாலையில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதனை நாம் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளோம்.
   இதேவேளை,  பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுகளையும், இவற்றின் பத்திரங்களையும், மிகவும் பாதுகாப்பான முறையில் தரம்மிக்கதாகப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மிகத்துரிதமாக மேற்கொண்டு வருகின்றோம். இது தவிர, 155 வருடங்கள் பழைமை வாய்ந்த பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சகல சேவைகளையும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும்,  மிகச்சிறந்த நடைமுறைத்திட்டத்தின் கீழ் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.