நியமனங்கள் குறித்து சட்ட மாஅதிபரின் ஆலோசனையைக் கோரும் அரசியலமைப்பு சபை


சுதந்திர ஆணைக்குழுவுக்கு அங்கத்தவர்கள் மற்றும் தலைவரை நியமனம் செய்தல், உயர் நீதிமன்றங்களுக்கு நீதியரசர்களை நியமித்தல் ஆகிய நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மேம்படுத்துவது தொடர்பாக அரசியலமைப்பு சபை சட்டமா அதிபரின் அபிப்பிராயத்தை கோரவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அரசியலமைப்பு சபை, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற தொகுதியில் கூடிப் பேசிய போதே இந்த தீர்மானத்தை எடுத்தது. இவ்வாறான நியமனங்களை அங்கீகரிக்கையில் அரசியலமைப்பு சபை பின்பற்றும் நடைமுறைகள் உசிதமானதாக இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் மட்டுமன்றி ஜனாதிபதியும் விமர்சித்திருந்தார்.  

அரசியலமைப்பு சபை தொடர்பாக பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற விவாதத்தின்போது விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் வகையிலான விளக்க குறிப்பு ஒன்றை கடந்த சனிக்கிழமை அரசியலமைப்பு சபை ஊடகங்களுக்கும் அனுப்பியிருந்தது. அத்துடன் தனது நிலையை எடுத்து விளக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் அரசியலமைப்பு சபை கடிதமும் எழுதியது.  

2002இல் அப்போதைய அரசியலமைப்பு சபை பின்பற்றிய அதே நடைமுறைகளையே இப்போதும் பின்பற்றுவதாக அந்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேற்கூறிய நடைமுறை பற்றி ஜனாதிபதிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவித்துள்ள அரசியலமைப்பு சபை, குறிப்பிட்ட அந்த நடைமுறையில் திருத்தம் தேவைப்பட்டால் அது பற்றி ஆலோசனைகளை தெரிவிக்குமாறும் கேட்டுள்ளது. இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் எந்தவித ஆலோசனைகளையோ கருத்தையோ தெரிவிக்கவில்லை. எவ்வாறெனினும் இவ்விடயம் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவும் அரசியலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.  

அதேவேளை அரசியலமைப்பு சபையானது நிறைவேற்றுஅதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறையை கட்டுப்படுத்த முயலுவதாகவும் அண்மையில்  ஜனாதிபதி விமர்சித்தமை  தொடர்பாகவும் ஊடக அறிக்கை மூலம் அரசியலமைப்பு சபை தனது கருத்தை கூறியுள்ளது. மேற்படி குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானதும் முறையற்றதுமாகும் எனவும் அரசியலமைப்பு சபை விளக்கியது.  

அரசியலமைப்பு சபை ஏற்படுத்தப்பட்டதன் பிரதான நோக்கம் நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்துவதாகும். உயர் பதவி நியமனங்களின்போது ஜனாதிபதியின் தனியான அதிகாரத்தை அரசியலமைப்பு சபை கட்டுப்படுத்துகிறது. எவ்வாறெனினும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை அரசியலமைப்பு சபை மீறுவதில்லை. ஜனாதிபதி சிபார்சு செய்து அனுப்பும் பெயர்களை அங்கீகரிப்பது அல்லது அங்கீகரிக்காமல் விடுவதை மட்டுமே அரசியலமைப்பு சபை செய்கிறது. இதனை மேற்குறிப்பிட்ட அறிக்கையில் அரசியலமைப்பு சபை தெளிவுபடுத்தியுள்ளது.  

உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு ஜனாதிபதி அனுப்பிய 14 பெயர்களை அரசியலமைப்பு சபை நிராகரித்திருப்பதாக ஜனாதிபதி விடுத்த குற்றச்சாட்டை அரசியலமைப்பு சபை நிகாகரிக்கிறது. மேற்குறிப்பிட்ட பெயர்களில் நான்கு பெயர்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டதாகவும் அத்துடன் அவ்வாறு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களும் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசியலமைப்பு சபை கூறுகிறது. எவ்வாறெனினும் மேற்படி காரணங்களை அரசியலமைப்பு சபை ஜனாதிபதிக்கு அனுப்பும் காலாண்டு அறிக்கைகளில் உள்ளடங்கவில்லை. ஏனெனில் அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின் பொது ஆவணங்களாக மாறிவிடும் என்பதாலேயே அவை உள்ளடக்கப்படவில்லை. அத்துடன் சேவையில் உள்ள நீதிபதிகளின் கண்ணியத்தையும் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு அந்த நடவடிக்கை தேவைப்படுவதாக அரசியலமைப்பு சபை கருதுகிறது என்று சபையின் ஊடக அறிக்கையில் விளக்கப்பட்டிருந்தது. 
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here