மீண்டும் வில்பத்துவில் பிரச்சினையென்றால் அது தேர்தலுக்கான அறிகுறியா? முதலில் வில்பத்து பற்றி அறிந்துகொள்வோம்.

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதுபோல, தேர்தல்வரும் பின்னே, வில்பத்து வரும் முன்னே என்ற மனோநிலை முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

அதாவது தேர்தல் ஒன்றுக்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டால், வில்பத்து தேசிய சரணாலயம் சம்பந்தமான பேச்சுக்களும், போராட்டங்களும் ஊடகத்தினை ஆதிக்கம் செலுத்துவதும், பின்பு கிடப்பில் போடப்படுவதும் பழக்கப்பட்டுவிட்டது.

நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்பு நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் வில்பத்து என்ற பெயர் பிராதன இடத்தை பிடித்திருந்தது.

இந்த பிரச்சினை பற்றி வெளியிடுகின்ற ஊடகத்தினர்களிடம் வில்பத்து பற்றி கேட்டால் அவர்களுக்கு எதுவும் தெரியாது.
ஏதோ அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் அதனை நாங்களும் கூறுகின்றோம் என்ற நிலைப்பாடே காணப்படுகின்றது.

வில்பத்து பிரதேசத்தை அண்மித்து வாழ்கின்ற மக்களிடம் இதுபற்றி விசாரித்தால் அவர்களும் எதையோ மறைப்பது போல தென்படுவதுடன், விடயமறிந்த சிலர் வாய்திறக்க பயப்படுகின்றதனையும் காணக்கூடியதாக உள்ளது.

வில்பத்து என்பது அதிகமான மிருகங்கள் வாழுகின்ற இலங்கையின் ஒரு தேசிய சரணாலயமாக காணப்படுகின்றது.

இது புத்தளம், அனுராதபுரம் ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக, அனுராதபுரம் நகரிலிருந்து மேற்கு பக்கமாக 30km தூரத்திலும், புத்தளம் நகரிலிருந்து வடக்கு நோக்கி 26km தூரத்திலும் உள்ளது.

மன்னார் மாவட்டத்தினதும், புத்தளம் மாவட்டத்தினதும் எல்லையாக ”உப்பாறு” காணப்படுவதுடன், வில்பத்து தேசிய சரணாலயத்தின் ஒரு இஞ்சி நிலமேனும் மன்னார் மாவட்டத்தினுள் இல்லை. அதாவது வடமாகானத்தினுள் வில்பத்து உள்ளடங்கப்படவில்லை.

மன்னார் மாவட்டத்தின் முகவெத்திலையாக முசலி பிதேச சபைக்குட்பட்ட மரிசிக்கட்டி எனும் கிராமம் காணப்படுகின்றது.
இருபத்தெட்டு கிராமங்களை உள்ளடக்கிய முசலி பிரதேச சபையின் ஐந்து கிராமங்களே குறிப்பிட்ட பிரச்சினைக்குரியதாகும்.

அதில் முள்ளிக்குளம் கிறிஸ்தவர்களை கொண்டதாகவும், ஏனைய மரிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, கொண்டச்சி எனும் நான்கு கிராமங்களும் முஸ்லிம் கிராமங்களாகும்.

வடமாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றபடுவதற்கு முன்பு குறிப்பிட்ட கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் ஓலை குடிசைகளிலும், களிமண், மற்றும் சாதாரண கல்வீடுகளிலும் வாழ்ந்து வந்தார்கள்.

ஒருசில அரச கட்டடங்களையும், பள்ளிவாசல்களையும், கடற்படையினர் தங்கியிருக்கும் வங்களாவையும் தவிர, வேறு அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கு பெரிய நிலையான கட்டடங்கள் அப்பிரதேசத்தில் இருக்கவில்லை.

1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதுக்கு பின்பு அப்பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களில் பெறுமதிவாய்ந்த மரங்கள் புலிகளினால் நடப்பட்டதுடன், இயற்கையாகவும் மரங்கள் முளைத்ததனால் அப்பிரதேசம் அடர்ந்த காடுகளாக காட்சி தந்தது.

இப்பிரதேசங்கள் 2008 ஆரம்பத்தேலேயே இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்ததன் பின்பு அங்கு புலிகளினால் நடப்பட்டிருந்த பெறுமதிமிக்க மரங்களெல்லாம் 2009 தொடக்கம் 2011 வரைக்குமான காலப்பகுதிகளில் வியாபாரத்துக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

மரங்கள் வெட்டப்படுவது ஒரு சர்ச்சைக்குரிய பேசுபொருளாக அப்போது காணப்பட்டதுடன் வில்பத்து காடுகள் அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் வெட்டப்பட்ட பெறுமதியான மரங்களெல்லாம் விடுதலைப் புலிகளினால் நடப்பட்ட முசலி பிரதேச சபைக்கு உள்பட்ட மரங்களே தவிர, அந்த மரங்களுக்கும் வில்பத்து பிரதேசத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.

எனவே அங்கு என்ன நடைபெற்றது என்பது பற்றியும், அதனுள் புதைந்துகிடக்கும் அரசியல் பற்றியும் இன்சா அல்லாஹ் அடுத்துவரும் கட்டுரையில் எதிர்பாருங்கள்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.