நேற்று இரவு சாய்ந்தமருதில் நடந்தது என்ன ?நேற்று நிந்தவூரில் வெடிபொருட்களும், குண்டு தயாரிக்கும் உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பேற்றபட்டிருந்தது. அந்த இடத்துக்கு அடிக்கடி வந்துசென்ற வாகனம் ஒன்று அடையாளம் காணப்பட்டு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த வாகனத்தினை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டனர். இது சாய்ந்தமருது கரைவாகு பிரதேசத்தில் உள்ள சுனாமி குடியேற்றத்தில் உள்ள பள்ளிவாசலுக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் குறித்த பள்ளிவாசலக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஒரு வாரமாக வாடகைக்கு குடியிருக்கும் விடயம் தெரியவந்தது.

பின்பு அதன் உண்மையை கண்டறிவதற்காக சிலர் சந்தேகத்துக்கிடமான குறிப்பிட்ட வீட்டுக்கு சென்றபோது, அங்கு ஆயுதத்துடன் சிலர் இருந்ததனை கண்டதும் சென்றவர்கள் பயத்தில் பின்வாங்கியதுடன் அது படையினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டு அப்பிரதேச மக்கள் ஒன்றுகூட தொடங்கினார்கள். அதன்பின்பு மக்களை கலைப்பதற்காக எடுத்த எந்த முயற்சியும் கைகூடாத நிலையிலும், அங்கிருந்து தங்களது வாகனத்தில் தப்பிச்செல்ல முடியாத நிலையும் ஆயுததாரிகளுக்கு ஏற்பட்டது. 

பின்பு “அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். துப்பாக்கி சத்தத்தினால் ஊர்முழுவதும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்கள் குழம்பிய நிலையில் பதட்டத்துடனும், அச்சத்துடனும் காணப்பட்டார்கள். 

அதேநேரம் இராணுவத்தினர்கள் வருகைதந்ததுடன், கரைவாகு பிரதேசத்தை சுற்றிவளைத்தார்கள். அப்போது ஏற்பட்ட பதட்ட நிலை காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள மக்கள் அங்குமிங்குமாக தப்பி ஓடத்தொடங்கினார்கள்.

அப்போது ஓர் முச்சக்கர வண்டியில் சாய்ந்தமருதை சேர்ந்த ஓர் குடும்பத்தினர் அவ்விடத்திலிருந்து பதட்டத்துடன் வெளியேற முற்பட்டபோது இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகளுக்கு இலக்காகி மனைவி இறந்ததுடன், முச்சக்கர வண்டி செலுத்தி வந்த கணவர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் ஆயுததாரிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் குண்டு ஒன்று வெடித்தது. பின்பு சிறுது நேரத்தில் இன்னுமொரு குண்டு வெடித்தது.

இந்த சந்தர்ப்பத்தில் பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டது. இது பல மணி நேரமாக நீடித்தது. இராணுவத்தினர்களால் தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம் என்பதனை அறிந்ததும் வீட்டுக்குள் இருந்த ஆயுததாரிகள் முகநூல் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்தவாறு தங்களை காபீர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள் என்று கூறிக்கொண்டு தக்பீர் முழக்கத்துடன் குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டதாக அறியப்படுகின்றது. 

ஆயுததாரிகளிடம் இராணுவத்தினரை எதிர்த்து சண்டை செய்வதற்காக ஒரே ஒரு T56 ரக துப்பாக்கி மட்டுமே இருந்துள்ளதாகவும், மற்றவைகள் குண்டுகளும், அதனை தயாரிக்கும் உபகரங்களும் என்றே அறிய முடிகின்றது.

இந்த தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆயுததாரிகளை சேர்ந்த 13 பேர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் அவர்களது குழந்தைகளும், பெண்களும் அடங்கும்.

இராணுவத்தினர்களை எதிர்த்து சண்டைசெய்த ஆயுததாரிகளில் ஒருவர் துப்பாக்கியுடன் இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்ததாக தெரியவில்லை. இவரின் தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் அவரது உடல் காணப்பட்டது. வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் கிடந்தது. 

வீட்டுக்குள் எத்தனை பேர்கள் உள்ளார்கள், என்ன நிலையில் உள்ளார்கள் என்று தெரியாத நிலையில் இராணுவத்தினர்கள் முன்னெச்சரிக்கையுடன் மிகவும் தாமதித்தே அவ்வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். அதுவரைக்கும் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டபடியே முன்னேறினார்கள்.

துப்பாக்கிதாரிகள் தப்பிக்க நினைத்தால் மக்களை கொலை செய்துவிட்டு தப்பித்திருக்கலாம். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யாது தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சம்பவத்தை நேரில் கண்ட அப்பிரதேசவாசி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் சிலரும் காயமடைந்து அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Share:

No comments:

Post a Comment