முஸ்லிம் பெண்களுக்கு வைத்தியசாலையில் அபாயா அணிய இடமளிக்க வேண்டும்
- பைஸர் முஸ்தபா பிரதமர், சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள்

( ஐ. ஏ. காதிர் கான் )

    முஸ்லிம் பெண்கள் வைத்தியசாலைகளுக்கு அபாயா அணிந்து செல்வதற்கான வசதி வாய்ப்புக்களை உடன் செய்து கொடுக்குமாறு, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   இது தொடர்பில் அவர் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கும் வெவ்வேறாக விசேட கடிதங்கள்  மூலம் அறிவித்துள்ளார்.
  அக்கடிதங்களில்  அவர் மேலும் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
   முஸ்லிம் பெண்களுக்கு முகத்திரை (புர்கா, நிகாப்) அணிந்து வெளியில் செல்வது, தடை செய்யப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
    ஜம் இய்யத்துல் உலமாவும் இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
   ஆனால்,  முகத்திரை அணியாமல் அபாயா அணிந்து செல்லும் பெண்களைக்கூட, சில வைத்திய சாலை நிர்வாகிகளினால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். "அபாயா அணிந்து வரவேண்டாம். அபாயாவை அகற்றிவிட்டு வந்தால்தான் மருந்து தருவோம் - சிகிச்சை அளிப்போம்" என, பெண்கள் அவர்களினால்  அச்சுறுத்தப்படுகின்றார்கள். இதனால், வைத்தியசாலைகளுக்கு முஸ்லிம் பெண்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றார்கள்.
   இதனைக் கருத்திற்கொண்டு, வைத்திய சாலைகளுக்கு  வரும் முஸ்லிம் பெண்களுக்கு, எவ்வித இடையூறுகளோ அல்லது  தங்குதடைகளோ இன்றி, அபாயா அணிந்து வருவதற்கான சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறும்,  கேட்டுக்கொள்கின்றேன்.
   பைஸர் முஸ்தபா எம்.பி.யின் குறித்த கடிதத்துக்கு  பிரதமரும், சுகாதார அமைச்சரும், இந்த விவகாரம் தொடர்பில் அவதானம் எடுத்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அவரிடம்  உறுதியளித்துள்ளனர்.
   இது தொடர்பில் முஸ்லிம் பெண்களுக்கு பைஸர் முஸ்தபா விடுத்துள்ள செய்தியில்,
   பெண்கள் முகத்திரை அணிந்து செல்வது தொடர்பில் அரசாங்க வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,   நாட்டில் அவசர காலச்  சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் இக் காலத்தில் முகத்திரை (புர்கா,நிகாப்) அணிவது தடை செய்யப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
   இதேவேளை, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளதும், எம் அனைவருக்கும் தெரிந்த விடயமே.
   எனவே, எமது முஸ்லிம் தாய்மார்கள், சகோதரிகள் எமது நாட்டின் சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.  அத்துடன், ஜம் இய்யத்துல் உலமா சபையின் அறிவுரைகளையும் ஏற்று நடந்து கொள்ள வேண்டும்.
   எனவே, முஸ்லிம் பெண்கள் மிக அவதானமாகவும் விழிப்பாகவும் இருப்பதுடன், எந்த இடத்திலும் அபாயா உடையை மாத்திரம் அணிந்து செல்லுமாறும், அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.