இலங்கையின் கிழக்கு மாகாணத்தின், அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள "#கொடிமரத்துப்பள்ளி" என்ற ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு நினைவுப் பள்ளிவாசல் பற்றிய பதிவே இதுவாகும்,
#அறிமுகம்
பொத்துவில் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வரலாற்று அடையாளங்களில் ஒன்றான கொடிமரத்துப்பள்ளி, அல்லது கொடியேற்றப் பள்ளி என அழைக்கப்படும் ஷாஹூல்ஹமீத் ஜும்மாப் பள்ளிவாசல் உலக முஸ்லிம் வரலாற்று அடையாளங்களுடன் தொடர்புபட்ட ஒரு இடமாகும், இது இன்றைய கிழக்கு முஸ்லிம் இருப்பின் வரலாற்றுடனும் தொடர்பு படுகின்றது,
#அமைவிடம்
பொத்துவில் பிரதான வீதியில் இருந்து Hospital க்கு அருகில் கடற்கரை நோக்கிச் செல்லும் வீதியின் முடிவில் ஹிதாயத் நகரில் , அழகான கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் பள்ளிவாசலும் ,அதனோடு இணைந்த மினாரா உட்பட பல கலாசார அமைவிடங்களையும் கொண்டதே இந்த பள்ளிவாசலும், அதன் சுற்றுச் சூழலுமாகும்,
இங்கு பள்ளிவாசல், அழகிய மூன்று தட்டு மினாறா, எண்கோண மண்டபம், பக்கீர்மார்களின் தங்குமிடம், புராதன கொடி மரம், என்பன அமைந்துள்ளன, இதன் ஒரு பகுதியில் அழகான கடற்கரை உள்ளது, முருகைக்கற்களும், பாறைகளும் நிறைந்த ஆழமற்ற கடல் இந்த அமைவிடத்திற்கு இன்னும் அழகு சேர்க்கின்றது, இன்னொரு பகுதியில் நிழல்தரும் தென்னைமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன, இவற்றுக்கிடையேதான் இந்த வரலாற்றுத் தலம் அமைந்துள்ளது,
#வரலாறு,
குறித்த பள்ளிவாசல் ஒரு நினைவுச் சியாறமாகவே எம் முன்னோர்களால் அமைக்கப்பட்டுள்ளது,
இந்தியாவின் மாணிக்கபூரி பிரதேசத்தைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத் ( கி்பி் 1490-1558) ( வலி) அவர்களின் இலங்கை வருகையுடன் இந்த இடம் தொடர்பு படுகின்றது
வலியுள்ளாஹ் அவர்கள் காலி, கல்முனை, பொத்துவில் ஊடாக, தப்தர் ஜெய்லானி, மற்றும் பாவா ஆதம் மலை (சிறிபாத) போன்றவற்றுக்கு பயணம் செய்திருக்கின்றார்கள் என நம்பப்படுகின்றது,
அந்த வகையில் குறித்த இடத்திலும் அவர்கள் தங்கி சென்றதாகவும், அடையாளமாக ஒரு பச்சைக் கொடியை நட்டுச் சென்றதாகவும் முன்னோர்களின் வாய்வழி ஆதாரங்கள் கூறுகின்றன.
#நிகழ்வுகள்
குறித்த இடத்தில் உள்ள பள்ளிவாசலில் ஐவேளை தொழுகையும், ஜும்மாவும் இடம்பெறுவதுடன், வருடாவருடம் நினைவுக் கொடியேற்றம் இடம்பெறுகின்றது, அத்தோடு, ஹத்தாது ராத்திப்,புஹாரி ஷரீப், ஸுபஹான மௌலீது என்பனவும் இடம்பெறுகின்றதுடன், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான பொதுமக்களும் உற்சவ காலங்களில் கலந்து கொள்கின்றனர்,
#இருப்பியல்_அடையாளம்
குறித்த பொத்துவில் பிரதேசமும் , முஸ்லிம் வாழ்விடங்களும், குறிப்பாக அதன் கடற்கரைப்பகுதியும் தொல்லியல் திணைக்களத்தினால்( Archeological Department) அடிக்கடி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பிரதேசமாகும்,
அந்தவகையில் குறித்த பள்ளிவாசலில் இருந்து சுமார் 1KM தூரத்தில் பௌத்த புராதன வரலாற்று விகாரையான" முகுது மஹா விகாரை," அமைந்துள்ளது, விகாரையின் எல்லைக்கான காணி வரைபட ரீதியாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் அது தேவைக்கேற்ப அடிக்கடி விஸ்தரிக்கப்படுவதுண்டு,
அவ்வேளையில் முஸ்லிம்களின் புராதன அடையாளங்கள் இல்லாமல். ஆக்கப்பட்டதன் விளைவாக, இப்பிரதேச மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றனர், இந்நிலையில் குறித்த பள்ளிவாசலும் அதனோடு தொடர்புடைய வலியுள்ளாஹ் வின் வரலாற்று பயணம் பற்றிய சம்பவங்களும் ஓரளவு நிம்மதி தரும் விடயங்களாக உள்ளன,
அத்தோடு முஸ்லிம் தரப்பில் முன்வைக்க கூடிய ஓரளவு ஏற்கக் கூடிய ஆதாரங்களாகவும் உள்ளன, அந்த வகையில் இப்பள்ளிவாசலின் அமைவிடமும் ,பெயரும் பல் வேறுபட்ட வரலாற்று ஆதாரங்களை முன்வைக்க இன்றும் உதவக் கூடியதாக உள்ளதுடன் இப்பள்ளிவாசல் ஒரு நில எல்லை அடையாளமாகவும் உள்ளது, .
#முக்கியத்துவம்,
ஷாஹூல் ஹமீத் வலியுள்ளாஹ் அவர்களின் இலங்கை வருகை கிபி.1520 களில் நிகழ்ந்து இருக்கின்றது, அந்தவகையில், குறித்த இடமும், பள்ளிவாசலும் இற்றைக்கு 500 வருடங்களுக்கு மேற்பட்ட ஒரு வரலாற்றைக் கொண்ட புனித பிரதேசமாகும்,
இலங்கை போன்ற ஒரு நாட்டில் இத்தகைய ஒரு வரலாற்றை நிரூபிப்பதற்கான ஒரு வரலாற்றுத்தலம் இருப்பது மிக அரிதானதே ஆகும், இன்னும் முற்காலத்தில் அதிகளவான சகோதர இன மக்கள் இவ் இடத்திற்கு வந்ததாகவும் பல அதிசய சம்பவங்கள் இடம் பெற்றதாகவும், இப்பிரதேச முதியோர்கள் தெரிவிக்கின்றனர்... எனவே இப்பிரதேசத்தையும், அதன் வரலாற்றையும் பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும், என்பதோடு அப்பிரதேச மக்கள் இந்த வரலாற்று முக்கிய தலத்தில் இன்னும் அதிக கவனம் கொள்ள வேண்டும்,
#பொழுது_போக்குக்கான_அமைவிடம்
குறித்த நினைவிட பள்ளிவாசலின் அருகே உள்ள சூழலும் கடற்கரையும் மிகவும் ரம்மியமானது, ஆழங்குறைந்த அலைகளற்ற கடல், சிப்பிகளால் நிறைந்த மணல்மலைகள், தென்னை மரங்களின் நிழல் என்பனவற்றுடன் ஆளரவமற்ற அமைதியான சூழல் மனதுக்கு ரம்மியமானது,
குடும்பத்தோடு சுற்றுலா செல்வோர்களுக்கு இஸ்லாமியச்சூழலில் தொழுகை வசதியுடன், நீர், மலசலகூடம், என்ற எல்லவசதிகளும் உள்ளன, சிறுவர்கள் குளிப்பதற்கும், பாறைகளில் விளையாடவும் பாதுகாப்பானதாகவும் உள்ளது,
#சர்வதேச_உறவு,
இலங்கையின் இஸ்லாம் பரவலில் இந்திய புனித அறிஞர்களின் பங்கையும் அதன் சர்வதேச தொடர்பையும் இன்றும் நினைவுபடுத்தும் இடமாகவும் உள்ள இவ் இடத்தில் பல வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் வந்து செல்லுகின்றனர். அத்தோடு இலங்கை கடலோரத்தில் அமைந்துள்ள இவ் இடம், வங்களா விரிகுடாவின் அடுத்த பகுதியில் உள்ள தென்னிந்திய கடல்வழித் தொடர்பை இன்றும் நினைவு கூருகின்றது,
#எதிர்கால_நடவடிக்கைகள்
பொத்துவில் பிரதேசம்
போன்ற ,தொல்லியல் மற்றும், பெரும்பான்மை குடியேற்ற பிரச்சினை உள்ள இடங்களில் இவ்வாறான வரலாற்று ஆதாரமிக்க தலங்களை பாதுகாப்பபதுடன் ,அவை தொடர்பான ஆவணமாக்கல் செயற்பாட்டினையும் சமூக ஆர்வமிக்கவர்கள் அவசரமாக மேற்கொள்ள வேண்டும் ,
வரலாற்றை பாதுகாப்பதற்கான நிகழ்வுகளை தொடர்ந்தும் மேற்கொள்வதுடன், இதன் புனிதத் தன்மைகளையும் ஏனைய இன மக்களிடையேயும் விளங்கப்படுத்த வேண்டும்,
நாட்டின் பல பாகங்களில் இருந்து பொத்துவில் பிரதேசத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளும் முஸ்லிம்கள் தமது பயணத்தில் குறித்த இடத்தையும் இணைத்துக் கொள்வதன் மூலம் இப்பிரதேச முஸ்லிம்களின் இருப்பியல் அடையாளத்தை உறுதி செய்ய உதவுவதோடு மட்டுமின்றி, அவர்களது வாழ்வாதாரத்திற்கான தொழில்களுக்கான வழியாகவும் எமது பயணம் அமைய வாய்ப்புண்டு,
எனவேதான் நீங்களும் சென்று பார்ப்பதன் மூலம் மன அமைதியையும், வரலாற்று உணர்வையும் பெற்றுக் கொள்ளுவதுடன், எம் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாத்து எம் இருப்பினையும் உறுதி செய்தவர்களாவீர்கள்...
( இப்பதிவு தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றன)
முபிஸால் அபூபக்கர்
MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA
09:06:2019