ரத்ன தேரரினதும் ஞானசாரவினதும் பந்தயமும் - "கோட்டாயிஷமும்"..............

(A.L.தவம்)

கண்டியில் இடம்பெறவுள்ள பொதுபலசேனாவின் மாநாட்டின் நோக்கத்தை "றொய்ட்டர்" சர்வதேச செய்தி சேவை நிறுவனம் மிகத்தெளிவாக கூறியுள்ளது.

"அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெல்வது யார்" என்பதே இந்த மாநாட்டின் நோக்கம் என்பதை தெளிவாக கூறுகின்றது.

👉🏿 முஸ்லிம்களுக்கு தனியான கலாசாரம் இருக்கக்கூடாது
👉🏿 மத்ரசாக்கள் நாட்டில் தனித்தியங்க கூடாது
👉🏿 முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் இருக்கக்கூடாது
👉🏿 அரபு மொழி பயன்படுத்தக்கூடாது
👉🏿 பதியப்படாத பள்ளிவாயல்கள் மூடப்பட வேண்டும்

போன்ற இன்னும் சில விடயங்களை முன்வைத்து மேற்கொள்ளப்படும் இம்மாநாடு - ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வர - முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தினூடாக - சிங்கள சமூகத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

கடந்த வருடம் சதியின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை செய்து - பதவிக்கதிரைகளில் உட்கார எத்தனித்து தோல்வியுற்று - மக்கள் மத்தியில் "நேண்டியாகி" ஆகி - அடுத்த தேர்தலிலாவது ஆட்சி மாற்றத்தைக்கொண்டு வர வேறு பேசுபொருள் இல்லாமல் துடித்துக்கொண்டிருந்த சக்திகளுக்கு - ஈஸ்டர் குண்டு வெடிப்பு "சும்மா இருந்த வாய்க்கு அவலும் வாழைப்பழமும்" கொடுப்பது போலமைந்தது.

அதனால், இன்று முஸ்லிம் வெறுப்பு இனவாதம்தான் ஆட்சி மாற்றத்திற்கான கருப்பொருளாக (Theme) முன்கொண்டு செல்லப்படுகிறது. அதிகாரத்திற்கு வருவதற்கு கொள்கைகளை முன்வைக்க "சரக்கில்லாதவர்கள்" இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர். இதனால், யார் கூடுதலான இனவாதம் பேசுவது என்ற ஒரு பந்தயமே நடக்கிறது.

அந்த பந்தயத்தின் ஒரு கட்டம்தான் பொதுபலசேனாவின் கண்டி மாநாடு.
👍 ரத்ன தேரர் தன்னை முந்திக்கொண்டு உண்ணாவிரதத்தினூடாக போட்டுக்கொண்ட "மார்க்ஸ்" - ஞானசார தேரரை பொறாமையில் ஆழ்த்தியது.

👍 அதனால், ரத்ன தேரரை விட தான் அதிகம் மார்க்ஸ் பெற்றுக்கொள்ள - ஞானசார அதே இடத்தில் (கண்டியில்) நடாத்தும் உச்ச கட்ட பந்தயமே கண்டி மாநாடாகும்.

மறுபுறம், விமல் வீரவன்சவின் நுகேகொட ஆர்ப்பாட்ட ஊர்வலம் - தனித்து நின்று போட்டி போடுவதை விட - ஒன்றாக இணைந்து கிடைப்பதை பிரித்துக்கொள்ள - உதயகமன்வில்லவையும் இணைத்துக் கொண்ட "கபடியாக" அமைந்துள்ளது.

ஆக, முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அரசாங்கத்தை அமைக்க - சிங்கள மக்களுக்கு அழைப்பு விடுப்பதே - இந்த மொத்தமான விடயங்கள் அரங்கேற்றப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இவர்கள் முஸ்லிம்கள் எங்களுக்கு தேவையில்லை. முஸ்லிம் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை என்ற தீர்க்கமான கட்டத்திற்கு வந்துவிட்டதாகவே கணிக்கப்படுகிறது.

இவ்வாறான, மனநிலையின் உள்ளுணர்வு "கோட்டாயிஷம்" என்பதை நாம் அறிவோம். கோட்டாதான் மகிந்தவிடம் சிங்கள வாக்குகளினூடாக மாத்திரம் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற கருப்பொருளை முன்வைத்தனர். அவரின் மனநிலையையே இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை பரப்புகின்றவர்கள் பிரதிபலிக்கின்றனர்.

இந்த கோட்டாயிஷம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் எதிரானதல்ல. ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கு எதிரானது. "சிங்களவர் மட்டும்" என்ற கடும்போக்கு "தனி இன மேலாதிக்கவாதம்" சார்ந்தது. இதனை சிறுபான்மையினர் எல்லோரும் இணைந்து மொத்தமாகவே முகங்கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த கோட்டாயிஷத்திற்கு எதிராக நிமிர்ந்து நிற்க வேண்டி இருக்கிறது.

(A.L.தவம்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.