நேற்று காலிமுகத்திடலில் நடந்த JVP யின் “மக்கள் சக்தி” நிகழ்வும் அதில் கலந்துகொண்ட மக்கள் திரளும், இலங்கை அரசியலில் இரு பெருந்தேசிய கட்சிகளிலும் அதிருப்தியுற்றிருக்கும் மக்களை JVP யை நோக்கி திரும்ப வைத்திருப்பதான ஒரு நிலவரத்தை காணலாம். குறிப்பிட்டளவில் முஸ்லிம்கள் மத்தியிலும் இவ்வாறான மனநிலை உருவாகி இருப்பதை சமூகவலைத்தளங்களில் அவதானிக்கலாம். யார் ஏற்றுக்கொண்டாலும் மறுத்தாலும் இதுதான் உண்மை. 
ஆனால், தமிழர்களிடம் அவ்வாறான மனப்பதிவை அவதானிக்க முடியவில்லை. ஏன்எனில், அவர்களுடைய அரசியல் போக்கில் JVP யின் அரசியல் தாக்கம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதை இன்னும் அவர்கள் ஜீரணிக்காமை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது, ஏலவே ஆளுங்கட்சிகளின் தவறுகளினால் ஏற்பட்ட வடுக்களை – அவர்களை வைத்தே நிவர்த்தி செய்யும் சர்வதேச வலைப்பின்னலின் – அவர்களை மாட்டிவிட்டிருக்கும் நிலையில் – புதிதான ஒரு அணியின் எழுச்சி அவர்களுக்கு இடையூறாக அமையலாம் என்பதால் – அவர்கள் அதில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்.
இவ்வாறான நிலையில் JVP யின் வாக்கு பலம் மற்றும் அரசியல் தாக்கம் தொடர்பில் சற்று பின்னோக்கி பார்த்தால்; JVP கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதில்,
👉🏿 ஒன்று 1982 ஆம் ஆண்டில் அதன் தலைவர் றோகண விஜேவீர
👉🏿 மற்றையது 1999 ஆம் ஆண்டில் நந்தன குணதிலக
ஆகியோர் போட்டியிட்டனர்.
அவர்கள் பெற்ற வாக்குகள்;
👉🏿 1982 – 273,428 வாக்குகள்.
இத்தேர்தலில் மொத்த அளிக்கப்பட்ட வாக்குகள் 6,522,147.
இதில் JVP பெற்ற வாக்குகள் 4.19% மட்டுமே.
👉🏿 1999 – 344,173 வாக்குகள்.
இத்தேர்தலில் மொத்த அளிக்கப்பட்ட வாக்குகள் 8,435,754.
இதில் JVP பெற்ற வாக்குகள் 4.08% மட்டுமே.
இந்த இரண்டு தேர்தலுக்குமிடையில் சுமார் 16 வருட வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்படி இருந்தும் JVP யின் வாக்கு வீதம் பாரிய வளர்ச்சியை காட்டி நிற்கவில்லை. வெறும் 04% மாகவே இருக்கிறது. 
இது ஜனாதிபதி தேர்தல்தானே என இம்முடிவுகளை தள்ளிவைத்து விட்டு, இறுதியாக நடந்த பாராளுமன்ற தேர்தல் (2015) முடிவுகளை எடுத்து நோக்குவோமாயின்;
👉🏿 JVP பெற்றுக்கொண்ட வாக்குகள் 543,944
இத்தேர்தலில் மொத்த அளிக்கப்பட்ட வாக்குகள் 11,166,975.
இதில் JVP பெற்ற வாக்குகள் 4.87%
இம்முடிவை நோக்கினாலும் வெறும் 04% என்ற நிலையே காணப்படுகிறது.
மேலேகூறப்பட்டதை போன்று, 1999 ஆம் ஆண்டிற்கும் 2015 ஆம் ஆண்டிற்கும் இடையில் அதே 16 வருடமே இருக்கிறது. 
👉🏿அதாவது சமகால இடைவெளிகள் இரண்டிலும் (தலா 16 வருடங்கள்) JVP வளரவில்லை என்பதை இப்புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. 
👉🏿 இவ்வாறான நிலையில், ஜனாதிபதி தேர்தலில் JVP ஒரு மாற்று தேர்வாக அமையுமா? இல்லை.
யாருக்கு நொந்தாலும் நோகாவிட்டாலும் “இல்லை” என்பதே பதில்.
👉🏿 JVP பாராளுமன்ற தேர்தலில் வேண்டுமென்றால் மாற்று தேர்வாக அமையலாம். ஆனால், ஜனாதிபதி தேர்தலில் இல்லை.
இதற்காக பழைய “பண்டாரங்களையே” ஆதரிக்க வேண்டும் என்று கூற வரவில்லை. மாறாக, JVP க்கு அளிக்கும் வாக்குகள் – “எதிர்ப்புணர்வின் வெளிப்பாடாக” அமையுமே தவிர – விரும்பிய விளைவுகளை தருவனவையாக அமையாது. சில நேரங்களில் எதிர் விளைவுகளை தரும் வாக்குகளாகவும் அமையலாம்.
உதாரணமாக; புலிகள் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்தவிடம் பெற்றுக்கொண்ட காசிற்காக – தமிழர்களை வடக்கில் ரணிலுக்கு வாக்களிக்காமல் தடுத்து – அதனூடாக மகிந்த சிறிய வாக்கு வித்தியாசத்தில் வென்று – அதே மகிந்தவால் புலிகள் அழிக்கப்பட்டதான – எதிர்வு விளைவுகளும் ஏற்படலாம்.
ஆனால், JVP யின் இயக்க கட்டமைப்பு பாராட்டத்தக்கது. அதன் தோழர்களின் எதையும் எதிர்பார்க்காத தியாக உணர்வுடனான கட்சி / சமூகப்பணிகள் அபாரமானவை. அவர்களின் ஒழுக்கம் முன்மாதிரியானது. அதன் தலைமைத்துவ உறுப்பினர்கள் படித்தவர்கள். அதன் தலைவர் அனுர குமார பரந்த அறிவுடையவர். நாட்டை நேசிப்பவர். நான் விரும்பும் நல்ல பேச்சு வன்மையுள்ளவர். நிதானமிழக்காதவர்.
ஆனால் என்ன? சிங்கள மக்கள் இவர்களை அங்கிகரிக்க இன்னும் தயங்குவதே துரதிஷ்டம். இவர்களை புரிய இந்த நாடும்; நாட்டு மக்களும் போதுமானவையாகவில்லை. ஆகவும் கவலையான விடயம் என்னவெனில் JVP யினர் வசமிருந்த ஒரே ஒரு உள்ளூராட்சி சபையான “திஸ்ஸமாராம பிரதேச சபையை” கூட சிங்கள மக்கள் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கவில்லை என்பதுதான்.
காலம் எல்லாவற்றிற்கும் பதில் கொண்டு வரும். சற்று தாமதிக்க வேண்டும்.
AL. தவம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.