( மினுவாங்கொடை நிருபர் )

   ஹிஜ்ரி 1440 ஆம் இஸ்லாமிய ஆண்டு நம்மத்தியிலிருந்து மறைந்து, ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டின் இஸ்லாமியப் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இந்தப் புதிய ஆண்டு, இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அமைதி, சமாதானம், செளஜன்யம் மிக்க ஆண்டாக அமைய வேண்டும் என, எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போமாக என்று, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

   அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  
   கடந்த இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மறக்க முடியாத கறை படிந்த ஆண்டாக அமைந்திருந்ததை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறான நிலையில், புதிய ஆண்டு நம்மத்தியில் உதித்துள்ள நிலையில், இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் விசுவாசமானவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஆண்டாக இப்புதிய ஆண்டை நாம் ஒவ்வொருவரும்  அமைத்துக் கொள்ள முனைய வேண்டும்.

   ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்பு, இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு கோணங்களிலும் அச்சுறுத்தல்களுக்கு ஆளானார்கள். அத்துடன், அவர்கள் நசுக்கப்பட்டும், கடைகள் தாக்கப்படும், சொத்துக்கள் அழிக்கப்பட்டும் மன உளைச்சல் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது மாத்திரமல்ல, கடந்துபோன ஆண்டிலேயே முன்னெப்போதுமில்லாதவாறு சவால்களையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்தார்கள்.  

   இவ்வாறான நிலையிலேயே, இஸ்லாமியப் புத்தாண்டை நாம் அடைந்திருக்கின்றோம்.
இம்முறை புத்தாண்டில் முஸ்லிம்கள் சற்று வித்தியாசமாக தமது இஸ்லாமிய வாழ்க்கையில் முழுமையாகக்  கவனம் செலுத்தி, புதிய பாதையில் நடைபோட உறுதி கொள்ள வேண்டும். நாம் எங்கும் எப்பொழுதும் மிக மிக அவதானப் போக்கில் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, எமது சமய, சமூக, கலாசார விடயங்களில் நெறி தவறாது வாழ்வதற்கு நாம் ஒவ்வொருவரும் முனைய வேண்டும். இதனால், இறைவனின் நாட்டத்தோடு அதிகமான உதவிகளைப் பெறலாம்.

   இந்தப் புது வருடத்திலிருந்து இறை திருப்தியுடன் நாம் ஒவ்வொருவரும் வாழ்வோமேயென்றால், அது தான் நமக்கு இன்று தேவையாகவுள்ள மிக முக்கிய கடப்பாடாகும். துஆப் பிரார்த்தனை போன்றவற்றையும் மேற்கொண்டு சமூக ஒற்றுமை, அமைதி, சமாதானத்திற்காகவும் ஆத்மீகப் பாசறைக்குள் நின்று, இப்புத்தாண்டில் இறைவனைப் பிரார்த்தித்து, அவனைச் சந்தோஷப்படுத்துவோமாக.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.