( மினுவாங்கொடை நிருபர் )

   தொடர்ச்சியாக மூன்று நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணத்தினால், கம்பஹா மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுமிடத்து, அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

   அடை மழை காரணமாக, இதுவரையில் கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

   இதேவேளை, திங்கட்கிழமை காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பொது இடங்களில் தங்க வைப்பதற்கான ஒழுங்குகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அத்துடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் தேவையான விபரங்களைப் பெற்று, சமைத்த உணவு வகைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

   திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக, அத்தனுகலு ஓயா, ஜா - எல தண்டுகம் ஓயா மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம், நேற்று வரையிலான காலப் பகுதிக்குள் உயர்ந்திருப்பதாக, கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.