NPP ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக 'தேசிய சங்க (பௌத்த தேரர்) சபை'யில் ஆற்றிய உரையிலிருந்து 2019.10.12
--------------------------------------------------------------------------------------------------
"நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போது நமது குடும்பத்தினாலும், வாழும் சூழலினாலும், சமூகத்தினாலும் நமது மனங்களில் ஆன்மீக சிந்தையொன்று உருவாகியிருக்கின்றது. பிறக்கும்போது நாம் வெற்றுக் குடத்தைப் போன்றவர்கள். இந்த வெற்றுக் குடத்திற்கு நீரை நிரப்புவது யார்? ஆரம்பமாக குடும்பமும் பிறகு சமூகமும் இந்தக் குடத்தை நிரப்புகின்றன. அவ்வாறு நம் அனைவருக்குள்ளும் ஆன்மீகமொன்று இருக்கின்றது.

உதாரணமாக, நான் சிங்கள பெளத்த குடும்பமொன்றில் பிறந்தேன். எனக்கு ஜாதகக் கதைகளின் ஊடாக நல்லவை தீயவை சொல்லிக்கொடுக்கப்பட்டது. விடா முயற்சி - துணிவு - அன்பு - பிறரை நேசித்தல் - பொறுமை சகிப்புத் தன்மை ஜாதகக் கதைகளினால் கற்றுத் தரப்பட்டது. பெற்றாரை மதித்தல், குடும்ப உறவுகளைப் பேணுதல் போன்றவையும் ஜாதகக் கதைகளினால் ஊட்டபட்டது. ஆகவே எனது ஆன்மாவுக்குள் பௌத்த கலாசாரம் நுழைகின்றது.

நாங்கள் பன்சாலைக்கு அருகில் வாழ்ந்தோம். அந்த வாழ்க்கைமுறை எங்கள் ஆன்மாவுக்குள் நுழைந்தது. இவ்வாறு எமது குடும்பப் பின்னணியும் நாம் வாழும் சுற்றுச் சூழலும் எமது மனங்களில் ஆன்மீக உணர்வொன்றை உருவாக்குகின்றது.

ஒருவன் சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்து பௌத்த சூழலில் வாழ்ந்தால் அவனுடைய உள்ளத்தில் பௌத்த ஆன்மீகச் சிந்தனை உருவாகின்றது. கத்தோலிக்க குடும்பத்தில் கத்தோலிக்க சூழலில் வாழ்ந்தவரின் மனதில் கத்தோலிக்க ஆன்மீகம் பிரவேசிக்கின்றது. முஸ்லிம் குடும்பத்தில் இஸ்லாமிய சூழலில் வாழ்பவரிடம் இஸ்லாமிய ஆன்மீகம் குடிகொள்கின்றது.

ஆகவே நம் ஒவ்வொருவருக்கும், பிறந்த குடும்பத்தின் அதன் பின்னணியின் சுற்றுப் புறத்தின் மூலம், ஆன்மீக உணர்வொன்று உருவாகியுள்ளது. தனிப்பட்டமுறையில் எனக்குள் சிங்கள பௌத்த ஆன்மீகமொன்று இருக்கின்றது.

ஆனால் ஆடசியாளன் என்ன செய்கின்றான்? தனது தோல்வி நிலை இறுதி எல்லையை நெருங்கிய பின்னர், இந்த ஆன்மீக உணர்வைத் தூண்டிவிடுகின்றான். இதோ எமது சிங்கள இனம் அழியப்போகின்றது, பௌத்தம் அழியப்போகின்றது, அந்நிய சமயத்தினர் எம்மை ஆக்கிரமிப்பு செய்கின்றார்கள், சிங்கள சனத்தொகை குறைந்து ஏனைய இனத்தவர்கள் பெருகி ஆபத்து வந்துள்ளது. இவ்வாறு எமது ஆன்மீக உணர்வைத் தூண்டிவிடுகின்றான்.

இவர்கள் ஏன் ஆன்மீக உணர்வைத தூண்டிவிடுகின்றார்கள்? நான் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினேன் எனச் சொல்லிக்காட்ட முடியாது. ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்தினோம் என்றும் பேச முடியாது. நாட்டை சுபீட்சமிக்க நாடாக முன்னேற்றினோம் என்றும் கூற முடியாது. இவ்வாறு தோல்வியுற்ற ஆட்சியாளன் தனது அரசியலை எமது ஆன்மாவுக்குள் புகுத்துகின்றான். அதனால்தான் ‘கயவனின் இறுதி இருப்பிடம் சமயவாதமும் இனவாதமும்’ என்ற முதுமொழி உருவானது.

இன்றைய அரசியல் போர்க் களத்தில் இதுதான் நடைபெறுகின்றது. அனைவரும் இதைத்தான் செய்கின்றார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் ஆன்மீகத்தைத் தூண்டிவிடுகின்றார்கள். தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் ஹிந்து கலாசார ஆன்மீகத்தைத் தூண்டிவிடுகின்றார்கள். சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களிடம் சிங்கள பௌத்த ஆன்மீகத்தைத் தூண்டிவிடுகின்றார்கள்.

தேரர்கள் முன்னிலையில் இந்த நாட்டு மக்களுக்கு சத்தியம் செய்து கூறுகின்றோம், “நாம் எமது அரசியல் நிரலின் ஓர் அங்கமாக ஒருபோதும் சமயத்தையோ இனத்தையோ நாங்கள் பயன்படுத்த மாட்டோம்!” (අපි අපේ දේශපාලන න්‍යාය පත්‍රයේ කොටසක් බවට කිසිසේත්ම ආගම හෝ ජාතිය අපි උපයෝගී කරගන්නේ නෑ!).

ஆனால் இன்று என்ன நடைபெற்றுள்ளது? இவை அனைத்தும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் புகுந்துள்ளது. தனது வரண்ட, தோல்வியுற்ற அரசியலை மறைத்துக்கொள்ளும் போர்வையாக பௌத்த சமயத்தையும் சிங்கள இனத்தையும் பாவிக்கின்றார்கள்.

அவர்கள் தமது சமய வழிகாட்டலின் பிரகாரம் வாழ்வார்கள் என்றால், அதனை அரசியலில் பயன்படுத்தும் உரிமைப் பங்கொன்று அவர்களுக்கு இருக்கின்றது. ஆனால் அவர்கள் சமய வழிகாட்டலை பின்பற்றுவதில்லை. அவர்களின் தனிப்பட்ட வாழ்விலோ, நடவடிக்கைகளிலோ, அரசாட்சியிலோ சமயத்தில் இருந்து அணுவளவு கூட பயன்படுத்துவதில்லை,. தொலைக்காட்சியில் தமது பௌத்த தன்மையைக் காட்டுவார்கள். இதன் அர்த்தம் என்ன, மிகவும் சில்லறை விலைக்கு பௌத்தத்தை அரசியல் போர்க் களத்தில் விற்கின்றார்கள்.

சில ஊடகவியலாளர்கள் எங்களிடம் கேட்கின்றார்கள். ‘தோழரே, அவர்கள் பௌத்தர்கள் போல தினமும் பன்சாலைக்குப் போகின்றார்களே, நீங்கள் செல்வதில்லையா?’ என்று. தற்போது குற்றவாளி யார்? குற்றவாளியாக நாங்கள் ஏன் தெரிகின்றோம்? நாங்கள் தொலைக்காட்சிக்காக சமய நடவடிக்கைகளில் ஈடுபடாததினால்.

நாம் பொறுப்புணர்வோடு ஒரு விடயத்தைக் கூறுவோம். அவர்கள் அனைவரை விடவும் தனிப்பட்ட முறையில் நானும் எங்கள் கட்சியின் ஏனையவர்களும் பக்திமான்கள்".

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.