சஹ்ரானுடன் தமக்கு தொடர்பு இருப்பதாக திட்டமிட்ட வகையில் தற்போது வெளியிடப்பட்டு வரும் காணொளி குறித்து தனக்கு எவ்வித கவலையும் கிடையாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் -23- உரையாற்றும் போதே அவர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறுகையில்,
நாட்டில் பயங்கரவாதம் தொடர்பில் எழுந்த பிரச்சினைகளின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட எனது ஆதரவாளர்கள் எந்த நேரமும் குறித்த பிரச்சினைகளுக்கு எதிராக செயற்பட்டார்கள்.
குறிப்பிட்ட ஒரு ஊடகத்தின் தேவைக்காக, எங்கிருந்தோ பெறப்பட்ட ஒரு காணொளியை தற்போது ஒளிபரப்பி வருகிறார்கள்.
அது எவ்வளவு தூரம் உண்மையானது என்பது தொடர்பில் நாட்டு மக்கள் அறிந்துள்ளார்கள். எனவே இது குறித்து நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்தாகும்.
இருந்தாலும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக, “பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்கு நான் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு எவரோ வந்திருக்கலாம்”.
அத்தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளியை ஆதாரமாக எடுப்பார்களேயானால் குற்றம் சுமத்துபவர்கள் எவ்வளவு குற்றங்களை செய்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலான புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் எவ்வளவோ இருக்கின்றன.
அவற்றை இன்று நான் சபையில் சமர்ப்பிக்கவுள்ளேன். அவற்றை சரியாக பார்த்து விட்டு குற்றம் சுமத்துபவர்கள் இன்னொருவர் மீது குற்றம் சுமத்த தகுதி உடையவர்களா என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
அத்துடன், சஹ்ரானுடன் தொடர்புபட்ட அனைவரும் கோத்தபாயவுடன் தொடர்புபட்டவர்கள். ஹிஸ்புல்லாஹ் கூட பொதுஜன பெரமுனவின் நிழலாகவே செயற்பட்டு வருகிறார் என கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.