பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஸ்கொட்லாந்தை பிரதிநிதித்துவம் செய்யும் டேனியல் ரோவ்லி எனும் பெண்  உறுப்பினர் கடந்த ஜூன் மாதத்தில் கூட்டத் தொடருக்கு தாமதமாகி சமுகமளிக்கிறார்.தாமதத்திற்கு மன்னிப்பை கேட்டவர்,மாதவிடாய் காரணமாகவே தனக்கு தாமதமாக நேர்ந்ததாகவும் மாதமொன்றிற்கு அதற்காக 25 யூரோ செலவாவதாகவும் குறிப்பிடுகின்றார்.

sanitary napkin குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாகும்.உலகின் பணக்கார நாடுகளில் கூட இதை வாங்க முடியாதவர்கள் உள்ளனரா ? என கேள்வியெழுகிறது.

ஆம். ஸ்கொட்லந்தில் ஐந்திலொரு பெண்ணும்,முழு பிரித்தானியாவிலும் பத்தில் ஒருவரும் இவற்றை வாங்க வசதியின்றி மாற்று வழிகளை நாடுகின்றார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண்கள் நல அமைப்புகளின் அறிக்கைகள் பிரகாரம் பல பெண் பிள்ளைகள் மாதவிடாயின் போது உபயோகப்படுத்த நெப்கின் இல்லாதமையால்  பாடசாலைக்கு செல்வதில்லை என்று அறியப்பட்டது.

 இது குறித்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டு பிரித்தானியாவில் நெப்கின்களுக்கான வரிகளை நீக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. நெப்கின்கள் அத்தியாவசிய தேவையல்ல,ஆடம்பர தேவை என்ற ஐரோப்பிய கவுன்சிலின் கூற்றுக்கமைவாக அது சாத்தியப்படாத  காரணத்தால் அடுத்த வருடத்திலிருந்து (2020) பாடசாலை,பல்கலைக்கழக மாணவியருக்கு இலவசமாக நெப்கின் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்கொட்லாந்து கடந்த வருடத்திலிருந்தே பாடசாலை,பல்கலைக்கழக மாணவியருக்கு இலவசமாக நெப்கின்களை வழங்கி வருகிறது.உலகில் இலவசமாக நெப்கின் வழங்கும் முதல் நாடு ஸ்கொட்லாந்து ஆகும்.

தனக்கு ஏற்பட்ட மாதவிடாயின் உபாதையை "சும்மா தலைவலி" என்று சொல்லிக் கொள்ளும் பெண்களும், "அதோ அந்த பெக்கட் ஒன்று தாங்க" என்று தயங்கி கேட்கும் ஆண்களும்,பிறர் காணாதவாறு அதை சுற்றிக் கொடுக்க பத்திரிகை தேடும் முதலாளிமாரும் உள்ள தேசத்தில் இவ்வாறான வாக்குறுதிகள் நகைப்புக்குரியவையே..

சவரம் செய்யாத இரண்டு நாள் தாடியை எந்தப் பெண்ணும் கேலி செய்வதில்லை.ஆயின் மாதவிடாயின் கறையை கேலிக்குரியதாக நோக்கும் மனிதர்கள் மத்தியில் இதுவெல்லாம் பேசத் தகாதவை என்பதில் முரண்பட எதுவுமில்லை.

தலைவலிக்கு பரசிட்டமோல்,சவரம் செய்ய பிக் ரேசர் போன்றுதான் இது ஒரு அத்தியாவசிய தேவை.ஆனால் எம்மைப் போன்ற நாட்டவரிற்கு இதுவே ஆடம்பரத் தேவையாகிப் போனது.

இலங்கைப் பெண்களில் 30% பெண்களே இந்த நப்கின்களை உபயோகிக்கிறார்கள்.ஏனையவர்கள் பழைய துணிகளையும் பேப்பர் கட்டுகளையும் பாவிக்கிறார்கள்.இதனால் பல்வேறு நோய்த் தொற்றுக்களுக்காளாகிறார்கள்.

 பாவித்த பழைய துணியை கழுவ சவர்க்காரம் வாங்க வசதியின்றி அதை எரித்தோ,புதைத்தோ விட்டு இன்னொரு துணிக்காக யாசிப்போர் குறித்து கைகளில் ஐபோன் வைத்திருப்போருக்கு தெரிவதில்லை.

மாதவிடாயின் போது ஏற்படும் அவஸ்தைகள் காரணமாக அந்த மூன்று நாட்கள்  பல மாணவியர் பாடசாலைகளுக்கு வருவதில்லை.தொழில் செய்யும் பல  பெண்கள் விடுப்பெடுக்கிறார்கள்.இவை ஒரு நாட்டின் பொருளாதார சுட்டிகளில் தாக்கம் செலுத்தும் காரணிகளாகும்.

எனவே சஜித்தின் கொள்கைகள் குறித்து பல்வேறு  முரண்பாடுகள் இருந்தாலும் இத்தகைய செயற்பாடு பாராட்டுக்குரியது.

--------------------------
எவ்வாறு மாதவிடாய் குறித்து  சரியாக அறிந்து அரசு இவற்றை விநியோகிக்கும் ???

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு MOH பிரிவிலும் சகல பருவத்தை சார்ந்த  பெண்கள் குறித்தும் தகவல்கள் இருக்கின்றன.எவ்வாறு கர்ப்பிணிகளுக்கும் சிறுவர்களுக்கும் திரிபோஷ ,விட்டமின் மாத்திரைகள் தேவைக்கேற்ப விநியோகிக்கப்படுகின்றனவோ அதே போல விநியோகிக்கப்படலாம்.

சகல பாடசாலைகளிலும் மாணவியர் பற்றிய தகவல்கள் நிச்சயம் இருக்கும்.அதில் பருவமடைந்த மாணவியர் குறித்து ஆசிரியை ஒருவர் தகவல்களைப் பெற்று வருடத்தில் இருமுறையோ,மூன்று முறையோ நப்கின்களை ஒரேயடியாக விநியோகிக்கலாம்.

அல்லது சீருடைகள்  வழங்குவது போன்று வவ்ச்சர் மூலமாகவும் வழங்கப்படலாம்.

இலவச சீருடை,கஷ்டப் பிரதேச மாணவருக்கான சப்பாத்து விநியோகம் போன்றதொரு செயற்பாடுதான் இதுவும்.ஊழல்களும் துஷ்பிரயோகங்களும் எல்லாத் துறையிலும் இடம்பெறுவது போல இதிலும் இடம்பெறும்.இலங்கையில் அதுவெல்லாம் புதிதல்லவே.அதற்காக எல்லா திட்டங்களையுமா கைவிட முடியும்?

(ஆயிஷா அபூபக்கர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.