சிறுபான்மையினரின் ஆதரவின்றி சிங்கள மக்களினால் வெற்றிபெற முடியும் என்பதனை இந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு வரியில் கூறப்போனால் இந்த தேர்தல் முடிவானது சிங்கள பேரினவாதம் வெற்றியடைந்துள்ளது என்பதனை காட்டுகின்றது. 

அதாவது கோத்தபாய ராஜபக்ச சார்பான இனவாத இளைஞ்சர் குழுக்கள் அவர்களது பிரதேசங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் ஆர்ப்பாட்டமின்றி இனவாத கருத்துக்களை விதைப்பதில் வெற்றி கண்டார்கள்.

இவர்களது பிரச்சாரமானது முஸ்லிம் அடிப்படைவாதத்தினால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அச்சுறுத்தலும், நடைபெற்ற ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதலுமே பிரதானமாக அமைந்திருந்தது.

எதுவும் அறியாத அப்பாவி சிங்கள மக்கள் அவர்களது துவேச பிரச்சாரத்துக்கு அடிமையானதுடன் இந்த அடிப்படைவாதம் எங்கிருந்து உருவானது ? இதற்கு காரணமானவர்கள் யார் ? என்பதனையும் அறிந்திருக்கமாட்டார்கள். 

அதுமட்டுமல்லாமல் ராஜபக்ச குடும்பத்தின் கவர்ச்சிக்கும், பகட்டுக்கும் எமது முஸ்லிம் சகோதரர்களும் பலியானார்கள். எதிர்காலங்களில் கோத்தப்பாய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் அனைத்துக்கும் பொறுப்புக் கூறவேண்டிய கடமை இவர்களுக்கு உள்ளது.     

அதேநேரம் தனது சமூகத்தின் மத்தியில் முஸ்லிம்களின் தலையில் முஸ்லிம் அடிப்படைவாதம் என்னும் சாயத்தை பூசி இனவாதத்தினை விதைக்காத காரணத்தினால் சஜித் பிரேமதாசாவினால் சிங்கள மக்கள் மத்தியில் அமோக ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இனவாதத்தினை விதைத்தால்தான் சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவினை பெறமுடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளதனால் எதிர்காலங்களில் ஆட்சியை பிடிப்பதற்காக ஐ.தே கட்சியும் இதே இனவாதத்தினை கையிலெடுத்துவிடுவர்களோ என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.

கோத்தாவின் வெற்றி முஸ்லிம் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தினையும், கவலையையும் ஏற்படுத்தினாலும் இந்த இரு சமூகத்தின் அரசியல் தலைமைகள் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகின்றது என்ற பாரிய எதிர்பார்ப்பும் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.