கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது இலங்கை முஸ்லிம்கள் தங்களின் வரலாற்றில் அதிசயமாகிப்போன ஓர் ஒற்றுமையான நிலைப்பாட்டை கட்சி பேதமின்றி எடுத்தனர். முஸ்லிம்களின் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டனவும் தேசிய ரீதியான தங்கள் இறக்கைகளைப் பரவ விட்டனவுமான முஸ்லிம் கட்சிகள் இதில் முதலிடம் பெற்றன.
நுட்பான அடக்குமுறை எனப்படும் கண்ணுக்குப் புலப்படாத சதிவலைக்குள் சிக்கிய ஒரு சமூகத்தின் அரசியல் தலைமைகள் அதி உச்சமான என்ன தெரிவுக்கு வரமுடியுமோ அத்தகைய தீர்மானத்தையே அவர்கள் எடுத்தனர். அந்தத் தீர்மானம் பொதுவெளியில் முஸ்லிம்களினதும் ஏனைய சிறுபான்மை மக்களதும் பெருத்த வரவேற்பை அப்போது பெற்றுக்கொண்டது.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலின்போது அவர்களின் தெரிவு வேட்பாளர் தோல்வி கண்டதன் பின்னர் அதே பொதுவெளியில் திட்டமிடப்பட்டோ அல்லது இயல்பாகவோ அந்தத் தீர்மானம் ஓர் இனவாதத் தீர்மானமாக கொச்சைப்படுத்தப்படுகின்றது. அது மட்டுமன்றி சமூகத்தை புதை குழிக்குத் தள்ளிவிட்ட அரசியலாகவும் சிலரால் தூற்றப்படுகின்றது. இது தொடர்பான ஒரு சிந்தனைப் பரவலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இந்தத் தீர்மானம் ஒரு தூய சிங்கள பௌத்தரான சஜித் பிரேமதாச என்ற ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கின்ற தீர்மானமே தவிர தமிழ்ப்பேசும் இஸ்லாமியரான ஹிஸ்புல்லாஹ்வையோ அல்லது மொழிவழி சகோதர இனமாகிய தமிழ் இனத்தைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்தையோ ஆதரிப்பதாக எடுத்த தீர்மானமன்று. ஆகவே, இந்தத் தீர்மானத்தை இனத்துவேஷ அடிப்படையிலான தீர்மானம் என்று முகமூடி போடுவது முற்று முழுதுமான பித்தலாட்டமாகும்.

ஓர் இனம் தனது உயிரியல் மற்றும் புவியியல் இருப்பை தப்பிப்பிழைக்க வைத்துக் கொள்வதற்கான (survival) உத்திகளைக் கையாள்வதானது இனவாதம் என்ற கருதுகோளின் வரைவிலக்கணமாக முடியாது. இனவாதம் பிற இனத்தின் உயிரியல், சமூகவியல், பொருளியல் முதலிய அனைத்தின் மீதும் அடர்ந்தேறும் நோக்கமுடையதாகும்.
கலாநிதி நீலன் திருச்செல்வம் இனவாதத்துக்கும் இனத்துவ அரசியலுக்கும் இடையிலான வெளிப்படையான அர்த்தத்தை மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார். மட்டுமன்றி, லங்கா கார்டியனின் ஆசிரியராக இருந்த மேவின் டி சில்வாவும் தன்னுடைய கட்டுரைகளில் 1980களிலேயே இதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இனத்துவ அரசியலுக்கும் இனவாத அரசியலுக்கும் இடையிலுள்ள தருக்க ரீதியான தத்துவார்த்தப் பின்புலத்தைப்; புரிந்து கொள்ள மறுப்போரின் கபட விளையாட்டுக்கள் பொது வெளியில் சமூக ஊடகங்களைக் கையாளும் இளைய தலைமுறையினரை பிழையாக வழிநடாத்தும் இலக்குடன் வெளியிடப்படுகின்றன. ஆனால், உண்மையில் இந்த அரசியல் பேரிடர் நடந்தமைக்கான காரணம் இங்கு காணப்பட்ட வேறு வேறான சமூகச் சூழ்நிலைகளாகும்.
முஸ்லிம் அடையாள அரசியலானது அத்தகைய ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு, சமகால வரலாற்றில் மிக வெளிப்படையான காரண காரியங்கள் நிகழ்ந்துள்ளன. தங்களின் சுயநல அரசியல் பார்வையைத் தவிர்த்து சமூக அக்கறை கொண்டு அவதானிப்பவர்களிடம் இத்தகைய மேம்போக்கான அபிப்பிராயங்கள் நிலைகொள்ளும் நிலை அறவே தோற்றம்பெற வாய்ப்பில்லை.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21இல் அரங்கேற்றப்பட்ட உயிர்த்த ஞாயிற்றின் பயங்கரவாதம் இலங்கையில் இஸ்லாமோபோபியாவின் பல்பரிமாணங்களையும் சேர்த்துக்கொண்டு உயிர்ப்பிக்கச் செய்துவிட்டது. காத்திரமாகத் திட்டமிடப்பட்ட, ஓரு சமூகத்தை நோக்கிய சுனாமி இலங்கை எங்கணும் புவிசார் அரசியலின் முற்றுமுழுதான ஆசீர்வாதத்துடன் ஏவப்பட்டது. அதன் பின்னர் நிகழ்ந்த அவலம் இலங்கையின் சமூக உளவியலைப் புரட்டிப்போட்டுவிட்டது. அதன் பின்னணியில் இலங்கையர் தனித்தனி இனங்களாகவும் தீவுகளாக்கப்பட்ட சமூகங்களாகவும் துருவப்படுத்தப்பட்டனர். இத்தோடு இலங்கைச் சமூகத்தின் எல்லா சமூக விழுமியங்களும் நிதானங்களும் கூண்டோடு அழிக்கப்பட்டன.

விடுதலை இலக்கில்லாத தான்தோன்றியான ஒரு மதவாத கைக்கூலிப் பயங்கரவாதத்தின் களத்தில், எல்லா இலங்கைச் சோனகரையும் சார்ந்த அனைத்து சமூகத்தினதும் அழிபடுதிறன் வாய்ப்புப் பார்க்கப்பட்டது. ஓர் அப்பாவிச் சமூகத்தின் அமைதியான வாழிடங்கள்  பரிசோதனைக் களமாக மாற்றப்பட்டன. அவர்களின் தொழில் நிலையங்களையும் வியாபார ஸ்தலங்களையும் வழிபாட்டிடங்களையும் பொறாமைத் துப்பாக்கிகள் இலக்குப்படுத்தின. சராசரி மக்களின் அமைதியான வாழ்க்கை வலிந்து உருவாக்கப்பட்ட நெருக்கடிக்குள் சிக்கிவிடப்பட்டது.

ஆனால், 1983 ஜூலைக் கலவரமானது ஏப்ரல் 21 தாக்குதலுடன் ஒப்பிடுகையில் இந்தப் போக்கில் நின்றும் பெரிதளவுக்கு வேறுபட்டது. தனிநாட்டு விடுதலையை நோக்கி இலக்குப்படுத்தப்பட்டதும் வாழ்வியல் சார்ந்த கல்வியறிவில் உச்சநிலையில் இருந்ததுமான ஒரு சமூகத்தினது பல்பரிமாண ஆசீர்வாதங்களையும் பெற்ற விடுதலைப் போராளிகள் 1983 ஜூலை 23இல் இலங்கை இராணுவத்தினர் மீது யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் வைத்து ஒரு கண்ணிவெடித் தாக்குலைத் தொடுத்தனர்.
இத்தாக்குதலால் ஏற்படுத்தப்படப்போகும் நேரடி விளைவுகளும் பக்கவிளைவுகளும் பற்றிய அச்சமும் எதிர்பார்ப்பும் அந்த தாக்குதலைத் தொடுத்த இயக்கங்களைச் சார்ந்த சராசரி மக்களின் மனக்குகைகளில் ஏற்கனவே 1978ஆம் மற்றும் 1981ஆம் ஆண்டின் நெருக்கடி நிலைகளால் ஏற்படுத்தப்பட்டிருந்தன (1958 ஆம் ஆண்டின் அனுபவத்தை ஒரு தலைமுறை கடந்த அனுபவமாக சிலர் கருதுவர்).

திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதல் நடைபெற்றபோது சிங்கள சமூகத்திடம் எதிர்வினையாக உருவான கூட்டுக் கழிவிரக்கமானது (collective sympathy) ஒரு வன்மமாக மடைமாற்றம் பெற்று காடைத்தனமாகவும் பின்னர் அரச பயங்கரவாதமாகவும் வெடித்தது. ஒரு விடுதலைப் போராட்டத்தின் நேரடி விளைவுகளோடும் பக்கவிளைவுகளோடும் சம்மந்தப்பட்டதான ஒரு நிகழ்ச்சி திட்டமானபடியால் ஒரு வகையில் அவர்களின் போராட்டத்துக்கு அது உரம் சேர்த்ததோடு அதற்கான ஒரு சர்வதேச வியாப்தியையும் கொடுத்தது.

ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அடக்குமுறைக்கு எதிரான எந்தவிதமான போராட்ட உணர்வுகளுடனும் சம்மந்தப்பட்டிருக்காத சர்வதேச இஸ்லாமோபோபியாவின் நிகழ்ச்சித் திட்டத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்மந்தப்பட்ட ஒரு தாக்குதலாகும். ஏற்கனவே பொது பல சேனாவினாலும் றாவண பல வேகயவினாலும் உருவாக்கப்பட்ட உளவியல்சார் வன்முறைக் கோட்பாடுகளுக்கு பதில் வன்முறையை உருவாக்குதல் என்பதைப் பற்றி முஸ்லிம் சமூகம் பரந்த அளவில் சிந்திக்கவும் இல்லை. அது தொடர்பான விவாதங்களில் ஈடுபடவும் இல்லை. மட்டுமன்றி  ஏப்ரல் 21இன் தாக்குதலைத் தொடுத்த பயங்கரவாதிகளுக்கும் அவர்களின்; சமூக வெளியிலுள்ள மக்களுக்கும் எவ்வித பரஸ்பர புரிந்துணர்வோ, கொள்ளல் கொடுத்தல் உறவுகளோ, பொதுமைப்படுத்தப்பட்ட உளவியல் அங்கலாய்ப்புக்களோ ஏற்கனவே தீவிரமாகக் காணப்பட்டதற்கான பாதுகாப்புத் துறைசார் தடயங்கள் இலங்கைச் சூழலில் அறவே இருக்கவில்லை.

மேற்படி சமூகவியல் சூழலில் தோன்றிய செயற்கையான பயங்கரவாதம் ஓர் இனக்குழுமத்தின் பொது மக்கள் பயங்கரவாதமாக அரசியல் பொதுவெளியில் மொழி பெயர்த்துப் பார்க்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு அப்பாவி மக்கள் மீது தான்தோன்றியாக மட்டுமன்றி நிறுவன மயப்படுத்தப்பட்டும் சரமாரியான தாக்குதல் நிகழ்த்தப்பட்டன.

இத்தாக்குதல்களானது ஒரு கூட்டு உளவியல் வன்முறையாக மட்டுமன்றி, ஓர் இனக்குழுமத்தின் அப்பாவி மக்கள் மீது நேரடியாகத் தொடுக்கப்பட்ட சரமாரியான அத்துமீறலுமாகும். நாட்டின் சட்டமும் ஒழுங்கும் கூட மடாலயங்களில் நேர்ச்சைக்கு விடப்பட்ட அறுவைக்கான விலங்குகளாகவே தோற்றம் காட்டின.

அத்துடன், இஸ்லாமோபோபியாவின் ஊடகப் பயங்கரவாதம் இதற்கான பொது உளவியலை நாட்டின் பெரும்பான்மையிடம் மட்டுமல்லாது முதலாம் சிறுபான்மையிடமும் கூட ஏற்படுத்தி இருந்தமை அதன் தங்கு தடையற்ற வெற்றியாகும்.

இதனால் 2019 ஏப்ரல் 21ஆம் திகதியின் பின்னர் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தினதும் ஓரளவுக்காயினும் முதலாம் சிறுபான்மை சமுகத்தினதும் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான பொது வெறுப்பை உருவாக்கும் இஸ்லாமோபோபியா ஆழமான செல்வாக்கை புரையோடச் செய்தது.

அதன் உச்சக்கட்டமாக நேரடியாகவே முஸ்லீம் அரசியல்வாதிகள் மீதும் புத்திஜீவிகள் மீதும் ஒரு வன்முறை சார்ந்த காழ்ப்புணர்வுடன் கூடிய முடிவற்ற பயங்கரவாதத் தாக்குதலாக அப்போக்கு மாற்றம் பெற்றது.
அதற்கான சிறந்த உதாரணம் உயிர்த்த ஞாயிறு வன்முறையாளனோடு உண்மையாகவே எவ்விதமான நெருக்கமான அரசியல் தொடர்பும் இல்லாதிருந்த அவரின் ஊரைச் சேர்ந்தவரான கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன், மேல்மாகாண ஆளுனர் ஆஸாத் சாலி ஆகியோர்களுக்கும் எதிராகப் பேரினவாதம் தன் கொடுவாளை நீட்டியது.

மேலும் குறிப்பாக, மருத்துவர் ஷாபிக்கு எதிராக நிறுவனமயமாக்கப்பட்ட கூட்டுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.
மேற்படி மூன்று அரசியல் வாதிகளுக்கும் எதிரான ரத்ன தேரரின் தலதா மாளிகையில் அரங்கேற்றப்பட்ட உண்ணாவிரதமானது ஓர் இரத்தவெறியை பெரும்பான்மையிலுள்ள காடையர்களிடம் தூண்டுவதற்கான ஒரு தந்திரோபாயமாகப் பார்க்கப்படுவதில் எவ்வித தவறும் கிடையாது.
முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தூண்டப்பட்ட இந்த தங்கு தடையற்ற பெரும்பான்மைப் பயங்கரவாதம் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற எல்லைக் கோடுகளைக் கடந்து அன்றைய இலங்கை சிவில் சமூகத்தின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டது. எனினும், பேரினவாதிகள் அவற்றைக் கணக்கில் எடுக்கவில்லை என்பதே அன்று வெளிப்படையாகத் தெரிந்த உண்மையாகும். ஒவ்வொரு சராசரி மனிதனும் அடுத்தகணம் என்ன நடக்குமோ என்று பரிதவித்துக்கொண்டிருந்தான்.

இந்தக்கட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தன்னுடைய பயங்கரமான உரைகளால் தூண்டிக்கொண்டிருந்த ஞானசாரவின் தலதா மாளிகை நோக்கிய தரிசனமும் அதனையடுத்து அவர் அரங்கேற்றிய மத்திய மாகாணத்தில் இருந்து மேல்மாகாணம் நோக்கிய பாத யாத்திரையும் முஸ்லிம்களின் மீதான தாக்குதலைத் தொடுக்க காடையர்களைத் துரிதப்படுத்திற்று. இறுதி அழிவுக்கான ஸ_ர் எனும் ஊதுகுழலின் ஒலி இலங்கைச் சமூகத்தின் காதுகளை நோக்கி திருப்பப்பட்டது.

ஆளும் கட்சியின் அதிகாரம் வாய்ந்த அமைச்சர்களாக முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகள் இருந்திட்டபோதிலும் சுனாமிபோல பேரழிவை ஏற்படுத்தும் நோக்குடன் உருவான இந்தப் பிரளயம் கண்டு செய்வதறியாது கையறு நிலையில் அவர்களும் இருந்தனர்.

எனினும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை சிந்திப்பதற்காக, சிதறடிக்கப்பட்டிருந்த முஸ்லிம் தலைமைகள் முதன்முறையாக ஒரே மேசையில் வட்டமிட்டு அமர்ந்தன. முஸ்லிம் கட்சிகளில் மட்டுமன்றி ஆளும் கட்சியின் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இந்த வட்ட மேசையை நோக்கி வேறு வழியின்றி நகர்ந்தனர். இஸ்லாமிய பரிபாஷையில் மஷ_றா எனப்படும் ஆலோசனையில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு எவ்வித தனிப்பட்ட அரசியல் பின்னணிகளும் இன்றி அபிப்பிராயங்களைக் கூறினர்.

இறுதியில் இந்தப் பிரளயத்தை நிறுத்த வேறு வழியின்றி ஆளும் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் அமைச்சு, இரஜாங்க  மற்றும் பிரதியமைச்சுப் பதவிகளை உடனடியாக இராஜினாமா செய்வது என்ற ரவூப் ஹக்கீமின்  முன்மொழிவுக்கு ஒருசேர அனைவரும் ஆமீன் கூறினர். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுத்தீன் மட்டுன்றி கபீர் ஹாஷீம், ஹலீம் உள்ளிட்ட அமைச்சர்களும் ஏனைய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் அத்தனைபேரும் இராஜினாமாச்செய்து கடிதங்களைப் பிரதமருக்கு அனுப்பி முஸ்லிம்கள் நெஞ்சங்களிலும் இலங்கையில் பிரளயத்தை விரும்பாத சிவில் சமூகத்தின் நெஞ்சகளிலும் பாலை வார்த்தனர். ஒற்றுமைப்படாத சமூகம் என்று முகத்தின் மீது காறித் துப்பப்பட்ட சமூகம் முதல் முறையாக தங்கள் ஒற்றுமையின் தக்பீர் முழக்கத்தை இலங்கையின் எட்டுத் திசையிலும் முழங்கிற்று.

இந்த இராஜினாமா என்ற அதிசயத்தினால் இலங்கையின் சமூக மற்றும் அரசியல் இயங்கியலின் சுழற்சி திடீரென ஸ்தம்பிதமானது. தாக்குதலுக்குத் தயாரான கிரனைட்களும் பெற்றோல் கலன்களும் துப்பாக்கிகளும் அமைதிப்படுத்தப்பட்டன. இந்த அதிர்ச்சி வைத்தியம் பேரினவாதிகளின் காடையர்கள் பின்வாங்கிச் செல்வதற்கான உத்தரவுகளைப் பறக்க வைத்தன.

அத்துரலிய ரத்தின தேரரின் உண்ணாவிரதம் குளிர்பான இஃப்தாறுடன் நிறைவடைந்தது. ஞானசாரவின் ஏ-2 வீதியின் பாதயாத்திரை பைபிள் மலைச்சாரலை அண்மிக்கும் முன்னரேயே பின்வாங்கப்பட்டது. மத்திய மலையகத்தில் தாக்குதலுக்குத் தயார்நிலையில் வெகுண்டெழுந்த கும்பல் வேறு வழியின்றி கலைந்து சென்றது. பிபிஸி, சீஎன்என், அல்ஜஸீரா போன்றனவற்றின் அசையும் கெமறாக்கள் ஒளியிழந்து ஒழித்துக் கொண்டன. முஸ்லிம்கள் மட்டுமன்றி எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த சராசரி மக்கள் மூச்சை விட்டனர் சுயாதீனமாக!

இருட்டிய மழை தூறவில்லை, வெட்டிய மின்னல் பயங்கர இடியாக விழவில்லை, மக்களுக்கு மீண்டும் உயிர் வந்தது. ஆனால், ஊடகப் பயங்கரவாதம் வேறு வழியில் தனது தாக்குதலை முகாந்திரப்படுத்தியது. அதில் பிரதானமானது மருத்துவர் ஷாபியை நோக்கி அவரது வாண்மை சகாக்களின் உதவியுடன் ஏவப்பட்ட பன்முனைத் தாக்குதலாகும்.

அம்பாறைக் கலவரம் 2018இல் நிகழக் காரணம் கொத்துரொட்டியில் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டிருந்தது என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பை வெட்கமின்றி அவர்களால் வெளியிடப்பட்டது. அதனைப்போலவே மகப்பேற்று மருத்துவ சத்திர சிகிச்சை நிபுணரான ஷாபி சிங்கள மாதர் சமூகத்தின் கருப்பைகளை இரகசியமாக அகற்றி ஓர் அமைதியான இனவாத வன்முறையில் ஈடுபடுகின்றார் என்று கிளப்பப்பட்ட வதந்தியும் அதனால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுமாகும். இது மட்டுமன்றி மென்மேலும் ஏராளமான வதந்திகள் எழுப்பபட்டன. தனியார் ஊடகங்கள் இதனைத் திட்டமிட்டு இனவாத அரசியலாக்கின. சட்டமும் ஒழுங்கும் கூட ஒருவகையான ஓர வஞ்சனையுடனேயே காரியங்களை நகர்த்திச் சென்றன. இதற்கு உதாரணமாக வகைதொகையற்ற கைதுகளைக் குறிப்பிடலாம். முஸ்லிம் இளைஞர்கள் மூர்க்கமாகக் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முஸ்லிம் பெண்களும் அடக்கம். நீதி மன்றங்களில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கான பிணை கூட மாதக்கணக்காக ஒத்தி வைக்கப்பட்டன.

தவிர முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாரிய வியாபார நிலையங்கள் மின்னொழுக்கு காரணமாக தீயிலே வெந்தன. நாடெங்கிலும் 500க்கு மேற்றபட்ட சிறிய நடுத்தர முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஹோட்டல்கள் வன்முறையாளர்கள் தொடுத்த பயமுறுத்தலினால் இழுத்து மூடப்பட்டுள்ளன. ஒரு உத்தியோகப் பற்றற்ற பொருளாதாரத்தடையை முஸ்லிம்களின் வர்த்தக ஸ்தாபனங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளது.

இந்திய சமயங்களை வேற்றுமை களைந்து ஒருமுகப்படுத்தியும் கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய சமயங்களை விதேசிய சமயங்களாக்கியும் ஒருவகை நிறுவனமயப்படுத்தப்பட்ட பிரசாரம் அமைதியான முறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதற்காக சில தீவிரவாத சமயத் தலைவர்களால் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்யப்படுவதை அவதானிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் எவ்வித புலனாய்வு அறிக்கைகளும் அவசியமில்லை.

நீர்கொழும்புப் பிரதேசத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல் வகை தொகையற்று நடந்து முடிந்தன. தாக்கப்பட்ட பிரதேசங்களின் பெண்மணிகளும் குழந்தைகளும் நள்ளிரவு வேளைகளில் காடுகளில் ஒழித்திருந்தனர். அது ரமழான் மாதமானபடியால் நோன்பு நோற்க முடியாதும் பள்ளிகளுக்கு தொழுகைக்காகச் செல்லமுடியாதும் அவர்கள் அவதிப்பட்டனர். இவற்றையெல்லாம் அவ்வப்பிரதேசங்களின் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் வட்டாரங்களுக்கான கட்சித் தலைவர்களும் அவற்றின் அடியாட்களுமே செய்து முடித்ததாக தாக்கப்பட்ட பிரதேச மக்கள் சாட்சி கூறினர். அதுமாத்திரமன்றி, தாக்கப்பட்ட மக்களே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் பிணை வழங்கப்படாது நீண்ட நாட்கள் அடைத்து வைக்கப்பட்டனர். இவையெல்லாம் அவ்வப்பிரதேச அரசியல் கட்சிகளினதும் மத ஸ்தாபனங்களினதும் வழிகாட்டலுடன் நடந்தேறின என்பதற்த யாரும் விஞ்ஞான பூர்வமான ஆதாரம் கேட்கத் தேவையில்லை.

மேலும், ஒரு கலாசார வன்முறையும் முடுக்கி விடப்பட்டமை மிக வெளிப்படையாகத் தெரிந்தது. இதற்கு சட்டமும் ஒழுங்கும் மானசீகமான ஒத்துழைப்பை வழங்குகின்றதா என சந்தேகிக்கும்படியான நிலைமையே எங்கும் தெரிந்தன. இதற்கு உதாரணமாக தனது மேலங்கியில் கப்பலின் சுக்கானைப் பொறித்திருந்த ஆடை அணிந்த பெண் தர்மச்சக்கரத்தை அவமரியாதைப்படுத்தியாதக் கூறி பொலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தாள். தர்மச்சக்கரத்தை சுக்கானிலிருந்து வேறுபடுத்தி விளக்கம்பெற நீதிமன்றத்துக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. இந்த செயற்கையான தேவைப்பாட்டினால் அப்பாவிப் பெண்ணுக்கு பிணை வழங்குவதை நீதி மன்றம் தாமதித்துக்கொண்டே வந்தது. இத்தகைய நிறுவனப்பமயப்படுத்தப்பட்ட மற்றும் பொதுவான வன்முறைகள் அனைத்தும் ஒரு மெல்லிய கட்புலனாகா மின் இழையினால் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதான ஒரு புலக்காட்சியை மக்கள் அவதானித்தனர். அது பாதிக்கப்பட்ட மக்களிடையே குறிப்பிட்ட அரசியல் கட்சி தொடர்பான வன்மத்தையும் அரசாங்கம் தொடர்பான வெறுப்பையும் வளர்த்துவிட்டது.

ஏப்ரல் 21 தொடங்கி கடந்த மாதம்வரை கைதுகளும் பிணை மறுப்புக்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஊடகங்களும் பாராளுமன்றமும் இனவாதத்தைக் கக்கிக்கொண்டே இருந்தன. விசேடமாக பொதுஜன பெரமுனவினரின் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் உறுப்பினர்கள் மீது பாராளுமன்றத்துக்கு உள்ளேயே வீராவேசத்துடன் ஒரு தலைப்பட்ச தாக்குதலைத் தொடுத்தனர். போதாதென்று ஐ.தே.க ரத்னதேரோ, சம்பிக்க ரணவக்க போன்றோர்களும் மற்றும் ஜே.வி.பி. உட்பட ஏனைய உறுப்பினர்கள் சிலரும்; கோடீஸ்வரன் மற்றும் வியாழேந்திரன் உள்ளிட்ட சில தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்; கூட முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளாகக் காட்சிப்படுத்துவதில் அக்கறைப்பட்டனர்.
ஆக, முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் பாதையில் செல்லும் பைத்தியக்காரனை ஒழுக்கம் தவறி வளர்க்கப்பட்ட சிறுவர்கள் கல்லாலும் சொல்லாலும் காயப்படுத்தப்படுவதைபோல காயப்படுத்தினர். இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஏராளமான முஸ்லிம் தனவந்தர்கள் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக உயிர்த்த ஞாயிறை அண்மித்த மறுதினங்களில் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தான் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராகத் தயார் என்ற அசந்தர்ப்பவசமான பிரகடனமும் முஸ்லிம்களை அச்சத்தில் ஆழ்த்திற்று.
தேர்தல் ஆணைக்குழுவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரகடனம் வெளியேவந்த கையோடு முஸ்லிம்கள் யாரை ஆதரிப்பது என்ற மிகமுக்கியமான தீர்மானத்தை எடுத்தாகவேண்டிய அழுத்தம் முஸ்லிம்களின் அதிகபட்டச ஆதரவுத் தளத்தை தக்கவைத்துள்ள தலைமைகளின் தோள்மேலே சுமத்தப்பட்டது.

2015இல் அப்போதைய அரசை விட்டு மாற்றும் தீர்மானத்துக்கு மக்கள் அதிரடியாக விரைந்தாலும் முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் அளவுக்கு அதிகமான நிதானத்தைக் கடைப்பிடித்ததாக மக்கள் பேசிக்கொண்டனர். அந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அவர்கள் காட்டிய அதிகபட்ச நிதானம் சமூகத்தில் ஏற்கனவே ஓர் எரிச்சல் உணர்வை அவர்கள் மீது உருவாக்கியிருந்தது. அந்த எரிச்சலின் விழுப்புண் ஆற அவர்களுக்கு கனகாலம் எடுத்தது.

இதனால் பிரதான கட்சிகள் யாரைத் தீர்மானிக்கப்போகின்றன என்கின்ற பரபரப்பு ஏற்பட்டது. பொது ஜன பெரமுன தன்னுடைய வேட்பாளரை முந்திக்கொண்டு அறிக்கையையும் விட்டுவிட்டது. அந்த வேட்பாளர் தொடர்பான முஸ்லிம்களின் மனப்பாங்கு உயிர்த்த ஞாயிற்றின் பின்னர் சற்று விகாரமானதாகவே இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவுடன் வாரப்பாடு கொண்டிருந்தோரும் கூட தற்போதைய வேட்பாளர் தொடர்பான அச்சத்தை அப்போதில் வெளிப்படையாகவே வெளியிட்ட வண்ணம் இருந்தனர். நாட்கள் கடந்துகொண்டே போயின. எனினும், நிறுவன மயப்படுத்தப்பட்ட இனவாத சங்கிலித் தொடரின் அதி முக்கிய புள்ளிகள் பொதுஜன பெரமுனவிலேயே அதிக அளவில் கண்களுக்குத் தெரிந்தனர். அவர்கள் வன்முறை இனவாதத்தின் கோரமுகத்தை அப்படியே வெளிக்காட்டும் பொது பல சேனாவிடம் வெளிப்படையான உறவைப் பேணிக்கொண்டிருந்தனர்.

ஏற்கனவே பொது பல சேனாவின் ஸ்தாபிதத்துடனும் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் ஈடுபாட்டுடனும் நிறைய வதந்திகள் உலா வந்தன. அதிலும் நோர்வே நாட்டின் கடாட்சத்துடன் தலைநகரில் நிர்மாணிக்கப்பட்ட பொது பல சேனாவின் ஆடம்பரமான அலுவலகம் கோதாவின் கையினால் திறக்கப்படுவதற்கான விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
முஸ்லிம்களை எதிரியாகக் கருதும் ஒரு ஸ்தாபனத்தின் செயலக கட்டடத் திறப்பு விழாவுக்கு அப்போதைய ஜனாதிபதியின் தம்பியான பாதுகாப்புச் செயலாளர் பிரசன்னமாவது ஜனாதிபதி மஹிந்த மீது மரியாதை வைத்திருந்த முஸ்லிம்களின் மனதில் கசப்புணர்வை ஏற்படுத்திற்று.

இதனால் அப்போதைய அமைச்சரவையில் இருந்த ரவூப் ஹக்கீம் அவர்களின் மனவருத்தம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு நேரடியாக அவர் மூலமாகவே தெரிவிக்கப்பட்டது. தெரிவிக்கும்போது காதுகொடுத்துக் கேட்ட மஹிந்த பின்னர் தம்பியிடம் தொலைபேசியில் பேசிவிட்டு ஹக்கீம் அவர்களைத் தொடர்பு கொண்டு மிகக்காட்மாக தனது நிர்தாட்சண்ணியமான பதிலைக் கூறி அவரை மனமுடையச் செய்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் மிக உற்சாகமாக அந்த ஆடம்பரக் கட்டடத்தை திறந்து வைத்த செய்திகளைத் தொலைக் காட்சிகள் மகிழ்ச்சியாக ஒலிபரப்பின. இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற முஸ்லிம்களின் மன உணர்வில் வேதனையே தென்பட்டது.

பொதுபல சேனாவின் பிரபல்யமான தோற்றத்துடன் இஸ்லாமோபோபியா என்பது அப்பாவி சிங்கள மக்களின் ஆழ்மனங்களில் விதைக்கப்பட்டாயிற்று. முஸ்லிம்கள் ஒரு சர்வதேச சமூகம் என்றும் அவர்கள் ஐம்பத்தி இரண்டு நாடுகளின் அரசுகளை கொண்டிருப்பவர்கள் என்றும் அவர்கள் மீதான ஒரு போபியாவை பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் நாட்டுப்புற சிங்கள மக்களிடமே விதைத்துவிட்டன. சில பிரபல்யமான ஊடகங்கள் இக்கட்டுக்கதைகளை பயங்கரமாக விதைப்பதில் முன்னின்று செயற்பட்டன. அவை பொது ஜன பெரமுனவின் நேசத்தைப் பெற்றிருந்தமையும் பெரும்பான்மையினருடன் கூடி வாழ்ந்த முஸ்லிம்களால் உணரப்பட்டது.
மேற்படி அமைப்பானது நீண்ட நாட்களாகவே கோதாவை ஜனாதிபதியாக்கும் செயல்திட்டத்தை முடுக்கிவிட்டிருந்தது. அது மட்டுமன்றி பொதுபல சேனாவுக்கும் அது பிரேரித்த வேட்பாளரான கோதாவுக்கும் இடையே இரகசியமான ஓர் ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருப்பதாகவும் அதற்கெதிரான அரசியல் அமைப்புக்கள் சில தகவல்களை கசியவிட்டிருந்தன. அவ்வொப்பந்தத்தில் இஸ்லாமோபோபியா தொடர்பான சரத்துக்களும் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

அதில் முதலாவது முஸ்லிம்களின் அடையாளம் தொடர்பானதாகும். அவர்கள் பிரதானப்படுத்தியது ஒரே தேசிய அடையாளத்தையே சகலரும் கொண்டிருத்தல் வேண்டும். தனித்துவமான அடையாளங்களுக்கு புதிய ஜனாதிபதி எவ்விதமான சலுகைகளையும் வழங்கக்கூடாது. அதில் பிரதானமானது பள்ளிவாசல் தொடர்பான அடையாளங்களாகும். பள்ளிவாசல்களின் நீர்மாணம் தொடர்பான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரல் வேண்டும்.

மேலும், மத்ரஸா அமைப்புக்கள் நிறுத்தப்படல் வேண்டும். மத்ரஸா கல்வி என்ற போர்வையில் தீவிரவாதம் பயிற்றுவிக்கப்படுவதான வதந்தி ஏற்கனவே இலங்கையிலும் இந்தியாவிலும் பரப்பப்பட்டு முடிந்து விட்டது.
அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டம் முடக்கப்படல் வேண்டும். நாட்டின் பொதுச் சட்டத்தலேயே சகலரும் ஆளப்படல் வேண்டும்.

விசேடமாக வட்டியில்லா வங்கிகள் என்ற பெயரில் இஸ்லாமிய வங்கிகளும் பிரதான வங்கிகளின் இஸ்லாமிய அலகுகளும் புற்றீசல்கள்போல் முளைத்துவிட்டன. இவை உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
அபாயா, புர்கா, நிகாப், ஹிஜாப் முதலிய ஒழுக்கவியலோடு தொடர்பான சகல ஆடைகளும் பொது இடங்களில் அணிதல் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்த்திருப்பார்கள் என்பதற்கு அண்மைக்கால வரலாறே சான்றுபகர்கின்றது.

இவற்றைப் பொய்யென் கூறுவது முஸ்லிம் வெகுஜனத்தைப் பொறுத்தவரை முடியாத ஒன்றாகும். ஏனெனில் அவர்களின் அண்மைக்காலப் பட்டறிவு அப்படிப்பட்டதாகும்.
மேற்படி பின்புலத்துடன் அறிமுகமானவர் ஜனாதிபதி வேட்பாளராக வந்தபோது முஸ்லிம் தரப்பானது மகிழ்ச்சியின் சாயலை வெளிக்காட்டவில்லை. இப்போது வெற்றியில் பட்டாசு கொழுத்தும் முஸ்லிம்கள் சிலரும் இதனுள் அடக்கம்.
இதற்கிடையில் பெரும்பான்மை சமூகம் தங்களின் துரோகியாகவும் ஷரீஆ பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகராகவும் கருதிய ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதியை உருவாக்கும் ஜனாதிபதி வேட்பாளராக தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு வட்டக் களரிக்குள் பிரசன்னமாகி ஒரு கூத்தையே அரங்கேற்றி இருந்தர்.

அதனைவிட முஸ்லிம் தலைமைகள் சங்கமித்திருந்த ஐ.தே.க. தன்னுடைய வேட்பாளர் யார் என்பதை வெளியிட முடியாத அளவுக்கு உட்கட்சி தில்லுமுல்லுகளால் அவதிப்பட்டது. கட்சித்தலைமையானது  தானே வேட்பாளர் என்பதில் பிடிவாதமாக இருந்தது.

 ஆனால் ஐ.தே.கவின் தலைமை சர்வதேச அரசியலில் பிரகாசித்தாலும் கூட உள்ளுர் அரசியலில் கோமாளியாக்கப்பட்டிருந்தது. அத்துடன் நடந்து முடிந்த வன்முறைகளில் தீ பறக்கும் அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை என்ற நியாயமான மனக்குறை அவர் மீது முஸ்லிம்களுக்கு உண்டு. அதிலும் திகன கலவரம் நடைபெற்ற காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அவரின் கைக்குள்ளேயே அடங்கியிருந்தது. ஜனாதிபதி அதனை அப்போது பறித்து எடுத்திருக்கவில்லை.
ஐ.தே.க. தலைமையின் அறிவுப் பின்புலனும் அவருக்கிருந்த காய்நகர்த்தும் சாணக்கியமும் எந்தப் பிரச்சினையையும் அமைதியாகக் கையாண்டு இறுதி வெற்றியை சாதகமாக்கும் சாதுரியமும் பேரினவாத மனோபாவமின்மையும் சிங்கள வெகுஜனத்திடம் கணிசமான அளவுக்குச் சென்று சேர்க்கப்படவில்லை. சிங்கள வெகுஜனம் அவரை ஒரு பிரபுத்துவ அரசியல் வாதியாகக் கண்டமையினால் ஒரு வெஜன உட்பகை அவரை நோக்கி இருந்தது. ஆனால், கடந்த பல வருடங்களாக ஐ.தே.க உட்கட்சி மோதல்களின் போது சஜித் பிரேமதாச ஒரு வெகுஜன தலைமையாக அந்தக் கட்சியினால் இனங்காணப்பட்டிருந்தார். அதனால் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் கூடாது என்ற மறுபக்க பிடிவாதம் தவிர்க்க முடியாத அழுத்தமாக மாறிற்று. இந்த நிலையில் சஜித் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார்.
சிலர் கூறுவதுபோல பிராந்திய விஸ்தரிப்பு வாதிகளின் ஆதங்கத்தை முஸ்லிம் தலைமைகள் நுண்ணுனர்ந்து கொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு மேட்டுக்குடி முஸ்லிம்களிடையே தற்போதைக்கு மேலோங்கி வருகின்றது.

ஆனால் வட கிழக்கு மாகாண சபையின் முதல்வராக இருந்தபோது சுயாதீனமான ஈழத்தைப் பிரகடனம் செய்து விட்டு பின்னர் வட இந்தியாவில் அஞ்ஞாதவாசம் இருந்தவரும் நல்லாட்சியின்போது நாட்டில் செற்றிலான பின்னரும் ஒரு மூலையில் ஒதுங்கிப்போய் இருந்தவருமான  வரதராஜப் பெருமாளின் மீள் அரசியல் பிரவேசமும் அவரின் மாமிசப்பகை எதிராளியான டக்ளஸ் தேவானந்தா சங்கமித்துள்ள அதே இடத்திலேயே அவர் சென்று சங்கமித்துள்ளமையையும் அனிச்சையாக ஏற்பட்ட அரசியல் சுத்துமாத்து அல்ல என்பது ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைமைகளால் முகர்ந்தறிய முடியாத ஒன்றல்ல.

ஆனால் பெரும்பான்மை மக்களிடம் ஐ.தே.க நிலையான சேமிப்பாக வைத்திருந்த 35 வீதமான வாக்குகளும் அதற்குப் பதில் சொல்லும் என்றே பலரும் கணித்தனர். 16.11.2019 அன்று பி.ப 4 முதல் 5 மணி வரை ஏற்பட்ட திடீர் வாக்களிப்பு வீத அதிகரிப்பு நாட்டில் ஒரு மௌனப் புரட்சி ஏற்பட வழிவகுத்துள்ளமையின் அறிகுறிகளே. அவை நிதானமாக ஆராயப்பட வேண்டும். ஆனால், அந்த நிதானம் தற்போது யாருக்கும் இல்லை, தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் உட்பட.

மேலே விபரிக்கப்பட்ட இஸ்லாமோபோபியாவும் அதன் மூலமாக முஸ்லிம்களைக் கருவறுக்கக் கங்கணங்கட்டியோரும் பெரும்பான்மையாக சங்கமித்த பொஜன பெரமுனவின் வேட்பாளரையா அல்லது இத்தகைய தன்மைகள் குறைந்த அளவில் இணைந்திருக்கின்ற ஒரு தூய பௌத்தரான சஜித்தையா என்பதில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் வெகுஜனத்துக்கு தெரிந்த ஒரே பதில் சஜிதேதான்; என்பதைக் கண்டுகொள்ள முஸ்லிம் தலைமைகளுக்கு ஒரு பூதக்கண்ணாடி அவசியப்படவில்லை. அவர்கள் தங்கள் அனுபவத்தாலும் பட்டறிவாலும் உந்தப்பட்டு சஜித் சிங்கள மக்களின் 35 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளையாவது பெறின் சிறுபான்மையினரை ஒற்றுமைப்படுத்துவதன்மூலம் சஜித்தை வெற்றிபெற வைக்கலாம் என கணக்கிட்டனர்.
இதனைத்தவிர வேறு தெரிவை அவர்கள் மேற்கொண்டிருப்பின் எதிர்காலத்தில் கட்புலனாகவோ அல்லது அல்லாமலோ நடைபெற எதிர்பார்க்கப்படும் இஸ்லாமோபோபியாவின் எதிர் விளைவுகளுக்கு இவர்கள் துணைபுரிந்ததான வரலாறே எழுதப்படும்.

ஞானசாரதேரரோ தன்னுடைய கடையை இழுத்து மூடியதாக விட்டுள்ள அறிக்கை அவர் சர்வசமய ஆர்வலராக மாறிவிட்டார் என்பதற்கான சமிக்ஞையாக எடுத்துக்கொள்வது நமது முட்டாள்தனமே. அவர் நினைக்கின்றார் தன்னுடைய போராட்டமும் அழுத்தமும் இன்றியே தான் எதிர்பார்த்த அனைத்தும் நடந்து முடியும் என்று.
இனி எதிர்காலத்தில் கடந்த காலங்களில் நம் கண் முன்னே நிகழ்ந்த பாரிய அசம்பாவிதங்கள்  நடந்துவிடமாட்டாது என நாம் பூரணமாக நம்புவோம். பல தமிழ்ப் படங்களின் இறுதிக் காட்சிபோல இனி சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு யாவும் சுபமே காரியமாகுக எனப் பிரார்த்திப்போம்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.